சென்னை, தேவதாசி முறைக்கு ஆதரவான கருத்துகள் தமிழ்நாட்டின் முற்போக்கு மாற்றங்களுக்கு எதிரானவை என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துள்ளது. இது குறித்து, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தேவதாசி முறை சென்னையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் அ.வெண்ணிலா மற்றும் எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோர் தேவதாசி முறையை ஆதரித்து பேசிய கருத்துகள் தமிழ்நாட்டின் முற்போக்கு பண்பாட்டு மாற்றங்களுக்கு எதிரானதாகும். இது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். குறிப்பிட்ட சில அடித்தட்டுச் சமூகங்களைச் சேர்ந்த சிறு வயது பெண் குழந்தைகளை, சாதி அடிப்படையில், பரம்பரை பரம்பரையாக கோயில் பணிகளுக்காகவும், நாட்டியம் உள்ளிட்டவற்றை மேற்கொள்வதற்காகவும், கோயிலை தூய்மை செய்தல், நீர் இறைத்தல், பூ கட்டுதல், மடப்பள்ளிக்கு உதவுதல் போன்ற பணிகளை செய்வதற்காகவும் ஈடுபடுத்தப்பட்டனர். எட்டு முதல் பதினோரு வயதுடைய பெண் குழந்தைகள், ‘பொட்டுக்கட்டுதல்’ அல்லது வேறு சில சடங்குகள் மூலம் இப்பணிகளில் கட்டாய முறையில் ஈடுபடுத்தப்பட்டனர். இப்பெண்கள், கடும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டதுடன், நிலப்பிரபுக்களாலும், கோயில் அதிகாரிகளாலும், ஆதிக்க வர்க்கத்தினராலும் பாலியல் ரீதியாகச் சுரண்டப்படும் நிலைக்கும் தள்ளப்பட்டனர். பல கொடுமைகளுக்கு ஆளாகினர். முற்போக்கு சக்தி பெண்களின் உரிமைகளையும், கண்ணியத்தையும் பறித்த, பெண்களை அடிமைகளாக்கி இழிவுப்படுத்திய, இக்கொடுமையான ஆணாதிக்க ஆதிக்கசாதி கலாச்சார முறையை எதிர்த்து முற்போக்கு சக்திகள் நீண்ட நெடிய காலம் போராடின. டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் போன்ற தலைவர்கள் தீவிரமாக இக்கொடுமைக்கு எதிராகப் போராடினர். இதன் விளைவாக, 1947 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு இத்தேவதாசிமுறை சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்பட்டது. இந்தச் சட்டம் கொண்டுவருவதற்கு எதிராக பிற்போக்குச் சக்திகள் குரல் எழுப்பின என்ற வரலாற்றை மறந்து விட முடியாது. கண்டனம் பெண் உரிமைக்கு எதிரான இக்கொடுமை ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், எழுத்தாளர்கள் ஒரு சிலர் இத்தேவதாசி முறையை ஆதரித்து பேசுவது கடும் கண்டனத்திற்குரியது. தேவதாசி முறையை ஆதரிக்கும் நச்சுக் கருத்துக்களை யார் பரப்பினாலும், அதை முற்போக்கு சக்திகள் முறியடிக்கவேண்டும். அத்தகையோரின் கருத்துகளை தமிழ்ச் சமூகம் புறக்கணிக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/opinions-in-favor-of-the-devadasi-system-are-against-the-progressive-changes-in-tamil-nadu-m-veerapandian




