சென்னை, மீண்டும் ஒரு வெள்ள பேரழிவை சென்னை தாங்காது என்பதால் மழைநீர் வடிகால் பணிகளை போர்க்கால வேகத்தில் முடிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். சென்னையில் வெள்ள பாதிப்புகள் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், சென்னையில் மழைநீர் வடிகால்களை அமைக்கும் பணிகளும், அமைக்கப்பட்ட வடிகால்களைத் தூர்வாரும் பணிகளும் இன்னும் முடிக்கப்படாதது கவலையளிக்கிறது. சென்னையில் கடந்த ஆட்சியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளின் நினைவுகள் மக்களின் மனதிலிருந்து இன்னும் அகலாத நிலையில், மீண்டும் அதேபோன்ற பேரழிவு ஏற்படாமல் தடுக்க தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை மாநகரில் எப்போதெல்லாம் இயல்பான அளவுக்கும் கூடுதலாக மழை பெய்கிறதோ, அப்போதெல்லாம் மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளம் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. சென்னையில் வெள்ள நீர் தேங்குவதைத் தடுக்க, திருப்புகழ் குழு பரிந்துரைப்படி சென்னை மாநகரம் முழுவதும் 1,093 கி.மீ. நீளத்திற்கு வெள்ளநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் 2022-ம் ஆண்டில் தொடங்கப்பட்டன. ஆனால், நான்காண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் இதுவரை 1,045 கி.மீ. தொலைவுக்கு பணிகள் நிறைவடைந்துள்ளன. மொத்தப்பணிகளில் இன்னும் 5 சதவீத பணிகள் மட்டும் தான் பாக்கியுள்ளன என்றாலும் அப்பணிகள் மிகவும் முக்கியமானவை என்பதால் சென்னையில் பேரழிவு ஏற்பட வழிவகுக்கக் கூடியவை. பாதியில் நிற்கும் மழைநீர் வடிகால் பணிகள் சென்னையின் முதன்மைச் சாலைகளான அண்ணாநகர் இரண்டாம் நிழற்சாலையில் திருமங்கலம் முதல் ரவுண்டானா வரையிலான பகுதிகள், ஆற்காடு சாலையில் கோடம்பாக்கம் முதல் வளசரவாக்கம் வரையிலான பகுதிகள், அசோக்நகர் மற்றும் கே.கே.நகரில் பி.டி. ராஜன் சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில், அவற்றுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் அபாயகரமாக காட்சியளிக்கின்றன. ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், திருவொற்றியூர், மணலி, மாதவரம், திரு.வி.க. நகர் ஆகிய இடங்களிலும் மழைநீர் வடிகால் பணிகள் பாதியில் நிற்கின்றன. 68 இடங்களில் இணைப்புப் பணிகள் மேற்கொள்ளவில்லை ஒட்டுமொத்தமாக இன்னும் 48 கி.மீ. தொலைவுக்கு தான் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஏற்கனவே அமைக்கப்பட்ட பகுதிகளில் மொத்தம் 105 இடங்களில் ஒரு கால்வாய்க்கும், இன்னொரு கால்வாய்க்கும் இணைப்பை ஏற்படுத்தும் பணி முடிக்கப்படாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் 37 இடங்களில் இணைப்புப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதை விட இரு மடங்கு, அதாவது 68 இடங்களில் இணைப்புப் பணிகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. 1,682 கி.மீ. நீளத்திற்கான மழைநீர் வடிகால்கள் புதிதாக அமைக்கப்படுபவை, ஏற்கனவே அமைக்கப்பட்டவை என மொத்தம் 1,682 கி.மீ. நீளத்திற்கான மழைநீர் வடிகால்களில், மழைநீர் இறங்கும் போது, அத்துடன் வரும் சகதிகளை வடிகட்டுவதற்காக வடிகுழிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இன்னும் 41 சதவீத குழிகளில் தூர் அகற்றும் பணிகளை இன்னும் மேற்கொள்ளவில்லை. அதனால், அந்த இடங்களில், அந்த வடிகுழிகளின் வாயிலாக மழை நீர் வடிகால்களில் இறங்காமல் தேங்கக்கூடும். அதேபோல், இணைப்பு ஏற்படுத்தப்படாத பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளும் சென்னையில் பெருமளவில் வெள்ளமும், அதனால் பேரழிவும் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். சூப்பர் எல்நினோ தாக்கம் சூப்பர் எல்நினோ தாக்கம் காரணமாக தமிழ்நாட்டில் நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை அளவுக்கு அதிகமாக பெய்யும் என்றும், அதனால் தமிழ்நாட்டில் பல இடங்களில் வெள்ள ஆபத்து இருப்பதாகவும் எல்நினோ பாதிப்புகளை சமாளிப்பது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட குழு அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. கடந்தகால மழை அளவுகளும் அதை உறுதி செய்வதாகவே உள்ளன. எல்நினோ தாக்கல் நிலவிய 1997-ம் ஆண்டில் 52 விழுக்காடும், 2005-ம் ஆண்டில் 79 விழுக்காடும் இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளது. 2015-ம் ஆண்டில் இயல்பை விட 347 விழுக்காட்டுக்கும் கூடுதலான மழை பெய்திருக்கிறது. அந்த ஆண்டில் இயல்பாக 408.4 மி.மீ மழை பெய்ய வேண்டும். ஆனால், நவம்பர் 1-ம் நாள் முதல் டிசம்பர் 5-ம் நாள் வரையிலான 35 நாள்களில் மட்டும் 1,416.8 மி.மீ. மழை பெய்திருக்கிறது. அண்மைக்கால எல்நினோ ஆண்டான 2023-ம் ஆண்டிலும் கடுமையான மழை பெய்து சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டது. அந்த ஆண்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் 1 முதல் 4-ம் தேதி வரையிலான 4 நாள்களில் மட்டும் சென்னையில் 45.82 செ.மீ. மழை பெய்து பெரு வெள்ளம் ஏற்பட்டது. இவற்றின் அடிப்படையில் நடப்பாண்டும் சென்னையில் இயல்பை விட அதிகமான மழை பெய்தால், அதனால் ஏற்படும் பேரழிவை சென்னை மாநகர மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அந்தப் பேரழிவு தவிர்க்கப்பட வேண்டும். சென்னை மாநகரில் பெருமழையால் பேரழிவு சென்னை மாநகரம் கடந்த காலங்களில் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெருமழை ஏற்படுத்தும் வெள்ளத்தால் பேரழிவை சந்தித்து வருகிறது. அதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் பேரிடர் மேலாண்மை வல்லுனர் திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கையும் பெறப்பட்டது. ஆனால், அந்த அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு 42 மாதங்கள் ஆகியும் இன்று வரை பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்படவில்லை; அதன் பரிந்துரைகளும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. சென்னை மாநகரம் கடந்த காலங்களில் எதிர்கொண்ட வெள்ள பாதிப்புகளில் இருந்தும் அரசும், சென்னை மாநகராட்சியும் பாடம் கற்றுக் கொண்டிருந்தால் சென்னையில் வெள்ளத்தடுப்பு பணிகளை எப்போதோ முடித்திருக்க வேண்டும்; ஆனால், இன்னும் முடிக்கப்படாமல் பேரழிவை வரவேற்றுக் கொண்டிருக்கிறது. போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால் பணிகள் சென்னையில் நடப்பாண்டில் வெள்ளமும், அதனால் பேரழிவும் ஏற்படுவதைத் தடுக்க புதிதாக மழைநீர் வடிகால்களை அமைக்கும் பணிகள், மழைநீர் வடிகால்களுக்கு இடையே இணைப்புகளை ஏற்படுத்தும் பணிகள், வடிகுழிகளை தூர்வாரும் பணிகள் ஆகியவற்றை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். சாலைகளில் ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ள பள்ளங்களையும் உடனடியாக மூடி சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/rainwater-drainage-work-in-chennai-should-be-completed-at-wartime-speed-anbumani-insists




