பாரம்பரியத்தையும் நவீன அறிவியலையும் இணைக்கும் தனித்துவ முயற்சியாக, விஐடி சென்னையில் மாணவர்களின் அறிவாற்றல், உடல் நலம் மற்றும் மனநலனை மேம்படுத்தும் நோக்கில் பாரம்பரிய தமிழர் விளையாட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு ஆராய்ச்சி மையம் விஐடி சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில், பல்லாங்குழி, தாயம், ஆடுபுலி ஆட்டம், பரமபதம், ஐந்து கல் போன்ற விளையாட்டுகளின் மூலம் மாணவர்களின் நினைவாற்றல், பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன், மன அமைதி போன்ற அம்சங்களில் ஏற்படும் மாற்றங்கள் அறிவியல் ரீதியாக ஆய்வு செய்யப்பட உள்ளன. இந்த மையம் மத்தியக் கல்வி அமைச்சகத்தின் இந்திய அறிவுசார் அமைப்பு (Indian Knowledge Systems) பிரிவின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இந்த மையத்தைத் திறந்து வைத்து விஐடி துணைத் தலைவர் முனைவர் ஜி.வி. செல்வம் பேசுகையில், “பாரம்பரியத் தமிழர் விளையாட்டுகள் பல தலைமுறைகளாக குழந்தைகளின் அறிவு வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்துள்ளன. குறிப்பாகக், குழந்தைகளின் மூளை வளர்ச்சி, நினைவாற்றல், திட்டமிடல், பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல் மற்றும் சமூக உறவை மேம்படுத்துதல் ஆகியவற்றில் பெரும்பங்க்கு வகித்தன. ஆனால் இவை இன்றைய காலத்தில் மெதுவாக மறைந்து வருகின்றன. அவற்றை மீட்டெடுப்பதற்கு இந்த மையத்தின் செயல்பாடுகள் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறோம், என்றார். இந்த மையத்தில் ஒவ்வொரு விளையாட்டும் அறிவாற்றல், உடல் நலம் மற்றும் மனநலனை ஆய்வு செய்யப் பயன்படுத்தப்படும். அதாவது, ஐந்து கல் விளையாட்டு பார்வை மற்றும் காணொளித் திறனுக்கும், பல்லாங்குழி அறிவாற்றலை வளர்ப்பதற்கும், தாயம் திட்டமிடல் மற்றும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், ஆடுபுலி ஆட்டம் நினைவாற்றல் மற்றும் அறிவுத்திறன் வளர்ப்பதற்கும், பரமபதம் வாழ்க்கை சவால்களை சமாளிக்கும் மனப்பக்குவத்தை வளர்ப்பது ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தி ஆய்வு செய்யப்படும். மேலும், இந்த மையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள திருக்குறள் குறட்பாக்கள் மனித உணர்வு, நெறிமுறைகள், உணர்ச்சிக் கட்டுப்பாடு, தலைமைத்துவம் மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றில் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆய்வு செய்யும். திருமந்திரத்தில் உள்ள மூச்சுப்பயிற்சி, உணர்வுகள் மற்றும் மனம் உடல் இடையேயான தொடர்பு பற்றிய கருத்துகளும் இந்த ஆய்வில் இடம்பெறுகின்றன. இந்த மையத்தில் இடம் பெற்றுள்ள தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளும் திருக்குறள் குறட்பாக்களும் மாணவர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. “பழந்தமிழ் மரபுகளையும், பண்பாடுசார் பழக்கவழக்கங்களையும் அறிவியல் அடிப்படையில் மதிப்பீடு செய்வது மற்றும் மாணவ - மாணவியரின் அறிவாற்றல், உடல் நலம் மற்றும் மனநலனை மேம்படுத்துவது போன்றவை இந்த மையத்தின் குறிக்கோள்களாகும். வரும் காலங்களில் இது போன்று இன்னும் பல தமிழர் விளையாட்டுகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு அதை இன்றைய தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல நாங்கள் திட்டமிட்டுளோம்,” என்று இந்த மையத்தின் முதன்மை ஆய்வாளர் முனைவர் கணேஷ், இணை ஆய்வாளர் முனைவர் விஜயபானு ஆகியோர் தெரிவித்தனர். இந்திய அறிவு மரபை அடிப்படையாகக் கொண்டு தமிழ் விளையாட்டுகளை உருவாக்குவது, பழமையான அறிவைப் பாதுகாப்பதற்கான முயற்சி மட்டுமல்ல; எதிர்காலத் தலைமுறைக்கு பாரம்பரியத்தையும் தொழில்நுட்பத்தையும் இணைத்து வழங்கும் புதுமையான கல்விப் பயணமாகும். இதன் மூலம் தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் இந்திய அறிவு மரபு உலக அரங்கில் புதிய பரிமாணத்தை அடையும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/education/vit-re-start-traditional-tamil-games




