எலிவளை ஆனாலும் தனி வளை என்பது மக்கள் வழக்கும். தனக்கென்று சொந்தமாகக் குடியிருக்க ஓர் இடம் வேண்டும் என்பதைக் குறிக்கும் வாக்கியமே அது. இந்தத் தேசத்தில் பெரும்பாலானவர்களின் கனவு தனக்கென்று ஒரு சொந்த வீடு வேண்டும் என்பதுதான். அப்படிப்பட்ட சொந்த வீட்டுக்கனவை நனவாக்கித் தரும் ஆலயங்கள் பல தமிழகத்தில் உண்டு. அப்படி ஓர் ஆலயம்தான் ஸ்ரீபூமிநாதர் கோயில். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கிராமம் செவலூர். இங்கே அருள்மிகு ஆரணவல்லி சமேதராக கோயில் கொண்டிருக்கிறார் பூமிநாதர். புதுக்கோட்டை தேவஸ்தானத்தின் நிர்வாகத்தில் உள்ள இந்தக் கோயில், பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாகவும் திகழ்கிறது. செவலூர் ஸ்ரீபூமிநாதர் கோயில் நிலமகள் இத்தலத்தில் ஈசனை வழிபட்டு மக்களின் பாரத்தைத் தாங்கும் வலிமையைப் பெற்றாள் என்கிறது தலபுராணம். புராண காலக் கோயில் இது என்றாலும் கல்வெட்டு ஆதாரங்களின் படி 12-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் இக்கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளனர். கருவறையில் ருத்ராட்ச பந்தலின் கீழ், 16 பட்டைகளுடன் கூடிய ஷோடச லிங்கத் திருமேனியராக அருள்கிறார் பூமிநாதர். இவரின் லிங்க பாணத்தில் அபிஷேகிக்கப் படும் பால், பன்னீர் போன்ற திரவியங்கள் ஆவுடையாருக்கு நடுவே பூமிக்குள் செல்லும் படி இந்த லிங்கத் திருமேனி அமைந்துள்ளதாம். அதாவது, சிவனாரின் அபிஷேகத் தீர்த்தம் பூமாதேவிக்கும் செல்வதாக ஐதிகம். அம்பாள் ஆரணவல்லி தாமரை ஏந்திய திருக்கரங்களோடு அருள்பாலிக்கிறாள். அன்னையைத் தரிசனம் செய்தாலே மனம் குளுமையடையும். கவலைகள் விலகும். மேலும் தாமரையைத் திருக்கரங்களில் ஏந்தியிருப்பதால் மகாலட்சுமியாகவும் இங்கே தாய் ஆரணிவல்லி அருள்கிறாள் என்பதாக ஐதிகம். எனவேதான் பூமிநாதரையும் ஆரணவல்லி அம்பாளையும் வழிபட்டுச் சென்றால், வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும், நாம் தொட்டது துலங்கும் என்கிறார்கள். செவலூர் ஸ்ரீபூமிநாதர் கோயில் சுவாமி - அம்பாள் சந்நிதிகளுக்கு நடுவில் வள்ளி-தெய்வானை தேவியருடன் சுப்ரமணியர் சந்நிதி கொண்டிருப்பதால் இதை சோமாஸ்கந்தத்தலம் என்றும் சொல்கிறார்கள். பைரவருக்கும் இங்கே தனிச் சந்நிதி உள்ளது. தேய்பிறை அஷ்டமியில் இந்தப் பைரவருக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. பூமகள் வழிபட்ட தலம் என்பதால், வாஸ்துவுக்குரிய கோயிலாகவும், பூமி தோஷங்களை நிவர்த்தி செய்யும் தலமாகவும் திகழ்கிறது இந்த ஆலயம். ஒருமுறை இந்தத் தலத்துக்குச் சென்று பூமிநாதரை வழிபட்டால், விரைவில் சொந்த வீடு அமையும்; நிலபுலன்கள் வாங்கலாம் என்பது நம்பிக்கை. தஞ்சை மாவட்டம் நல்லூர் கல்யாண சுந்தரர் திருக்கோயில்: திருமணம் கைகூடும்; தோஷங்கள் அனைத்தும் தீரும்! அதேபோல் வீடு, மனை ஆகியவற்றில் சட்டச் சிக்கல்கள், வழக்குப் பிரச்னைகளால் தவிக்கும் அன்பர்கள் இங்கு வந்து பூமிநாதரை வழிபட, அந்தப் பிரச்னைகள் படிப்படியாக விலகும். ரியல் எஸ்டேட் மற்றும் நிலம் தொடர்பான தொழில் செய்பவர்கள், தங்களின் தொழில் சிறக்கவும் லாபம் பெருகவும் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். ஒவ்வொரு வாஸ்து நாளன்றும் இந்தக் கோயிலில் விசேஷ ஹோமங்கள் நடத்தப் படுகின்றன. அன்றைய தினம் சுவாமிக்கு 11 விதமான அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும் நடைபெறும். வீடு மற்றும் வியாபார ஸ்தலங்களில் வாஸ்து குறைபாடுகள் உள்ளோர், இந்த வழிபாட்டு வைபவங்களில் கலந்துகொண்டு, அருள்மிகு பூமிநாதரை மனமுருகப் பிரார்த்தித்து வழிபட்டுச் சென்றால், தோஷம் - குறைகள் நீங்கும் என்பது ஐதீகம். செவலூர் ஸ்ரீபூமிநாதர் கோயில் `சொந்த வீடு’ கனவில் இருக்கும் அன்பர்கள், நிலம்-மனை சார்ந்த பிரச்னைகள் விலக வேண்டும் என்று விரும்பும் பக்தர்கள், ஒரு வாஸ்து நாளில் இக்கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். அந்த நாளில் செல்ல இயலவில்லை எனில், செவ்வாய்க்கிழமை அல்லது உங்களின் ஜன்ம நட்சத்திர நாளில் சென்று வழிபடலாம். பூமகள் வழிபட்ட பூமிநாதரின் திருவருளால் பிரச்னைகள் நீங்கும்; உங்களின் சொந்த வீடு கனவு நனவாகும்! வாஸ்து நாளன்று இந்தக் கோயிலில் பூமிநாதரின் சந்நிதியில் வைத்துப் பூஜிக்கப்பட்ட செங்கற்களைப் பிரசாதமாகத் தருகின்றனர். இதற்குக் காணிக்கைக் கட்டணம் உண்டு. பூஜித்துத் தரப்படும் செங்கல்லை வீட்டில் பூஜையறையில் வைத்து, பூமிநாதரைத் தியானித்து வழிபட்டு வந்தால் விரைவில் சொந்த வீடு-மனை வாங்கும் யோகம் கைகூடுமாம். இப்படி வழிபட்டு, பிரார்த்தனைகள் பலித்தவர்கள் மீண்டும் வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தி வழிபடுகிறார்கள். எப்படிச் செல்வது?: புதுக்கோட்டையிலிருந்து நமணசமுத்திரம் மார்க்கத்தில் பொன்னமராவதி செல்லும் வழியில், சுமார் 14 கி.மீ. தொலைவில் செவலூர் பிரிவு வரும். அங்கிருந்து பிரியும் சாலையில் சுமார் 2 கி.மீ. தூரம் பயணித்தால் கோயிலை அடையலாம். செவலூர் பிரிவு பகுதியிலிருந்து ஆட்டோ வசதி உண்டு. தினமும் காலை 9 முதல் மதியம் 1 மணி வரையும்; வாஸ்து தினங்களில் காலை 7 முதல் மாலை 6 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும். கன்னியாகுமரி மாவட்டம், திருப்பன்றிக்கோடு ஸ்ரீபக்தவத்சலேஸ்வரர்: தோல் வியாதி நீக்கும் வில்வ பிரசாதம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/spiritual/temples/pudhukottai-sevalur-bhoominathar-temple




