இன்று லாரிகள், பேருந்துகள், கப்பல்கள், ரெயில்கள், விவசாய இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள் என பல்வேறு துறைகளில் முக்கிய பங்கு வகிக்கும் டீசல் என்ஜின், தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். இந்த இயந்திரத்தின் பின்னணியில் இருந்தவர் ஜெர்மனியைச் சேர்ந்த இயந்திரப் பொறியாளர் ருடால்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல். ஆனால் உலகையே மாற்றிய இந்த கண்டுபிடிப்பின் சொந்தக்காரரான டீசலின் வாழ்க்கையின் முடிவு மட்டும் இன்றுவரை மர்மமாகவே உள்ளது. இயந்திரங்கள் மீது சிறு வயதிலேயே ஆர்வம் ருடால்ப் டீசல் 1858-ம் ஆண்டு பிரான்சின் பாரிஸில் பிறந்தார். சிறு வயது முதலே இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் மீது அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. 1870-ம் ஆண்டு பிராங்கோ-பிரஷியப் போர் தொடங்கியபோது, அவரது குடும்பம் பிரான்சை விட்டு லண்டனுக்கு குடிபெயர்ந்தது. பின்னர் ஜெர்மனியில் கல்வியைத் தொடர்ந்த டீசல், ஆக்ஸ்பர்க் தொழிற்கல்விக் கூடத்தில் பயின்றார். படிப்பில் சிறந்து விளங்கிய அவர், இயந்திரங்களின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டினார். பட்டப்படிப்பை முடித்த பிறகு 1880-ம் ஆண்டு பாரிஸில் உள்ள ஐஸ் மெஷின் நிறுவனத்தில் குளிர்சாதனப் பொறியாளராக பணியில் சேர்ந்தார். அவரது திறமையால் அடுத்த ஆண்டிலேயே ஆலையின் மேலாளராக உயர்ந்தார். நீராவி என்ஜின் அந்த காலத்தில் தொழிற்சாலைகளில் பெரும்பாலும் நிலக்கரியை எரித்து இயக்கப்படும் நீராவி என்ஜின்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் அவற்றில் அதிக அளவு எரிபொருள் வீணாகிறது என்பதை டீசல் கவனித்தார். “குறைந்த எரிபொருளில் அதிக ஆற்றலை எப்படி பெறுவது?” என்ற கேள்வி அவரது ஆராய்ச்சியின் அடிப்படையாக மாறியது. டீசல் என்ஜின் பல ஆண்டுகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்த அவர், வேர்க்கடலை மற்றும் தாவர எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு எரிபொருட்களைக் கொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டார். பல மாதிரிகளை உருவாக்கி தோல்விகளையும் சந்தித்தார். ஆனால் அவர் தனது முயற்சியை கைவிடவில்லை. 10 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து பல மாதிரியான என்ஜின்களை வடிவமைத்தார். அதுவே பின்னர் அவரது பெயரால் ‘டீசல் என்ஜின்’ என உலகம் முழுவதும் அறியப்பட்டது. காப்புரிமை டீசல் தனது கண்டுபிடிப்பு தொடர்பான ஆய்வுகளை வெளியிட்டதுடன், 1893-ம் ஆண்டு தனது என்ஜினுக்கான காப்புரிமையையும் பெற்றார். 1897-ம் ஆண்டு 25 குதிரைத்திறன் கொண்ட நான்கு-ஸ்ட்ரோக் ஒற்றை சிலிண்டர் என்ஜினை வெற்றிகரமாக உருவாக்கினார். 1898-ம் ஆண்டு முனிச் கண்காட்சியில் இந்த இயந்திரம் காட்சிப்படுத்தப்பட்ட பிறகு, உலக நாடுகளின் கவனம் டீசல் என்ஜின் மீது திரும்பியது. குறைந்த எரிபொருளில் அதிக செயல்திறன் வழங்கியதால், தொழிற்சாலைகள் முதல் கனரக வாகனங்கள் வரை பல துறைகளில் இதன் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. டீசல் என்ஜின் எப்படி வேலை செய்கிறது? பெட்ரோல் என்ஜினில் எரிபொருளை பற்றவைக்க ஸ்பார்க் பிளக் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் டீசல் என்ஜினில் இந்த முறை கிடையாது. முதலில் சிலிண்டருக்குள் காற்று இழுக்கப்படுகிறது. பின்னர் பிஸ்டன் அந்தக் காற்றை அதிக அழுத்தத்துக்கு உட்படுத்துகிறது. இதனால் காற்றின் வெப்பநிலை மிக அதிகமாகிறது. அந்த நேரத்தில் டீசல் எரிபொருள் மிக நுண்ணிய துளிகளாக சிலிண்டருக்குள் செலுத்தப்படுகிறது. அதிக வெப்பநிலையில் இருக்கும் காற்றுடன் எரிபொருள் கலக்கும்போது அது தானாகவே பற்றிக்கொள்கிறது. இதனால் உருவாகும் அதிக அழுத்தம் பிஸ்டனை கீழ்நோக்கி தள்ளுகிறது. பிஸ்டனின் இந்த இயக்கம் இயந்திரத்துக்குத் தேவையான சக்தியாக மாற்றப்படுகிறது. பின்னர் எரிந்த வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. இந்த செயல்முறை தொடர்ந்து நடைபெறுவதன் மூலமே டீசல் என்ஜின் இயங்குகிறது. லாரி முதல் கப்பல் வரை டீசல் என்ஜினின் உண்மையான தாக்கம் பின்னர் தான் வெளிப்பட்டது. கனரக பொருட்களை அதிக தூரம் கொண்டு செல்ல வேண்டிய லாரிகள் மற்றும் பேருந்துகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. குறைந்த செலவில் அதிக சுமையை கையாளும் திறன் காரணமாக போக்குவரத்துத் துறையில் டீசல் என்ஜின்கள் வேகமாக பரவின. தொழிற்சாலைகள், ஜெனரேட்டர்கள், விவசாய இயந்திரங்கள், கட்டுமான இயந்திரங்கள், கப்பல்கள் என பல்வேறு துறைகளிலும் அதன் பயன்பாடு அதிகரித்தது. பின்னர் ரெயில்வே துறையிலும் டீசல் என்ஜின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் நீராவி என்ஜின்களுக்கு படிப்படியாக மாற்று உருவானது. புகழின் உச்சியில் இருந்தபோது… தனது கண்டுபிடிப்பால் ருடால்ப் டீசல் மிகப்பெரிய புகழையும் செல்வத்தையும் பெற்றார். ஆனால் அவரது வாழ்க்கையின் இறுதிக்கட்டம் யாரும் எதிர்பார்க்காத திருப்பத்தை சந்தித்தது. 1913-ம் ஆண்டு இங்கிலாந்து நோக்கி கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்தார். புதிய டீசல் என்ஜின் ஆலை தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பதுடன், நீர்மூழ்கிக் கப்பல்களில் தனது இயந்திரத்தை பயன்படுத்துவது குறித்து பிரிட்டிஷ் கடற்படையினருடன் ஆலோசனை நடத்தவும் அவர் திட்டமிட்டிருந்தார். பெல்ஜியத்திலிருந்து இங்கிலாந்துக்கு பயணம் செய்யும் போது, மர்மமான முறையில் காணாமல் போனார். பின்னர் அக்டோபர் 10, 1913 அன்று, வடக்கு கடலில் ஒரு சடலம் மிதந்தது. விசாரணையில், ருடால்ப் டீசலின் உடல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ருடால்ப் மிகவும் மன அழுத்தத்தில் இருந்ததால், தற்கொலை செய்து கொண்டார் என்றும் ஒரு தரப்பு கூறுகிறது. இருப்பினும் பலர் அவர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கின்றனர். இது இயற்கை மரணமா, கொலையா அல்லது தற்கொலையா என்பதை இன்றும் மக்களால் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. உலகின் மிக முக்கிய கண்டுபிடிப்பாகப் போற்றப்படும் டீசல் என்ஜினை உருவாக்கிய டீசல் தனது 55-வது வயதில் மறைந்தார். டீசலின் மரணத்திற்குப் பிறகு, விவசாய இயந்திரங்கள், கட்டிட இயந்திரங்கள் மற்றும் நவீன ஆட்டோமொபைல்கள் உட்பட பல பயன்பாடுகளில் அவரது இயந்திரம் நீராவி இயந்திரத்திற்கு மாற்றாக மாறியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/the-diesel-engine-that-powered-the-world-the-mysterious-death-of-the-scientist-who-created-it




