வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் முப்பத்து ஐந்து வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு இது. ஒருநாள் மாலை நான் காந்திபுரத்திலிந்து டவுன்ஹால் மாநகராட்சி அலுவலகம் சென்றேன். அப்போதெல்லாம் அங்குள்ள நடைமேடை மற்றும் சாலை ஓரத்தில் கரித்துண்டு ஓவியர்கள் பலர் சிவபெருமான்,ராமர், கிருஷ்ணர், ஏசுநாதர், மேரிமாதா மற்றும் அம்மன் உருவங்களை மிகமிக தத்ரூபமாக வரைந்து வைத்திருப்பார்கள். அவற்றை கடந்து செல்பவர்கள் ரசிக்கா விட்டாலும் பக்தியின் பொருட்டு நாணயங்களை வீசிவிட்டு செல்வார்கள். இது அன்றாட வாடிக்கை என அனைவர்க்கும் தெரியும். அன்று நான் பஸ்விட்டு இறங்கும் போது ஒரு தோழர் வரைந்திருந்த ஏசுநாதர் ஓவியம் கண்ணில் பட்டது.நேர்த்தியாக இருந்த அந்த ஓவியத்தின் கீழே.நன்Ri.என்றும் எழுதப்படடிருந்தது. அதைக்கண்ட நான் குனிந்து அங்கிருந்த சாக்பீஸை எடுத்து இடையின " ரி" யை வல்லின "றி" ஆக மாற்றி ' நன்றி' ஆக்கிவிட்டு மாநகராட்சி அலுவலகத்திற்குள் சென்று விட்டேன். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்திற்கு பிறகு அலுவலக அறையை விட்டு வெளியில் வரும்போது அந்த வளாகத்திற்குள் இருந்த மரத்தடி மேடையில் அமர்ந்திருந்த ஒரு அம்மா என்னை சத்தமாக அழைத்தார். வீட்டுக்கு செல்லும் அவசரத்தில் இருந்தாலும் அவரது கௌரவமான,வயது முதிர்ந்த தோற்றத்துக்காகவே அருகில் சென்றேன். உடனே அவர் என் முகத்துக்கு அருகே தன்னிரு கைகளால் நெட்டி முறித்து என்வலதுகை பற்றி முத்தம் கொடுத்தார். எனக்கு சிறிது பயமாக இருந்தது. மாறிய மனநலம் உள்ளவரோ என்றுகூட ஒரு கணம் நினைத்தேன். "நீ தமிழ்டீச்சராம்மா?, எந்தப்பள்ளி?" என்றார். "இல்லை அம்மா! ஏன் கேட்கறீங்க? என்றேன். "நான் டீச்சர், விரைவில் ஓய்வு பெறப்போகிறேன். நான் என் சர்வீஸில் எத்தனையோ முறை எதிர்பார்த்துஏமாந்திருக்கிறேன், சொல்லாமல் பிழை திருத்தும் பொறுப்பில் என் மாணவர்கள் யாரும் இருக்கமாட்டார்களா, மாறமாட்டார்களா,என்று ஏங்கி இருககின்றேன். இன்று உனது செயல் என் வருத்தத்தை போக்கி எனக்கு மன நிறைவை தந்தது" என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. "அதாம்மா, வெளியே நடைமேடை ஓவியத்தில்.நன்றி.யை சரிபடுத்தினாயே, அதைத் தான் சொல்றேன். நான் ஆலாந்துறை பஸ் பிடித்து போக வேண்டும். ஆனாலும் மன நிறைவுடன் உன்னை பாராட்டியே ஆக வேண்டும்னு தான் கூப்பிட்டேன். உனக்கு கேக்கலை. மறுபடி உன்னைப்பார்க்கும் சமயம் கிடைக்காது. பார்த்தாலும் முகம் கண்டிப்பாக மறந்து போகும். வயசாயிடுச்சு இல்லையா எனக்கு. அதான் பஸ் போனா பரவாயில்லன்னு வந்து நீ வர்ற வரைக்கும் இங்க காத்திட்டிருந்தேன் ", என்றார். எனக்கு தலையே சுற்றியது. இப்படி ஒரு டீச்சரா, ஒரு நொடிப்பொழுதில் நடந்த ஓரெழுத்து மாற்றத்துக்கு இத்தனை கனமான பாராட்டா! என்ன மனுஷி இவர்! விருதுகள் இவருக்கல்லவா கிடைக்க வேண்டும், என்னைப்போய் இவர் இப்படி பாராட்டுகிறாரே என்று கூனி குறுகிப்போனேன். சந்தோஷத்தை வெளிப்படுத்தி நன்றிகூறி பாதுகாப்பாக செல்ல சொன்னேன். அவர் மீண்டும் ஒருமுறை முத்தமிட்டு சென்றார். எனக்கு ஆஸ்கார் விருதே கிடைத்த மாதிரி இருந்தது. இதில் என்ன வேடிக்கை என்றால் என்பெயரை அவரோ,அவர் பெயரை நானோ கேட்டு தெரிந்து கொள்ளவில்லை. "ஆனால் ஆலாந்துறை அம்மா! நீங்க இப்ப இருக்கீங்களோ இல்லையோ தெரியாது. ஆனால் நீங்க தந்த அந்த முத்தத்தின் ஈரம் மட்டும் இன்னும் காயாமல் நன்றியாக இன்றளவும் என் நெஞ்சத்தை நனைத்துக் கொண்டே உள்ளது!" அடுத்து இரக்கம் தொடுத்த மனம்! வயதான மாமியாருக்காக சில அத்தியாவசியமான மருத்துவ உபகரணங்கள் வாங்க கோவையில் ஒரு சர்ஜிகல் ஸ்டோருக்கு சென்றிருந்த போது மனதை நெகிழ்வித்த நிகழ்ச்சி. கடையில் கூட்டமாக இருந்தது. எங்களில் மூன்று பேருக்கு முன்னால் பில்போட்டுக் கொண்டுஇருந்த இளைஞன் திடீரென பணம் வைத்திருந்த பர்ஸை காணவில்லை என அலறினான். தான் மேட்டுப் பாளையத்தில் இருந்து வருவதாகவும் காந்திபுரத்தில் ஏழாம் நமாபர் பஸ் மாறி ஏறும் போது இருந்ததாகவும் இப்போது தான் காணவில்லை என்றும் கூறி அழும் நிலைக்கு வந்துவிட்டான். பொருட்கள் உடனடி தேவை என்பதால், கடைக்காரரிடம் மூன்று மணிக்குள் பணத்தை தந்து விடுகிறேன் என்று மன்றாடினான். பணயமாக தன் மொபைல் போனை கூட வைத்துக் கொள்ளசொன்னான். ஆனால் கடைக்காரர் ஒத்துக் கொள்ளவில்லை. பரிதாபப்பட்ட மற்றவர்கள் ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு அவனுக்கு உதவ நினைத்து சேகரித்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் இருந்த ஒருவருக்கு போன்கால் வந்தது. பேசும்போது அவர் முகம் மாறுவதை கண்டோம். பிறகு எங்களிடம் வந்த அவர் யாரிடமும் பணம் கலெக்ட் பண்ண வேண்டாமென்றார். ஏன் யாராவது கொண்டு வருகிறார்களாஎன்று கேட்டதற்கு" இல்லை யாருக்காக பொருள் வாங்க வந்தேனோ அவர் அதாவது என் அம்மா இறந்து விட்டதாக செய்தி வந்தது. இனி எப்போதும் அவருக்கு இது எதுவும் தேவைப்படாது. தம்பி கொஞ்சம் இங்க வா! இந்தாப்பா! இந்தப்பணத்தை கட்டி உனக்கு தேவையானதை வாங்கிட்டு உடனே கிளம்பு,மீதியை செலவுக்கு வச்சுக்க.பாத்து ஜாக்கிரதையா போ பத்திரம்"என்று ஏழாயிரத்தை அந்தப்பையனிடம் திணித்து விட்டு விரைந்து சென்று விட்டார்.வேறு எதுவும் சொல்லவில்லை. பார்த்துட்டு இருந்த நாங்கள் மெய் சிலிர்த்து திகைத்து நின்றோம். அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் பிறர் கஷ்டத்தை உணர்ந்து உதவிய ஊர்பேர் தெரியாத அந்த உன்னத மனிதருக்கு கோடான கோடி நன்றிகள்! மொழிப்பற்று மிக்க மனம்! காந்திபுரத்திலிருந்து சீரபாளையம்செல்லும் நாற்பத்து ஏழாம் நம்பர் பஸ்ஸில் டவுன்ஹால் செல்ல ஏறினேன். நடுத்தர வயது கண்டக்டர் ஒருவர் மிகப் பொறுமையாகவும், பொறுப்பாகவும்,சுறுசுறுப்பாக சிரித்துக்கொண்டும் டிக்கெட் கொடுத்துக்கொண்டு வந்தார். ஆனால் அவர் முகத்தில் ஒரு சோகம் தெரிந்தது. டிக்கெட்டை கையில் வாங்கியவுடன் பெரியவர்கள் ஒருவரைப்பாத்து ஒருவர் புன்னகைத்து கொண்டனர். சிறு வயதினர் சிலர் நையாண்டி செய்து கிண்டலடித்தனர்.ஆனால் எதையும் கண்டு கொள்ளாமல் அவர் அவரது பணியை செய்து கொண்டிருந்தார். எல்லாருமே அவரை ஒருமாதிரியாகத்தான் பார்த்தனர். அவரது செய்கையை உற்று நோக்கியவுடன்(கேட்டவுடன்) தான் காரணம் தெரிந்தது. கண்டக்டர் அனைவருடனும் தூய தமிழில் பேசியபடி பணியாற்றிக்கொண்டிருந்தார்.இந்த செயல் மற்றவங்களுக்கு ஏளனமாகவும் கேலிக்கு உரியதாகவும்தெரிந்திருக்கிறது. என்னருகில் வந்த அவரிடம்"சகோதரா! நகர் மன்றம் செல்லுவதற்கு ஒரு பயணச்சீட்டு தருகிறீர்களா", என்று சிரித்தபடி கேட்டேன். அவர் இதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை போலும். அன்றலர்ந்த தாமரையாய் முகத்தை மலர்த்திய அவர் சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக "இந்தாருங்கள் சகோதரி! நன்றி"என்று தந்தார். நான் இறங்கும் வரையில் அவர் முகத்தில் தங்கியிருந்த அந்த மகிழ்ச்சியை ரசித்தேன். எதிர் பார்த்தது நடக்கும்போது எல்லாமே மாறும் என்பது எப்பேர்பட்ட உண்மை! தங்களுடைய தமிழ் பற்றுக்கு நன்றி சகோதரா! இவர்களைப் போல் இன்னும் எத்தனையோ பேர் எங்காவது இருப்பார்கள். கண்ணில்பட்டால் வாழ்த்தி வணங்குவோம்! நாமும் நம் வாழ்வில் இவர்களைப் போல் இருக்க முயற்சிப்போம். - நீலவேணி தேவராஜன் வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம். இந்த வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப்பில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே. Link: விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம். உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/literature/my-vikatan-article-about-kindness-2




