சென்னை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “சில வாரங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி சபரிவர்மன், காவல் துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட அதிர்வலைகள் இன்னும் அடங்கவில்லை. அதற்குள் தூத்துக்குடி காவல்துறையினர் கடந்த 17.07.2026 ஆம் தேதி விசாரணைக்கு அழைத்துச் சென்ற அருணாசலம் என்பவரின் காவல் மரணம் நிகழ்ந்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. காவல்துறையினர் விசாரணைக்கு ஒருவரை அழைத்துச் செல்ல வேண்டும் எனில், என்னென்ன விதிமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டுகளும் பல தீர்ப்புகளில் வலியுறுத்தியுள்ளன. பி.என்.எஸ்.எஸ். சட்டத்தின் சில பிரிவுகளும் விசாரணை நடைமுறை குறித்து வழிகாட்டியுள்ளன. இவைகள் எதனையும் கருத்தில் கொள்ளாமல், காவல் துறையினர் அதிகார அத்துமீறலில் தொடர்ந்து ஈடுபடுவதும், இதில் மனித உயிர்கள் பலியாவதுமான கொடூர சம்பவங்கள் நிகழ்ந்து வருவதும் கவலையளிக்கிறது. அது, தமிழ்நாடு காவல்துறை தனது துறையை வழிநடத்தும் நிர்வாகத் திறனை இழந்து விட்டதோ? என்ற ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சாத்தான்குளம் காவல் துறையினரால் தந்தையும், மகனும் கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு காவல்துறையின் மனப் போக்கிலும், நடைமுறையிலும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதையே கன்னியாகுமரி, தூத்துக்குடி சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. விசாரணைக்கு அழைத்துச் செல்வோர் உயிருக்கும், கண்ணியத்திற்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் காவல்துறையினருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும். தவறு செய்த காவல் துறையினர் மீது மேலும் கடுமையான நடவடிக்கை எடுத்து, தண்டனையும் விதிக்க தக்க விதிமுறைகள் உருவாக்க வேண்டும். காவல் மரணங்களை முற்றிலுமாக தடுக்கும் வகையில் காவல்துறை நிர்வாகத்தை சீரமைக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன், தூத்துக்குடி காவல் மரணத்தில் பலியான அருணாசலம் குடும்பத்திற்கு இழப்பீடும், நீதியும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-must-not-allow-custodial-deaths-to-continue-communist-party-of-india




