லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். பின்னர் இந்த விழாவில் அவர் பேசியதாவது;- “முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் சுகாதார அமைப்பு இன்று அதிக தன்னிறைவு கொண்டதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும், மலிவான கட்டணம் கொண்டதாகவும், நவீனமானதாகவும் உருவெடுத்துள்ளது. மரபணு சிகிச்சை, அணு மருத்துவ முறை மற்றும் பிற நவீன தொழில்நுட்பங்கள் மூலம், மருத்துவ ஆராய்ச்சியில் இந்தியா புதிய மைல்கற்களை எட்டி வருவதுடன், உலகளாவிய சுகாதார சவால்களுக்கான உள்நாட்டுத் தீர்வுகளை இந்தியா இன்று உருவாக்கி வருகிறது. ஹீமோபிலியா சிகிச்சைக்கான உள்நாட்டு மரபணு சிகிச்சை முறையை இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டியுள்ளனர்; அதேவேளையில், மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்காக புனேயில் உள்ள ஒரு நிறுவனம் அதிநவீன நானோ-மருந்து ஒன்றை உருவாக்கியுள்ளது. 'உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை' (PLI) திட்டம், மருத்துவ உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்திக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. 2024-ல், நாம் 'நாபித்ரோமைசின்' (Nafithromycin) எனும் முதல் உள்நாட்டு மேக்ரோலைடு (macrolide) வகை நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தினை உருவாக்கினோம். சமூகப் பரவல் மூலம் ஏற்படும் நிமோனியா சிகிச்சையில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்று, சுகாதாரத் துறையில் இந்தியா சுயசார்பை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. 2023-ல் விலை குறைவான, எடை குறைந்த, அதிவேகமாக செயல்படக்கூடிய மற்றும் உயர் காந்தப்புலத் திறன் கொண்ட முதல் உள்நாட்டு எம்.ஆர்.ஐ (MRI) கருவியை நாம் உருவாக்கினோம். நாடு முழுவதும் உள்ள 19,000-க்கும் மேற்பட்ட ஜன் ஔஷதி கேந்திரங்கள் (Jan Aushadhi Kendras) மூலம் மக்கள் மிகக் குறைந்த விலையில் உயர்தர மருந்துகளைப் பெறுகின்றனர். முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையின் கீழ், கடந்த 9 ஆண்டுகளில் உத்தர பிரதேசத்தில் சுகாதார சேவைகளும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. 2017-க்கு முன்பு மாநிலத்தில் 17 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. ஆனால் இன்று மாநிலம் முழுவதும் 81 மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், மாநிலத்தில் 2 எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம், 'ஒரு மாவட்டம் - ஒரு மருத்துவக் கல்லூரி' என்ற மைல்கல்லை உத்தர பிரதேசம் இப்போது கடந்துவிட்டது. போதுமான எண்ணிக்கையிலான மருத்துவர்களும், சிறப்பு மருத்துவர்களும் இருந்தால் மட்டுமே சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்த முடியும். இந்த நோக்கத்தைக் கருத்தில் கொண்டு, பா.ஜ.க. அரசு மருத்துவக் கல்வியில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான விரிவாக்கத்தை மேற்கொண்டுள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/india-is-achieving-new-milestones-in-medical-research-rajnath-singh




