ஐந்து மாதக் குழந்தை, அன்புக் கணவன், பெருமைக்குரிய வங்கிப் பணி. மகிழ்ச்சியின் உச்சத்தில் மிதந்துகொண்டிருந்த ஒரு இளம் தாயின் வாழ்க்கை, ஒரு நொடியில் சிதைந்துபோன கொடூரம் அமெரிக்காவை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. மகப்பேறு விடுமுறை முடிந்து உற்சாகத்துடன் பணிக்குத் திரும்பிய சில நாட்களிலேயே, நியூயார்க் நகரின் அதிமுக்கிய டைம்ஸ் ஸ்கொயரில், மனநலம் குன்றிய ஒரு பெண்ணால் ய் குத்திக் கொல்லப்பட்டார் எரின் பியாசென்டி. கொல்லப்பட்ட எரின் பியாசென்டி (32), புகழ்பெற்ற ஐவி லீக் பல்கலைக்கழகங்களில் ஒன்றான பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் இரண்டாவது பெரிய வங்கியான ‘பேங்க் ஆஃப் அமெரிக்கா’வில் துணைத் தலைவராக உயர்ந்த பதவியில் இருந்தவர். ஃபோர்டாம் சட்டப் பள்ளியில் சட்டப் படிப்பை முடித்த இவர், ஒரு வெற்றிகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தார். இவரது மரணம் குறித்து வங்கி வெளியிட்ட அறிக்கையில், "எங்கள் சக ஊழியரின் இந்த இழப்பால் நாங்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்துள்ளோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Times square-ல் எரினின் வாழ்க்கை மகிழ்ச்சியால் நிரம்பியிருந்தது. தனது கொடூர மரணத்திற்கு வெறும் நான்கு நாட்களுக்கு முன்புதான், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டிருந்தார். தனது பச்சிளம் குழந்தையை ஏந்தியபடி கணவருடன் புன்னகைத்த அந்தப் புகைப்படத்தில், "ஐந்து மாதங்கள் மகப்பேறு விடுமுறை அளித்த எனது வங்கிக்கு நன்றி. இந்த நாட்கள் விலைமதிப்பற்றவை" என்று குறிப்பிட்டிருந்தார். சமீபத்தில்தான் தனது குழந்தையின் ஞானஸ்நான விழா நடந்ததாகவும், தனது இரண்டாவது திருமண நாளைக் கொண்டாடியதாகவும், கணவருடன் பல இடங்களுக்குப் பயணம் செய்ததாகவும் அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார். "அவள் ஒரு அழகான, மிக அழகான பெண்" என அவரது பாட்டி கண்ணீருடன் நினைவுகூர்கிறார். இத்தனை கனவுகளுடன் இருந்த ஒரு வாழ்க்கை, கண நேரத்தில் பறிக்கப்பட்டதுதான் நெஞ்சைப் பிளக்கும் சோகம். திங்களன்று, உலகின் மிகவும் பரபரப்பான மையங்களில் ஒன்றான டைம்ஸ் ஸ்கொயரில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. கையில் இரண்டு கத்திகளுடன் வந்த குயின்ஸைச் சேர்ந்த பெண் ஒருவர், திடீரென அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். முதலில் 68 வயது முதியவர் ஒருவரைக் குத்திய அவர், அடுத்ததாக எரினைத் தாக்கினார். இதில் படுகாயமடைந்த எரின், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காவல்துறை இந்தத் தாக்குதலை "குறிப்பிட்ட காரணமில்லாத, தூண்டுதலற்ற தாக்குதல்" என்று விவரித்துள்ளது. தாக்குதல் நடத்திய பெண்ணை போலீஸார் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர். எரின் பியாசென்டி. யார் இந்த பெண்? மூன்று குழந்தைகளின் தாயான அப்பெண், பல ஆண்டுகளாக மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாக காவல்துறை ஆணையர் ஜெசிகா டிஷ் தெரிவித்துள்ளார். 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் மனநலம் தொடர்பான பிரச்சினைகளுக்காக அவர் மீது காவல்துறையிடம் புகார்கள் வந்துள்ளன, ஆனால் நியூயார்க்கில் அவர் மீது எந்த குற்றப் பதிவும் இல்லை. அப்பெண்ணின் சகோதரர் பேட்ரிக் பெரால்டா கூறுகையில், "அவளுக்குப் பல தசாப்தங்களாக மனநலப் பிரச்சினைகள் இருந்தன, ஆனால் அவள் ஒருபோதும் வன்முறையாளராக இருந்ததில்லை. கடந்த சில ஆண்டுகளாக மருந்துகள் எடுத்துக்கொண்டு, ஒரு சட்ட அலுவலகத்தில் பகுதி நேர வேலை பார்த்து, நன்றாகவே இருந்தார்" என்றார். இந்தச் சம்பவம் ஏன் நடந்தது என்பதை எங்களால் விளக்க முடியவில்லை என்று கூறும் அவர், பியாசென்டியின் குடும்பத்திற்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணை சுற்றி வளைத்தபோது, அவர் கத்திகளைக் கீழே போட மறுத்து, "உங்களைக் கொல்வதே மேல்" என்று அதிகாரிகளை நோக்கி ஆக்ரோஷமாக முன்னேறியுள்ளார். அதிகாரிகள் அவரை முதலில் அதிர்ச்சி துப்பாக்கி (Taser) மூலம் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், அது பலனளிக்காததால், அவர் அதிகாரிகளை நோக்கிப் பாய்ந்தபோது, இரண்டு அதிகாரிகள் அவரைச் சுட்டுக் கொன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. உலகின் மிக அதிக பாதுகாப்புள்ள, காவல்துறை தலைமையகத்திற்கு அருகிலேயே அமைந்துள்ள டைம்ஸ் ஸ்கொயரில், கடந்த மே மாதமும் இதேபோன்ற ஒரு கத்திக்குத்து மரணம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/crime/bank-of-america-vice-president-new-mom-killed



