வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் இந்தப் பூவுலகமும் அதில் வாழும் மனிதர்களும் ஒரே மாதிரியானவர்கள் அல்லர்.கண்டங்களும்,நாடுகளும் தட்ப வெப்ப நிலையால் மாறுபடுவது போலவே,மனிதர்களும் நிறத்தாலும்,குணத்தாலும் வேறுபடுகிறார்கள். கலாச்சாரம்,நாகரீகம்,பழக்க வழக்கங்கள் ஆகியவை மாறுபடுகின்றன. அதற்கேற்பவே மக்கள் வாழ்க்கை முறையும் அமைந்து விடுகிறது.பனி,குளிர் சில இடங்களில்.வெயில்,வியர்வை,வெப்பம் வேறு சில இடங்களில்.இரண் டிற்கும் இடைப்பட்ட மிதமான சீதோஷ்ணம் சில நாடுகளில்.ஆனால் எல்லா மக்களாலும் விரும்பப்படுவது அமைதியும்,நிம்மதியுமே! அந்த அமைதியும்,நிம்மதியும் குடும்ப வாழ்க்கையில்தான் மிகுதி என்பதாலேயே,மக்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுகிறார்கள்.தன் குடும்பத்தைத் தழைக்க வைப்பதற்காக அயராது உழைக்கிறார்கள். ‘நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்’ என்று சொல்லி,நல்ல குடும்பங்களைப் பெருமைப்படுத்தினார்கள். ‘இல்லறமே நல்லறம்’என்றும் எடுத்துரைத்தார்கள். ஐம்பது,அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, ஒரே குடும்பத்தில் ஏழெட்டுப் பிள்ளைகள் சர்வ சாதாரணம்.ஒரு குடும்பத்திலேயே சுமார் 10,12 பேர் இருப்பார்கள்.கூட்டுக் குடும்பம் என்றால் கேட்கவே வேண்டாம். இப்பொழுது நியூக்லியஸ் பேமிலி என்கிறார்கள்.நம் குழந்தை விளையாட, அடுத்த வீட்டுக் குழந்தையின் ஒத்துழைப்பும் அவசியம். அப்பொழுதெல்லாம் வீட்டிற்குள்ளேயே ஒரு டீம்இருக்கும். ஆனால்,காலப்போக்கில் அதிகக் குழந்தைகளை வளர்ப்பது சிரமம் ஆகிப் போனதாலும்,குடும்பக் கட்டுப்பாட்டு முறையை அரசு வலியுறுத்தியதாலும் இரண்டு குழந்தைகளே போதுமென்ற மன நிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள்.தற்காலத்திலோ,ஒரு குழந்தையே போதுமென்ற சூழ்நிலைக்குத் திருமண ஜோடிகள் தள்ளப்பட்டுள்ளார்கள்.பெருகி வரும் குடும்பச் செலவுகளே அவர்களை இவ்வாறு சிந்திக்கத் தூண்டுகின்றன. கணவனும்,மனைவியும் அயராது உழைத்து ஆயிரக் கணக்கில்,லட்சக் கணக்கில் சம்பாதித்தாலும் அத்தனையும் இஎம்ஐ (EMI)என்ற அரக்கனால் உறிஞ்சப்பட்டு விடுகிறது. எங்கள் காலத்தில் பெற்று விட்டதுதான்,பெற்றோர்கள் செய்தது. நாங்களாகத்தான் வளர்ந்தோம். இப்பொழுதோ, பிள்ளைகள் வளர்க்கப்படுகிறார்கள். மருத்துவம்,கல்வி,ஆரோக்கியமென்று, அனைத்துக்கும் காசைக் கொட்ட வேண்டியிருக்கிறது.அவரவர் வருமானத்திற்கேற்ப,அவற்றை நிர்ணயித்துக் கொண்டு,செலவு செய்கிறார்கள்.நீச்சல்,பாட்டு,விளையாட்டு என்று ஒவ்வொன்றுக்கும் வகுப்புகள்.டியூஷன் வகுப்புகள் இதில் அடங்காது.அது தனி. குளிக்கும் குளத்தில் நீர் நிறைந்திருக்கும் காலங்களில்,சகோதரர்கள் எங்களை நீரில் தூக்கி வீசுவார்கள். கையைக் காலைப் போட்டு அடித்துக் கரையை நோக்கி வருவோம்.அவ்வாறு செய்தே இரண்டு மூன்று நாட்களில் நீச்சல் அத்துபடியாகி விடும்.அப்புறம் நாங்களாகவே அதன் நெளிவு சுளுவுகளை வளர்த்துக் கொள்வோம். குளத்திலிருந்து ஆற்றுக்குப் பிரமோஷனாகி ஓடும் நீரை எதிர்த்து நீந்தி,உற்சாகத்தை வரவழைத்துக் கொள்வதுமுண்டு. இப்பொழுதெல்லாம் ‘பேஸ் புக்’ மற்றும் ‘வாட்ஸ் அப்’களில் அதிகப்படியான அறிவுரைகள் அனைவராலும் பகிரப்படுகின்றன. உண்மையில் வயதானவர்கள் தங்கள் அனுபவங்கள் வாயிலாக,இளந் தலைமுறையினருக்கு உரிய பரிந்துரைகளை வழங்கினால் அது நியாயம்.பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளவும் படலாம்;நிராகரிக்கவும் படலாம்.ஒருவரின் அனுபவம் மற்றவருக்கும் ஒத்துப் போக வேண்டிய அவசியமில்லை.ஆனால் இப்பொழுது வரும் பெரும்பாலான அறிவுரைகள் வயதானவர்களுக்கானவையாகவே உள்ளன. ‘ நீங்கள் உயிருடன் உள்ளவரை சொத்தைப் பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுத்து விடாதீர்கள். அவர்கள் உங்கள் முடியாத காலத்தில் உங்களை உதாசீனப்படுத்தி விடுவார்கள்! நிர்க்கதிக்கு ஆளாக்கி விடுவார்கள்!’போன்றவையே அதிகமாகப் பகிரப்படுகின்றன. எங்கோ ஒன்றிரண்டு உதவாக் கரைப் பிள்ளைகள் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். திருவண்ணாமலையில் அவ்வாறான ஒரு கேஸ் மாவட்ட ஆட்சியர் கவனம் வரை சென்று,பிரித்துக் கொடுத்த சொத்தை மீண்டும் பெற்றோர்களுக்கே உரிமை ஆக்கினார்கள். இது வெளியில் தெரிந்தது. வெளியில் தெரியாமல் இது போன்ற இன்னும் பல தரவுகள் கூட இருக்கலாம். ஆனால் இன்றைய உலகில் பிள்ளைகளால் பயனடையும் பெற்றோர்களே அதிகம். எனக்குத் தெரிந்து, அரசுப் பணியிலிருந்த பதிவறை எழுத்தர் ஒருவருக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் அரசுப் பணியிலும் இளையவர் தனியார் துறையிலும் பணி புரிகிறார்கள். எங்கள் பகுதியில் மனை ஆயிரக் கணக்கில் இருந்தபோதே மூத்த மகன்,தந்தையிடம் அவர் சேமிப்பிலிருந்த சில ஆயிரங்களை மனை வாங்குவதற்காகக் கேட்டிருக்கிறார். அவரோ மறுத்து விட,சில வருடங்களுக்குப் பின்னர் அதே மனைகளை லட்சக் கணக்கில் கொடுத்து வாங்க வேண்டிப் போனதால்,மகன்,தந்தைக்குள் நிரந்தரப் பிளவு. நமது சேமிப்பு குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்குத்தானே! கொடுப்பதில் அல்லவா இருக்கிறது நிறைவு! அதிலும் தற்போதுள்ள இளைய சமுதாயத்தினர் நன்றாகவே வாழ்க்கை நுணுக்கங்களைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். எதில் முதலீடு செய்ய வேண்டும்? எதில் கூடாது என்பது அவர்களுக்கு அத்துபடி. நமது நாட்டிலிருந்து அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் விமானங்களில் பயணிப்போரில் பெரும்பாலானோர் வயதானவர்களே!அங்கு தங்கிப் பணியாற்றும் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை வரவழைத்துத் தங்களுடன் வைத்துக் கொள்வதையே விரும்புகின்றனர்.பேரன், பேத்திகளுடன் அவர்கள் சந்தோஷமாகவே இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள்.நிலைமை இவ்வாறிருக்க,’சொத்தைக் கொடுக்காதே!தனியாக இரு!’என்று சொல்வதெல்லாம் எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. இருப்பதைக் கொடுத்து விட்டு,இறைவனையும் இளவல்களையும் நம்பி வாழுங்கள்.கடைசிக் காலம் களிப்புடன் கழியும்.அமைதியும் ஆனந்தமும் அடிமனத்தில் தங்கி,மேலும் வாழ வேண்டுமென்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கும்!வாழ்க்கை வாழத்தானே! உலகம் ஒரே மாதிரியானதல்ல என்பதை உணர வேண்டிய தருணம் இது! -ரெ.ஆத்மநாதன், புளோரிடா,யு.எஸ் வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம். இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே. Link: விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம். உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/literature/bridging-the-generational-gap-with-love-and-trust



