சீன நாடானது உலக அளவில் தனது படைப்பாற்றலை நாள்தோறும் வெளிப்படுத்தி அதிசயம் காட்டி வருகிறது. அந்த வகையில், கப்பல் மூலம் ரெயிலைக் கொண்டு சென்று சாதனை படைத்து வருகிறது. இந்த கடற்பயணம் 22 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. சீனா பல பெரிய பாலங்களைக் கட்டியுள்ளது; ஆனால், இந்த ஜலசந்தியில் பாலம் கட்ட முடியாததற்குச் சில காரணங்கள் உள்ளன. பூகம்பம் வரும் பகுதி கியோங்ஜோ ஜலசந்தி சுமார் 30 கி.மீ. அகலம் கொண்டது; ஆனால், அதன் ஆழம் சுமார் 120 மீட்டர் வரை உள்ளது. இவ்வளவு ஆழத்தில் பாலத்திற்குத் தூண் அமைப்பது மிக மிகக் கடினம்; மேலும், அதற்குப் பல கோடி ரூபாய் செலவாகும். அதுமட்டுமன்றி, இந்த ஜலசந்தி அடிக்கடி நிலநடுக்கம் (பூகம்பம்) ஏற்படும் பகுதியில் அமைந்துள்ளது. கடலுக்கு அடியில் பல நிலப்பிளவுகள் உள்ளதால், பாலம் கட்டினால் நிலநடுக்கத்தின் போது அது இடிந்து விழும் ஆபத்து உள்ளது. அங்குச் சுரங்கக் குகை அமைத்தாலும் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம். சூறாவளி அபாயம் ஹைனான் தீவு ஒவ்வொரு ஆண்டும் பல பெரிய சூறாவளிகளை சந்திக்கும். அப்போது மணிக்கு 150 முதல் 200 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்போது, பாலத்தில் ரெயில்களை இயக்க முடியாது. மேலும், இது மிகவும் பரபரப்பான (பிஸியான) கப்பல் போக்குவரத்து வழித்தடமாகும்; தினமும் ஏராளமான பெரிய சரக்குக் கப்பல்கள் இதன் வழியே செல்கின்றன. இங்கு பாலம் கட்டினால் அவற்றின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும். கப்பல்களுக்குப் பாதிப்பில்லாமல் இருக்க வேண்டுமெனில் பாலத்தை மிக உயரமாகக் கட்ட வேண்டும். அது இன்னும் சவாலான காரியமாகும். முதல் பயணம் சீனாவின் முக்கிய பகுதியான குவாங்டாங் மாகாணத்தின் சான்ஜியாங் நகருக்கும், தீவு மாகாணமான ஹைனானில் உள்ள ஹைகூ, சான்யா நகரங்களுக்கும் இடையே கியோங்ஜோ ஜலசந்தி அமைந்துள்ளது. பாலம் கட்ட முடியாத இந்த ஆபத்தான கடல் பகுதியை இணைக்கச் சீனா கண்டுபிடித்த மாற்று வழிதான் 'யூஹாய் ரெயில் கப்பல்' ஆகும். கடந்த 2003-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 'யூஹாய் ரெயில் கப்பல் நம்பர் 1' என்ற பெயரில் தனது முதல் கப்பல் சேவையைச் சீனா தொடங்கியது. தற்போது யூஹாய் நம்பர் 1, 2, 3 மற்றும் 4 என நான்கு பிரம்மாண்டமான கப்பல்கள் இந்த வழித்தடத்தில் தொடர்ந்து இயங்கி வருகின்றன. கப்பலில் ரெயிலை ஏற்றும் முறை எப்படி? இது சாதாரண விஷயம் அல்ல. கடல் அலையின் சீற்றத்தால் கப்பல் தொடர்ந்து ஆடிக்கொண்டே இருக்கும். அப்படி இருக்கும்போது, கரையில் உள்ள தண்டவாளத்தையும் கப்பலில் உள்ள தண்டவாளத்தையும் எப்படித் துல்லியமாக இணைப்பது? 4 பிரிவுகளாக பிரிக்கப்படும் ரெயில் கப்பல் கரையிலிருந்து சில அடி தூரத்தில் வரும்போது, கட்டுப்பாட்டு அறையில் உள்ள அதிகாரிகள் கடல் மட்டத்தை கண்காணித்து, கரையில் உள்ள தண்டவாளத்தின் உயரத்தைக் கப்பலில் உள்ள தண்டவாளத்தின் உயரத்திற்குச் சமமாகச் சரி செய்வார்கள். பின்னர், கரையில் உள்ள இரும்பு பீம்கள் கப்பலின் தண்டவாளத்துடன் இணைக்கப்பட்டு உறுதி செய்யப்படும். ரெயில் துறைமுகத்திற்கு வந்ததும், அதன் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்படும். அதன்பின்னர், அந்த முழு ரெயிலும் 4 தனித்தனி பிரிவுகளாகப் பிரிக்கப்படும். பாதுகாப்பு ஏற்பாடுகள் துறைமுகத்தில் உள்ள லோகோமோட்டிவ் இன்ஜின்கள் மூலம் ரெயிலின் ஒவ்வொரு பிரிவும் தனித்தனியாக கப்பலுக்குள் இழுத்துச் செல்லப்படும். இந்த முழுச் செயல்முறைக்கும் சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஆகும். மேலும், அனைத்துப் பிரிவுகளும் கப்பலுக்குள் சென்றடைந்ததும், அலைகளால் பெட்டிகள் நகராமல் இருக்க அவற்றின் சக்கரங்கள் பிரம்மாண்ட சங்கிலிகளால் கட்டப்பட்டு, அசையாமல் நிறுத்தப்படும். அதன் பின்னர் கப்பல் புறப்பட்டு, கியோங்ஜோ ஜலசந்தியைச் சுமார் 1 மணி நேரத்தில் கடந்துவிடும். மீண்டும் இணைப்பு இந்தக் கப்பல் மறுகரைத் துறைமுகத்தை அடைந்ததும், இதே தொழில்நுட்ப முறையில் தண்டவாளங்கள் இணைக்கப்படும். பின்னர், கப்பலுக்குள் இருக்கும் ரெயில் பெட்டிகள் அனைத்தும் வெளியே இழுக்கப்பட்டு, மீண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டு அதன் தரைவழிப் பயணம் தடையின்றித் தொடரும். பொதுவாக, உலக நாடுகள் பலவும் தங்களது சரக்கு கப்பல்களில் கார்கள், பஸ்கள் போன்ற வாகனங்களை மட்டுமே ஏற்றி ஏற்றுமதி செய்து வருகின்றன. ஆனால், சீனா தனது முழு நீள ரெயில் ஒன்றையே பிரம்மாண்ட கப்பல் மூலம் கடல் வழியாக கொண்டு சென்று ஹைனான் தீவை அடைய செய்கிறது. கியோங்ஜோ நீரிணையை கடப்பதற்காக, சீன ரெயில் ஒன்று 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு கப்பலில் ஏற்றப்படும் காட்சிகளும், அது மறுகரையை சென்றடையும் காட்சிகளும் வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த அசாத்திய காட்சியானது தற்போது இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டிங்காகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/miracle-of-loading-entire-train-onto-ship-in-china




