சென்னை, கரும்பு சாகுபடியை பெருக்கி படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை தொடர்ந்து இயக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அரவைப் பருவம் தொடங்கவுள்ள நிலையில், படாளத்தில் உள்ள மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், ஒப்பந்த பணியாளர் நியமனம் உள்ளிட்ட எந்தப் பணிகளும் இன்னும் தொடங்கப்படவில்லை. நாடு முழுவதும் சர்க்கரைக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவும் சூழலில், கூட்டுறவு ஆலைகள் மூலம் சர்க்கரை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகளை தமிழக அரசின் சர்க்கரைத் துறை தவறவிடுவது சரியானதல்ல. செங்கல்பட்டு மாவட்டம் படாளத்தில் 1961-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தமிழ்நாட்டின் பழமையான மற்றும் அதிக அரவைத் திறன் கொண்ட சர்க்கரை ஆலைகளில் ஒன்றாகும். ஒரு நாளைக்கு 2,500 டன் கரும்பு அரவைத் திறன் கொண்ட படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை சர்க்கரை உற்பத்தி நடைபெறும். அதற்கான முதல் நடவடிக்கையாக ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியில் இணைக்கும் நடைமுறை ஜூலை மாதத்தில் தொடங்கும். ஆனால், நடப்பாண்டில் ஜூலைக்குப் பிறகு ஆகஸ்ட் மாதமும் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் பிறந்துவிட்ட நிலையில், இன்று வரை ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியில் இணைக்கும் நடைமுறை தொடங்கவில்லை. அதனால் படாளம் ஆலையை மூட அரசு திட்டமிட்டுள்ளதோ என்ற ஐயம் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, நிதிப்பற்றாக்குறை காரணமாக படாளம் சர்க்கரை ஆலையை நடப்பாண்டில் இயக்கும் முடிவை அரசு கைவிட்டு விட்டதாக வெளியாகியுள்ள செய்திகளும் இந்த ஆலையை நம்பியுள்ள 30 ஆயிரம் விவசாயிகளையும், நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறும் தொழிலாளர்களையும் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் சர்க்கரைத் துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்களித்த படாளம் சர்க்கரை ஆலையை மூட அரசு முடிவு செய்திருந்தால், அதற்கு ஒரே ஒரு நியாயமான காரணம் கூட கிடையாது. அதனால், அப்படி ஏதேனும் திட்டம் இருந்தால் அதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 29,632 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். திண்டிவனம், வானூர், மேல்மருவத்தூர், படாளம், செங்கல்பட்டு, மதுராந்தகம், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட 10 கரும்பு கோட்டங்களில் உள்ள 1,62,327 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படும் கரும்பு இந்த ஆலைக்கு வழங்கப்பட வேண்டும். அதன்படி, தொடக்கத்தில் ஆண்டுக்கு 90 ஆயிரம் டன் கரும்பு அரவையுடன் உற்பத்தியைத் தொடங்கிய படாளம் ஆலை, ஒரு கட்டத்தில் ஆண்டுக்கு 6 லட்சம் டன் வரை கரும்பு அரவை செய்து சாதனை படைத்தது. ஒரு கட்டத்தில் ஆலையை தனியாருக்கு தாரை வார்க்கும் நோக்கத்துடன் கரும்பு அரவை படிப்படியாக குறைக்கப்பட்டு, 2001-ம் ஆண்டில் படாளம் சர்க்கரை ஆலை மூடப்பட்டது. அதன்பின் ஆலையை இயக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், 2008-09ம் ஆண்டுகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அடுத்தடுத்து இரு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் பயனாக அப்போதிருந்த அரசு ரூ.34 கோடியில் ஆலையை சீரமைத்து 2010-ம் ஆண்டு முதல் இயக்கத் தொடங்கியது. அதன்பின் கரும்பு அரவை 2022-23ம் ஆண்டில் 2 லட்சம் டன் என்ற அளவைக் கடந்தது. அதன்பின், கடந்த இரு ஆண்டுகளாக கரும்பு அரவை 69,360 டன், 53,928 டன்னாக குறைந்தது. நடப்பாண்டில் குறைந்தது 67,500 டன் கரும்பு அரவை செய்ய முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில்தான், அதை கைவிட்டு ஆலையை மூட முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. தமிழக அரசு நினைத்தால் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்குட்பட்ட பகுதிகளில் 60 லட்சம் டன் வரை கரும்பு சாகுபடி செய்ய வைக்க முடியும். ஆனால், அதற்கான ஏற்பாடுகளை ஆலை நிர்வாகமும், அரசும் மேற்கொள்ளவில்லை. ஒரு சர்க்கரை ஆலையில் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கரும்பு சாகுபடியை அதிகரிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட ஆலையின் கரும்பு அலுவலர், துணை கரும்பு அலுவலர் ஆகியோரின் பணி ஆகும். ஆனால், இந்த இரு பணியிடங்களும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள நிலையில், கரும்பு சாகுபடியை எவ்வாறு அதிகரிக்க முடியும்? மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட பகுதிகளில் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்ததுதான் ஆலையின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணம் ஆகும். மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மேலாண் இயக்குனர், அலுவலக மேலாளர், தொழிலாளர் நல அதிகாரி, தலைமைப் பொறியாளர் ஆகிய 4 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். ஆலையில் மொத்தம் 535 பணியிடங்கள் இருக்கும் போதிலும் கூட, மேற்கண்ட நால்வரைத் தவிர வேறு எவரும் பணியில் இல்லை. தேவையின்போது பயன்படுத்திக் கொள்ள 381 ஒப்பந்தப் பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருமே ஓய்வு அல்லது விருப்ப ஓய்வு பெற்றவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் அரவைக் காலத்திலும், இவர்களில் 244 பேர் அரவையில்லா காலத்திலும் பணியில் இருக்க வேண்டும். ஆனால், இவர்களில் ஒருவர் கூட நடப்பாண்டில் பணிக்கு அழைக்கப்படவில்லை. அதனால்தான் படாளம் சர்க்கரை ஆலை முடங்கிக் கிடக்கிறது. தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடியை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன்தான், கடந்த ஆண்டில் கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள கொள்முதல் விலையான டன்னுக்கு 3,290.50 ரூபாயுடன், ஊக்கத்தொகையாக ரூ.709.50 சேர்த்து டன்னுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. நடப்பாண்டில் இது ரூ.4,300 வரை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இனிவரும் காலங்களில் கரும்பு சாகுபடி அதிகரிக்கும். இத்தகைய சூழலில் பழமையும், பெருமையும் வாய்ந்த ஆலையை மூட நினைப்பது நியாயமல்ல. இந்திய சந்தையில் சர்க்கரைக்கான தேவை அதிகரித்து, 50 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ள நிலையில், படாளம் ஆலைக்கு புத்துயிரூட்டப்பட்டால், அது அடுத்த சில ஆண்டுகளில் லாபம் ஈட்டத் தொடங்கிவிடும். இதைக் கருத்தில் கொண்டு பணியாளர்களின் தேவைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதற்கேற்ற வகையில் முதலில் ஒப்பந்த பணியாளர்களையும், பின்னர் படிப்படியாக நிரந்தர பணியாளர்களையும் நியமிக்க வேண்டும். அவர்கள் மூலம் கரும்பு சாகுபடி பரப்பை அதிகரித்து படாளம் ஆலை தொடர்ந்து இயங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-sugarcane-cultivation-keep-padalam-cooperative-sugar-mill-running-anbumani-ramadoss




