சென்னை, பாமக தலைவர் அன்புமணி ராம்தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு பெருமளவு குறைக்கப்பட்டு விட்ட நிலையில், மேட்டூர் அணையின் மொத்த நீர் இருப்பு அதன் கொள்ளளவில் பாதிக்கும் குறைவாக, அதாவது 46 டி.எம்.சியாக குறைந்திருக்கிறது. இதைக் கொண்டு இன்னும் 35 நாள்களுக்கு மட்டுமே நீர் திறக்க முடியும் எனும் சூழலில் சம்பா சாகுபடி சாத்தியமா? என்ற கவலை உழவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு காவிரியில் செப்டம்பர் 9&ஆம் தேதி முதல் 24&ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு தினமும் வினாடிக்கு 6,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 8&ஆம் தேதி ஆணையிட்டது. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முந்தைய ஆணைகளை கர்நாடக அரசு எவ்வாறு மதிக்கவில்லையோ, அதேபோல் இந்த ஆணையையும் மதிக்கவில்லை. அதனால், மேட்டூர் அணையின் நீர்வரத்து நேற்றிரவு நிலவரப்படி வினாடிக்கு 2281 கன அடியாக குறைந்து விட்டது. அதனால், அணையின் நீர்மட்டம் 84 அடியாகவும், நீர் இருப்பு 46 டி.எம்.சியாகவும் சரிந்து விட்டது. இது மேட்டூர் அணையின் மொத்தக் கொள்ளளவான 93.47 டி.எம்.சியில் பாதிக்கும் குறைவு, அதாவது 49.21% மட்டுமே ஆகும். இது சம்பா சாகுபடியை வெற்றிகரமாக சாத்தியமாக்குவதற்கு போதுமானது அல்ல. சம்பா சாகுபடியை வெற்றிகரமாக நிறைவு செய்ய செப்டம்பர் மாதத்தில் இருந்து பிப்ரவரி மாதம் வரை, சாகுபடி தொடங்கும் காலத்தைப் பொறுத்து 140 முதல் 160 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும். இதில் வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் பெய்தால் 50 முதல் 60 டி.எம்.சி வரை தண்ணீர் கிடைக்கும். அத்தகைய சூழலில் 100 முதல் 110 டி.எம்.சி நீர் மேட்டூர் அணையில் இருந்து தான் விடுவிக்கப்பட வேண்டும். ஆனால், இன்றைய சூழலில் அதற்கு வாய்ப்பே இல்லை. மேட்டூர் அணையிலிருந்து 35 டி.எம்.சி வரை தண்ணீர் திறக்க முடியும் எனும் நிலையில், மீதமுள்ள நீரை கர்நாடகத்திடமிருந்து தான் பெற வேண்டும். காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, செப்டம்பர் 22&ஆம் தேதி வரை தமிழகத்திற்கு காவிரியில் 113.33 டி.எம்.சி நீரை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், வெறும் 43 டி.எம்.சி நீரை மட்டுமே கர்நாடகம் வழங்கியுள்ளது. இன்னும் 70 டி.எம்.சி நீரை கர்நாடகம் வழங்க வேண்டிய நிலையில், அங்குள்ள அணைகளில் 60 டி.எம்.சி நீர் மட்டுமே உள்ளது. அதிலும் 37 டிஎம்சி நீரை மட்டுமே திறக்க முடியும். கர்நாடக அணைகளுக்கு வினாடிக்கு 6695 கன அடி நீர் மட்டுமே வரும் நிலையில், அணைகளிலிருந்து வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. அதனால், அடுத்த ஓரிரு நாள்களில் தமிழகத்திற்கான நீர்திறப்பு நிறுத்தப்படும் ஆபத்து உள்ளது. இந்த நிலையில், சம்பா சாகுபடியை வெற்றிகரமாக முடிக்கலாம் என்ற நம்பிக்கையை காவிரி பாசன மாவட்டங்களைச் சேர்ந்த உழவர்களிடம் தமிழ்நாடு அரசு எவ்வாறு ஏற்படுத்தப் போகிறது? என்பது தான் இப்போதைய வினாவாகும். காவிரி பாசன மாவட்டங்களில் 14 லட்சம் ஏக்கரில் சம்பா, 4 லட்சம் ஏக்கரில் தாளடி என மொத்தம் 18 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும். காவிரியில் தண்ணீர் திறக்கப்படாத நிலையில் 40% பரப்பளவில் சம்பா அல்லது தாளடி சாகுபடி செய்ய வாய்ப்பில்லை. அந்த நிலங்களில் குறுவை சாகுபடி செய்யப்படாத நிலையில், இப்போது சம்பா சாகுபடியும் செய்யப்படவில்லை என்றால், அந்த விவசாயிகள் ஓராண்டு முழுமைக்குமான வாழ்வாதாரத்தை இழப்பார்கள். இதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அதனால், அந்த உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதம் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். மீதமுள்ள 60% பரப்பளவில் நிலத்தடி நீரை ஆதாரமாகக் கொண்டு சம்பா அல்லது தாளடி சாகுபடி செய்ய முடியும். அதை வெற்றிகரமாக செய்ய வேண்டுமானால் காவிரி பாசன மாவட்டங்களில் பிப்ரவரி மாதம் வரை, பருவமழை பெய்யும் நாள்களைத் தவிர, மற்ற நாள்களில் தடையற்ற மும்முனை மின்சாரம் தேவை. ஆனால், கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் நடைமுறையில் உள்ள கடும்மின்வெட்டை சமாளிக்க முடியாமல் தமிழக அரசு திணறிக் கொண்டிருக்கும் நிலையில் இது சாத்தியமா? என்பது தெரியவில்லை. அக்டோபர் கடைசி வாரம் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும், மழையால் சம்பா பயிர்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் வேண்டும் என்றால் செப்டம்பர் மாத இறுதிக்குள் நடவுப் பணிகளை நிறைவு செய்ய வேண்டும். சம்பா அல்லது தாளடி சாகுபடிக்கான அடிப்படைப் பணிகள் கூட இன்னும் தொடங்கப் படாத நிலையில், நாற்றங்கால்களை உருவாக்கி, அதிலிருந்து நாற்றுகளை எடுத்து நடவு செய்வதற்கு வாய்ப்பு இல்லை. நேரடி விதைப்பு மட்டும் தான் டெல்டா விவசாயிகள் முன் உள்ள ஒரே வாய்ப்பு ஆகும். இத்தகைய நெருக்கடியான சூழலில் சம்பா அல்லது தாளடி சாகுபடியை எவ்வாறு மேற்கொள்வது? என்பது குறித்த ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் விவசாயிகளுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும். நிலத்தடி நீரைக் கொண்டு சம்பா அல்லது தாளடி சாகுபடி செய்ய விரும்பும் உழவர்களுக்கு தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதையும், விதை நெல், உரம், நுண்ணூட்டச் சத்துகள் உள்ளிட்டவை தாராளமாக கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக சிறப்பு சம்பா தொகுப்பு உதவியாக ஏக்கருக்கு ரூ.10,000 வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/is-samba-cultivation-feasible-what-is-the-governments-advice-to-farmers-anbumani-asks




