சென்னை, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். சிறப்புத் தீவிரத் திருத்தம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ‘சிறப்புத் தீவிரத் திருத்தம்’ (SIR) நடவடிக்கைகளின்போது நடைபெற்றவை குறித்து நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மூன்று தேர்தல் ஆணையர்களில் இருவர், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் கடந்த 10 மாதங்களில் தேர்தல் ஆணையம் எடுத்த முடிவுகள் தொடர்பாக 14 முறை முறையான ஆட்சேபனைகளைப் பதிவு செய்துள்ளனர் என அந்நாளிதழ் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நிலைப்பாட்டுக்கு மாறாகவும், சட்டவிரோதமாகவும் செயல்பட்டு தேர்தல் ஜனநாயகத்தையே சீர்குலைத்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், தங்களது அறிவு அல்லது ஒப்புதல் இல்லாமலேயே முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. 13 கோடி வாக்காளர்கள் பாதிப்பு இந்த உள்மோதலின் மையமாக 13 கோடி வாக்காளர்களின் பெயர்களைப் பாதிக்கும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) உள்ளது. புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான படிவம் 6-ல் “அங்கீகாரமற்ற, சட்டவிரோத மாற்றங்கள்” செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். மேலும், தகவல் தொழில்நுட்பப் பிரிவுகள் மூலம் வாக்காளர் பட்டியல் தரவுத்தளம் படிப்படியாக மையப்படுத்தப்படுவது குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மையப்படுத்தப்பட்ட மென்பொருள், கள அளவில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர்களின் (ERO) முடிவுகளை மீறி செயல்படுவதால், தகுதியுள்ள வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவது தடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. டிஜிட்டல் அமைப்புகளை இவ்வாறு மையப்படுத்துவது, தேர்தல் முறைகேடுகளைத் தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் பாரம்பரியமாகக் கொண்டிருந்த பரவலாக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பை வலுவிழக்கச் செய்யும். சட்டப்பூர்வ அதிகாரம் பெற்ற அலுவலர்களின் அணுகலைக் கட்டுப்படுத்த தகவல் தொழில்நுட்பத் துறை தலைமை இயக்குநருக்கு சட்டரீதியான அதிகாரம் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கவலைக்குரியது கோவாவில் ஏற்பட்ட மென்பொருள் பிரச்சினைகளால், உச்சநீதிமன்ற உத்தரவுகள் இருந்தபோதிலும், வாக்களிக்கத் தகுதியுடைய 97 பேர் வாக்களிக்கும் உரிமையை இழந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 2023ஆம் ஆண்டின் சட்டம், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஒருமித்த முடிவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் உள்மோதல் அதன் அரசியலமைப்புச் செயல்பாடு குறித்த தீவிரமான கவலைகளை ஏற்படுத்துகிறது. இந்த ஆட்சேபனைகளின் நகல்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் மட்டுமே வெளிப்பட்ட நிலையில், தற்போதைய சூழலில் தேர்தல் ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களே முடிவெடுக்கும் செயல்முறையிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது மிகவும் கவலைக்குரியது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, தேர்தல் ஆணையம் மேற்கொண்ட SIR நடவடிக்கைகள் தேர்தல் ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டிருப்பது தெளிவாகிறது. SIR நடவடிக்கையின் அடிப்படையில் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது. அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட தேர்தல்களும் சட்டவிரோதமானவையே என அர்விந்த் கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் கோருவதில் நியாயம் உள்ளது. பதவி விலக வேண்டும் எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தாமாக முன்வந்து உடனடியாகப் பதவி விலக வேண்டும். இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து SIR நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் உயிர்நாடியாக இருப்பது வாக்குரிமையும் தேர்தலும்தான். மக்களின் வாக்குரிமையையும் தேர்தல் ஜனநாயகத்தையும் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டுள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-election-commissioner-gyanesh-kumar-must-resign-thirumavalavan




