புதுடெல்லி பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் நாட்டு முன்னேற்றத்திற்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அவர் பேசும்போது, இன்றைய நாள் வரலாற்று சிறப்பு மிக்க நாள். விடுதலைக்காக லட்சக்கணக்கானோர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். இன்று நாம் 80-வது சுதந்திர தினத்தை கொண்டாடி கொண்டிருக்கிறோம். செங்கோட்டையில் முதல்முறையாக வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை கொண்டாடுகிறோம். செங்கோட்டையில் முதல்முறையாக வந்தே மாதரம் பாடப்படுகிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்து உள்ளார். வந்தே மாதரம் பாடல் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது என்றார். தொடர்ந்து அவர் பேசும்போது, இளைஞர் முன்னேற்றம், தொழில்நுட்பம், கல்வி, விளையாட்டு, குடிமக்கள் பாதுகாப்பு, குறைக்கடத்திகள் மற்றும் அணுசக்தி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் முக்கிய முயற்சிகள் தொடர்பான 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். ஏ.ஐ. தொழில்நுட்பம் நடப்பு ஆண்டின் பிப்ரவரியில் இந்தியாவில் ஏ.ஐ. உச்சி மாநாடு நடந்தது. இதில், பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள், தொழிலதிபர்கள், தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, சமீபத்தில் இந்தியாவில் ஏ.ஐ. உச்சி மாநாடு நடந்தது. செங்கோட்டையில், நாட்டின் இளைஞர்களுக்கு நான் அறிவிப்பு ஒன்றை வெளியிட விரும்புகிறேன். 1 கோடி இளைஞர்களுக்கு ஏ.ஐ. திறன் பயிற்சியை நாங்கள் வழங்குவோம். அதனால், நம் தேசத்தின் இளைஞர்கள், ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உலகை ஆளும் திறனுடன் சிறந்து விளங்குவார்கள் என்று கூறினார். இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பயிற்சி வகுப்புகள் சுமையாக உள்ளன. அதனால், பல்வேறு தேர்வுகளுக்கு நாங்கள் இலவச ஆன்லைன் பயிற்சி வழங்க இருக்கிறோம். இதனால், பயிற்சிக்காக செலவிடப்படும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை இந்த குடும்பங்கள் சேமிக்கலாம். தங்கள் பிள்ளைகளுடன் நெருங்கி இருந்து, அவர்களை கவனித்து கொள்ளலாம் என்று நான் உறுதியளிக்கிறேன் என்று கூறினார். இளைஞர்களுக்கு பல்வேறு தேர்வுகளுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி வழங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்களிடம் டிஜிட்டல் உள்கட்டமைப்பு உள்ளது. சிறந்த திறமையாளர்களும், ஆசிரியர்களும் எங்களிடம் உள்ளனர் என்றார். அதனால், இந்த வளங்களை ஒன்றிணைத்து, நாட்டின் இளைஞர்களுக்கு இலவச பயிற்சியை வழங்குவதற்கான முழுமையான வலையமைப்பை உருவாக்க இருக்கிறோம் என்று கூறினார். குடிமக்கள் பாதுகாப்பு சீர்திருத்தங்கள் வரும் நாட்களில் குடிமக்களை பாதுகாப்பதற்கான சீர்திருத்தங்களுக்கான ஒரு வலையமைப்பை உருவாக்குவோம் என்று செங்கோட்டையில் இருந்து இன்று அறிவிக்கிறேன். அவர்களுக்கு நவீன அமைப்புகளை அறிமுகம் செய்வோம். தற்கால நெருக்கடிகளில் இருந்து குடிமக்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கைகளை நாம் எடுக்க முடியும் என்றால், சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட பெரிய, நவீன குடிமக்கள் பாதுகாப்பு தன்னார்வ படையை உருவாக்க உள்ளோம் என்று கூறினார். தற்போதுள் அவசரநிலைகள் மற்றும் நெருக்கடிகளை எதிர்கொள்ள தேவையான நவீன அமைப்புகள் மற்றும் திறன்களுடன் தன்னார்வலர்களை தயார்படுத்துவதில் இந்த நெட்வொர்க் கவனம் செலுத்தும். ஒலிம்பிக் போட்டிகள் 2036-ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வலுவான போட்டியாளர்களாக நாம் இருக்கிறோம். 2030-ம் ஆண்டில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த இருக்கிறோம். ஒலிம்பிக்கில் 40 பிரிவுகளில், கிட்டத்தட்ட 350 போட்டிகள் உள்ளன. இவற்றில் மூன்றில் இரண்டு பங்கு போட்டிகளில் கூட நாம் போட்டியிட முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஏனெனில் நாம் தகுதி கூட பெற முடிவதில்லை என்றார். அதனால், நாடு தழுவிய திறமையாளர் தேடல் ஒன்றை நாங்கள் தொடங்க இருக்கிறோம். 2036-ம் ஆண்டில், குறைந்தது நான்கில் 3 நிகழ்வுகளில் நாம் பங்கேற்க வேண்டும் என முடிவு செய்துள்ளோம். நாடு முழுவதும் 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான நாடு தழுவிய திறமையாளர் தேடல் நடத்தி, கண்டறிந்து, உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களாக ஆவதற்கான சிறப்பு பயிற்சியை அவர்களுக்கு வழங்குவோம். குறைக்கடத்தி உற்பத்தி இன்றைய டிஜிட்டல் உலகில் சிப்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை இல்லையென்றால், உலகம் ஸ்தம்பித்துவிடும். இந்த துறையில் தன்னிறைவை நோக்கி இந்தியா முன்னேறியுள்ளது. ஏற்கனவே, மூன்று பெரிய குறைக்கடத்தி ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. தவிர அவற்றில் இருந்து ஏற்றுமதியும் முன்பே தொடங்கப்பட்டு விட்டது. அடுத்த 7-8 ஆண்டுகளில், ஐந்து முதல் எட்டு கூடுதல் குறைக்கடத்தி ஆலைகள் மிக விரைவில் செயல்பட தொடங்கும். அணுசக்தி விரிவாக்கம் எரிசக்தி பாதுகாப்பில் அணுசக்தியானது ஒரு முக்கிய வழிமுறையாகும். இதற்காக நாடாளுமன்றத்தில் அமைதி சட்டம் நிறைவேற்றி, அதன் மூலம், ஒரு புதிய இலக்கை நோக்கிய பாதையை நாம் வகுத்திருக்கிறோம். இதன்படி 2047-ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி என்ற இலக்கை நோக்கி நாம் முன்னேறி வருகிறோம் என்று குறிப்பிட்டார். இந்த பத்து வருடங்களுக்குள் மட்டும் ஐந்து புதிய அணு உலைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது என்ற நோக்கங்களை கொண்டுள்ளோம். இந்த ஆண்டு, விரைவான அணுசக்தி தொழில்நுட்பம் பற்றி முழுமையாக கற்றறிந்ததன் மூலம் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. அணுசக்தி எரிபொருளில் தன்னிறைவை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது என்றும் அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/what-are-the-key-announcements-in-pm-modis-independence-day-speech




