திருத்தணி, திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆடிக்கிருத்திகை முருகப் பெருமானின் 5-ம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் கடந்த 4-ந்தேதி ஆடி அஸ்வினியுடன் ஆடிக்கிருத்திகை விழா வெகு விமரிசையாக தொடங்கியது. முக்கிய விழாவான ஆடிக்கிருத்திகை திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருத்தணி மலைக்கோவிலில் குவிந்து முருகப்பெருமானை வழிபட்டனர். அதிகாலை முதலே பக்தர்கள் மலையடிவாரத்தில் உள்ள நல்லாங்குளம் மற்றும் சரவணப்பொய்கை குளங்களில் புனித நீராடி, பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மலர் காவடி, மயில் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை சுமந்தும், அலகு குத்தியும் “அரோகரா” முழக்கம் விண்ணைப் பிளக்க படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். தெப்பத் திருவிழா ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து தங்கக் கவசம் மற்றும் பச்சைக்கல் பதித்த வைரமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மாலையில் நடைபெற்ற தெப்பத் திருவிழா முக்கிய நிகழ்வாக அமைந்தது. மலைக்கோவிலில் இருந்து உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை சமேதராக தேர் வீதியில் வலம் வந்து, பின்னர் மலையடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கினார். ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை 2 நாட்கள் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/devotional/aadi-krithigai-festival-celebrated-at-tiruttani-murugan-temple




