சென்னை, 'பட்டிமன்றம்' என்ற பெயரைக் கேட்டாலே நம்முடைய நினைவுக்கு முதலில் வருபவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா. பொங்கல், புத்தாண்டு, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடுதான் தமிழர்களுக்குத் தொடங்கும் எனும் அளவுக்குத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற கலந்துவிட்ட பெருமைக்குரியவர். பட்டிமன்றம் புகழ் பேராசிரியர் சாலமன் பாப்பையா வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று தன்னுடைய 90 வயதில் காலமானார். அவரது வாழ்க்கைப் பயணம் குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம். இளமைப் பருவம் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் 1936-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந்தேதி சாலமன் பாப்பையா பிறந்தார். ஆலைத்தொழிலாளியான சுந்தரம், பாக்கியம் தம்பதிக்கு 9-வது குழந்தையாக பிறந்தவர். பெரிய குடும்பம் என்பதால் பொருளாதார வசதி இல்லை. கல்வியை தொடர்வதற்கே போராட வேண்டிய சூழல் இருந்தது. சாலமன் பாப்பையா தனது ஆரம்பக் கல்வியை மதுரை ஆரப்பாளையம் வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளியிலும், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபைப் பள்ளியிலும் பயின்றார். உயர்நிலைக் கல்வியை மதுரை தல்லாகுளம் அமெரிக்கன் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். கல்லூரிப் படிப்பு பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற சாலமன் பாப்பையா, மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். படித்து முடித்த பிறகு, அமெரிக்கன் கல்லூரியில் பயிற்றுநராக மூன்றாண்டுகள் பணியாற்றினார். பின்னர் தமிழ்ப் பேராசிரியராக உயர்ந்து, தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். கோப்புப்படம் பேச்சு பயணம் பள்ளியில் படிக்கும்போதே பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு தனது பேச்சுத் திறனை வளர்த்துக்கொண்டார். திராவிட இயக்கப் பேச்சாளர்கள், முத்துராமலிங்கத் தேவர், காமராஜர் உள்ளிட்டோரின் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டார். அமெரிக்கன் கல்லூரியில் திருவள்ளுவர் கழகத் தலைவராகப் பணியாற்றியபோது பல்வேறு பேச்சரங்குகளை ஒருங்கிணைத்தார். குன்றக்குடி அடிகளார், இரா. நெடுஞ்செழியன், க. அன்பழகன் போன்றோரின் பேச்சரங்குகளை ஒருங்கிணைத்ததன் மூலமும், சா. கணேசன், குன்றக்குடி அடிகளார் ஆகியோரின் சொற்பொழிவுகளை கேட்டும் தனது பேச்சுத் திறனை மேம்படுத்தினார். தொடர் வாசிப்புப் பயிற்சியின் மூலம் சிறந்த பட்டிமன்றப் பேச்சாளராகவும், நடுவராகவும் வளர்ந்தார். ஆரம்பத்தில் அவருக்கு பட்டிமன்றத்தில் பேச்சாளராக இருப்பதில்தான் அதிக விருப்பம் இருந்தது. பின்னர் நடுவர் பொறுப்பு அவரது அடையாளமாகவே மாறியது. பட்டிமன்றத்தின் அடையாளம் சாலமன் பாப்பையாவுக்கு முன்பே தமிழகத்தில் வளமான பட்டிமன்ற மரபு இருந்தது. ஆனால் பட்டிமன்றத்தை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்ததில் அவரது பங்கு அளப்பரியது. ஒரு காலத்தில் இலக்கிய விழாக்கள், கல்லூரிகள், தமிழ் அமைப்புகள் போன்ற இடங்களை மட்டுமே மையமாகக் கொண்டிருந்த பட்டிமன்றம், தொலைக்காட்சியின் வளர்ச்சிக்குப் பிறகு குடும்ப நிகழ்ச்சியாக மாறியது. அந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக சாலமன் பாப்பையா இருந்தார். பொங்கல், புத்தாண்டு, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவரது பட்டிமன்றங்கள் தமிழகக் குடும்பங்களின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே மாறின. இயல்பான பேச்சு சாலமன் பாப்பையா என்ற பெயரைக் கேட்டதும் முதலில் 'அன்புப் பெரியோர்களே. அருமைத் தாய்மார்களே. இனிய குழந்தைகளே' என்று ஒவ்வொரு பட்டிமன்றத்தின் தொடக்கத்திலும் அவர் கூறும் வார்த்தைகள்தான் நம் நினைவுக்கு வரும். மதுரைக்கே உரிய இயல்பான தமிழும், நகைச்சுவையும் கலந்த அவரது பேச்சு மிகவும் எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும். தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை கொண்டிருந்த சாலமன் பாப்பையா, மேடையில் எப்போதுமே மிகக் கடினமான இலக்கிய மொழியை தேர்வு செய்ததில்லை. திருக்குறளையோ, சங்க இலக்கியத்தையோ எதைக் கூறினாலும், அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கும் ஒரு சம்பவத்துடன் இணைத்து எளிமையாக விளக்குவார். கோப்புப்படம் தலைப்புகளும், தீர்ப்புகளும் சாலமன் பாப்பையா நடுவராக பங்கேற்கும் பட்டிமன்றங்களின் தலைப்புகளும் காலத்துக்கேற்ப மாறின. இலக்கியம் சார்ந்த தலைப்புகளைத் தாண்டி குடும்பம், கணவன் - மனைவி உறவு, பெற்றோர் - பிள்ளைகள், கல்வி, பணம், காதல், திருமணம், நவீன வாழ்க்கை, தொழில்நுட்பம், தலைமுறை மாற்றம் போன்ற சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய தலைப்புகளில் பட்டிமன்றங்கள் அரங்கேறின. இரு அணிகளும் தங்களது வாதங்களை முன்வைத்த பிறகு நடுவராக அவர் வழங்கும் தீர்ப்புதான் நிகழ்ச்சியின் உச்சம். எந்த அணி வெற்றி பெற்றது என்று வெறுமனே அறிவிக்காமல், இரு தரப்பின் வாதங்களிலும் உள்ள உண்மைகளை எடுத்துச் சொல்லி, நகைச்சுவையுடன் தனது தீர்ப்பை சொல்லும் அவரது பாணி தனித்துவமானதாக அமைந்தது. இதுவே பட்டிமன்றத்தை குடும்பத்துடன் பார்க்கக்கூடிய அறிவார்ந்த பொழுதுபோக்கு வடிவமாக மாற்றியது. தொலைக்காட்சியில் இலக்கியப் பணி பட்டிமன்றம் தவிர்த்து பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் சாலமன் பாப்பையா இலக்கியப் பணியாற்றியுள்ளார். தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் தினந்தோறும் காலையில் திருக்குறளுக்கு விளக்கமளித்தார். நாலடியார், நான்மணிக்கடிகை, அறநெறிச்சாரம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஏலாதி, திரிகடுகம் போன்ற இலக்கியங்கள் குறித்தும் உரையாற்றினார். 'ஔவையின் அமுதமொழி' நிகழ்ச்சியின் மூலம் ஔவையாரின் பாடல்களுக்கு விளக்கமளித்தார். எழுத்துலகில் பங்களிப்பு சாலமன் பாப்பையா இலக்கியத் திறனாய்வும், பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரையும் எழுதியிருக்கிறார். மேலும் மதுரை கம்பன் கழகம் ஒருங்கிணைக்கும் திங்கள் சொற்பொழிவுகளை ஆண்டுதோறும் தொகுத்து நூலாக வெளியிட்டார். சாலமன் பாப்பையாவின் முக்கியமான தமிழ் இலக்கியப் பணிகளில் ஒன்று திருக்குறளுக்கான அவரது உரை. மேலும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - ஓர் பார்வை, உரை மலர்கள், உரைக்கொத்து, புறநானூறு புதிய வரிசை வகை உள்ளிட்ட நூல்களும் அவரது படைப்புகளாகும். கோப்புப்படம் சினிமாவில் பாப்பையா பட்டிமன்றத்தின் முகமாக அறியப்படும் சாலமன் பாப்பையா சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இயக்குநர் ஷங்கரின் 'பாய்ஸ்' மற்றும் ரஜினிகாந்த் நடித்த 'சிவாஜி' உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். கலைமாமணி, பத்மஸ்ரீ தமிழுக்கு பல வகைகளில் தொண்டாற்றியுள்ள சாலமன் பாப்பையாவுக்கு தமிழ்நாடு அரசு 2000-ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கியது. 2010-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ விருதை வழங்கியது. கடந்த 2021-ம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. மனைவி, மக்கள் சாலமன் பாப்பையாவின் மனைவி ஜெயாபாய். இவர்களுக்கு தியாகமூர்த்தி என்ற மகனும், விமலா என்ற மகளும் உள்ளனர். சாலமன் பாப்பையாவின் நீண்டகால இலக்கிய மற்றும் மேடைப் பயணத்திற்கு அவரது குடும்பம் ஆதரவாக இருந்துள்ளது. அவரது மனைவி ஜெயபாய் கடந்த ஆண்டு ஜனவரி 12-ம் தேதி மதுரையில் காலமானார். கடைசிப் பட்டிமன்றம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் நடுவராக பங்கேற்றுள்ள சாலமன் பாப்பையா, கடந்த 5-ம்தேதி சிவகாசியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய பட்டிமன்றத்தில் பங்கேற்றுப் பேசியுள்ளார். அதுவே அவரது கடைசிப் பட்டிமன்றமாக அமைந்துள்ளது. தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர், பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவு தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு ஒரு பேரிழப்பாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/voice-that-echoed-in-tamil-homes-fades-salomon-pappaiyas-life-journey



