வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் மாலை நேரத்துச் சூரியன் மெல்ல மறைய, அந்த வீட்டின் வரவேற்பறையில் ஒருவித அமைதியான வெளிச்சம் படர்ந்திருந்தது. ஐம்பது வயதைத் தொட்டிருந்த மாலதி, அடர் நீல நிறக் கைத்தறிச் சேலையில், லேசான புன்னகையோடு சுடச்சுடக் காபியைப் பருகிக் கொண்டிருந்தாள். கூந்தல் தளர்வாக முடியப்பட்டு, நெற்றியில் சிறிய பொட்டுடன் அவள் தோற்றத்தில் ஒரு தனி கம்பீரம் தெரிந்தது. அப்போதுதான் பக்கத்து வீட்டு விசாலாட்சி உள்ளே வந்தாள். மாலதியின் இந்தத் தோற்றத்தைக் கண்டதும் அவளது புருவங்கள் சற்றே உயர்ந்தன. "என்னடி மாலதி. சுந்தரம் தவறி ஆறு மாசம் கூட ஆகல. அதுக்குள்ள பழையபடி நல்லா உடுத்திட்டு, சிரிச்சு பேசிட்டு வலம் வர்ற? உனக்கு ஏமாற்றமும் இல்லை, கணவரைப் பிரிஞ்ச கவலையும் இல்லாத மாதிரி வெளியக் காட்டிக்கிறியே!" – விசாலாட்சியின் குரலில் சற்றே வியப்பும், மெல்லிய சுடலும் கலந்து இருந்தது. மாலதி அமைதியாகக் கோப்பையைக் கீழே வைத்தாள். அவளது கண்களில் கோபத்திற்குப் பதில் ஒரு ஆழமான முதிர்ச்சியும் தெளிவும் மின்னியது. "விசாலாக்கா. நான் ஏன் இயல்பா இருக்கேன்னு தோணுதா? சுந்தரத்தோட நான் வாழ்ந்த அந்த 30 வருஷ வாழ்க்கை. அது ரொம்ப நிறைவானதுக்கா. அன்பா, ஆசையா, அழகா நாங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு குடும்பம் நடத்தினோம். அந்த 30 வருஷத்துல அவர் எனக்குக் கொடுத்த அன்பும் நம்பிக்கையும்தான் என்னை இன்னைக்கும் நிமிர்ந்து நிற்க வைக்குது." "ஞாபகம் இருக்காக்கா. ஆறு மாசத்துக்கு முன்னாடி, மருத்துவமனையில அவர் கடைசி நாட்களை எண்ணிட்டு இருந்தப்போ, ஒரு நாள் என் கையை இறுக்கப் பிடிச்சுட்டே சொன்னாரு. 'மாலதி, என் முடிவு எனக்கு நல்லாவே தெரியுது. நான் போன பிறகு நீ நாலு செங்கலுக்கு நடுவுல முடங்கிடக் கூடாது. உனக்குப் பிடிச்ச சேலையைக் கட்டு, வாசல்ல பெரிய கோலம் போடு, பிள்ளைகளோட சந்தோஷமா இரு. நீ தெளிவா வாழறதுதான் எனக்கு நீ செய்ற உண்மையான அஞ்சலி'ன்னு என் மனசை கொஞ்சம் கொஞ்சமா தயார் செஞ்சதே அவர்தான்." விசாலாட்சி எதுவும் பேச முடியாமல் அமைதியானாள். மாலதி தொடர்ந்தாள்: "அதுமட்டுமில்லக்கா. அவர் போன அப்புறம் என் பையனும் பொண்ணும் 'அம்மா, அப்பா உன்னை எப்படி சந்தோஷமா வச்சிருந்தாரோ அப்படி நீ வாழணும்'னு எனக்குப் பெரிய சப்போர்ட்டா இருக்காங்க. என் பிறந்த வீட்டுப் பக்கமும் சரி, சுந்தரத்தோட குடும்பத்துலயும் சரி. என்னை ஒரு விதவையாப் பார்க்காம, அன்பா தாங்குறாங்க. எல்லாவற்றிற்கும் மேல. காலம் எனக்குக் கத்துக் கொடுத்த முதிர்ச்சி (Maturity). 'பிறப்பும் இறப்பும் இயற்கைதான்' என்ற அந்த ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance) எனக்குள்ள வந்துடுச்சு. அதை முழுசா புரிஞ்சு ஏத்துக்கிட்டதாலதான், என்னை நானா. என் விருப்பப்படி தெளிவா, நேர்த்தியாக வெளிப்படுத்திக்க முடியுது." பேசி முடித்துவிட்டு மாலதி புன்னகையோடு விசாலாட்சியை வழியனுப்பி வைத்தாள். விசாலாட்சி சென்றதும் வீட்டின் பிரதானக் கதவை மெல்லச் சாத்தினாள். அடுத்த கணம். அந்த வரவேற்பறை ஒரு கனத்த நிசப்தத்தில் மூழ்கியது. வெளி உலகிற்குத் தான் காட்டிய கம்பீரத்தை மெல்லக் கழற்றி வைத்தவள் போல, மாலதி சுவரில் தொங்கிய சுந்தரத்தின் புகைப்படத்திற்கு அருகில் சென்றாள். புகைப்படச் சட்டத்தைத் தன் மெல்லிய விரல்களால் தடவினாள். பகலெல்லாம் பிறர் முன் காட்டிய அந்த உறுதியும் புன்னகையும் மெல்ல மறைய, அவளது கண்களிலிருந்து இரு துளிக் கண்ணீர் கன்னங்களில் இறங்கியது. அவர் கடைசியாகப் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தையும், அவர் பயன்படுத்திய பித்தளைக் காபி டம்ளரையும் எடுத்துத் தன் மடியில் வைத்துக்கொண்டாள். "சுந்தரம். எல்லார் முன்னாடியும் நீங்க சொன்ன மாதிரி நான் பலமாத்தான் இருக்கேன். ஆனா. இந்தத் தனிமைதான் என்னை ஆட்டிப்படைக்குது. உங்க நினைவுகள் இல்லாத ஒரு நொடி கூட என் வாழ்க்கையில இல்லை." என்று மெல்லிய குரலில் புகைப்படத்தைப் பார்த்துக் முணுமுணுத்தாள். நாம் பார்க்கும் சில மணி நேரங்களில் அவள் காட்டும் முகம் வேறாகவும், தனிமையில் வேறாகவும் இருக்கத்தானே செய்யும்? தன் கவலையைப் பிறர் முன் காட்டிப் பரிதாபத்தைத் தேட விரும்பாமல், தான் பலத்தோடு இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் அவளது கம்பீரத்திற்குப் பின்னே, இந்தத் தனிமையின் வலி மட்டுமே சாட்சியாக நின்றது. வெளி உலகிற்கு அவள் ஒரு முதிர்ச்சியான பெண்; தனிமையில் அவள் இன்னும் சுந்தரத்தின் அன்பான மாலதிதான். -ஆர். சுந்தரராஜன் வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம். இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே. Link: விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம். உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/literature/how-malathi-honors-her-late-husbands-last-wish




