சென்னை, டாஸ்மாக்கில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலாளர்களுக்கு சுற்றறிக்கை டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபானங்களை அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை (எம்.ஆர்.பி) விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் சுற்றிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- டாஸ்மாக் மதுபான கடைகளில் எம்.ஆர்.பி.யைவிட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாக நுகர்வோரிடமிருந்து புகார் பெறப்பட்டாலோ அல்லது டாஸ்மாக் அலுவலர்களின் திடீர் ஆய்வின்போது கண்டறியப்பட்டாலோ, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது உறுதிசெய்யப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட கடையின் பணியாளர்கள் (மேற்பார்வையாளர், விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர்) மீது கீழ்க்கண்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். முதல் முறை * முதல் முறை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டால், ஒருமாத காலம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட பணியாளரிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட வேண்டும். தற்காலிக பணியிடை நீக்க காலமான ஒரு மாதத்திற்கு தொகுப்பூதியம் வழங்கப்படாது. ஒரு மாத பணியிடை நீக்கம் முடிந்த பின், இனி மேல் இதுபோன்ற தவறு செய்யமாட்டேன் என்ற உறுதிமொழி பெற்றுக் கொண்டு, தலைமையக ஒப்புதலுடன், அவர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டும். 3 மாத பணியிடை நீக்கம் * 2-வது முறையாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டால், 3 மாத காலம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். பணியாளரிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட வேண்டும். 3 மாத தற்காலிக பணியிடை நீக்க காலத்திற்கு தொகுப்பூதியம் வழங்கப்படாது. 3 மாத பணியிடை நீக்கம் முடிந்த பின், இனிமேல் இதுபோன்ற தவறு செய்யமாட்டேன் என்ற உறுதிமொழி பெற்றுக்கொண்டு, தலைமையக ஒப்புதலுடன், அவர் பணிபுரியும் கடையில் இருந்து அதே மாவட்டத்தில் உள்ள மதுபானக் கிடங்கிற்கு பணிமாற்றம் செய்யப்பட்டு, குறைந்தது 3 மாதங்கள் அங்கு பணியாற்ற வேண்டும். * 3-வது முறை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட் டால், சம்பந்தப்பட்ட பணியாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, குற்றக் குறிப்பாணை வழங்கி உள்விசாரணை நடத்த வேண்டும். உள்விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். ரூ.10 ஆயிரம் அபராதம் ரூ.1 முதல் 9 வரை கூடுதலாக வசூல் செய்தால், ரூ.1-க்கு ரூ.1,000 வீதம் அதிகபட்சமாக ரூ.9,000 என்ற வீதத்தில் அபராதம் விதிக்க வேண்டும். ரூ.10 மற்றும் அதற்கு மேல் கூடுதலாக வசூல் செய்தால் ரூ.10 ஆயிரம் மட்டும் விதிக்க வேண்டும். அபராத தொகையில் 60 சதவீதத்தை விற்பனை செய்த பணியாளரும், 40 சதவீதத்தை அப்போது கடையில் உடன் இருந்த மேற்பார்வையாளரும் (மேற்பார்வையாளர் ஆஜரில் இல்லாத பட்சத்தில் விற்பனை செய்த பணியாளர் அபராத தொகையினை முழுவதுமாக) செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-10000-fine-for-selling-liquor-at-a-higher-price-tasmacs-strict-move




