சென்னை, சாலமன் பாப்பையா மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மதுரையை சேர்ந்த சாலமன் பப்பையா பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய இவர், தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆற்றிய உரைகளாலும் பிரபலமானவர். திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார். தமிழக அரசு சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழ் மொழி மற்றும் இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, 2021-ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 'பாய்ஸ்', 'சிவாஜி' உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதற்கிடையில், சமீப காலமாக சாலமன் பாப்பையா, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். சாலமன் பாப்பையா மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவை பின்வருமாறு:- நடிகர் சரத்குமார்: “அன்புப் பெரியோர்களே. அருமைத் தாய்மார்களே. இனிய குழந்தைகளே.” என்ற அன்பான குரலின் வாயிலாக " தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் நுழைந்து, தனது இனிய பேச்சாலும், நகைச்சுவை கலந்த நயமான தமிழாலும், பட்டிமன்ற மேடைகளைப் பண்பாட்டின் பெருமைமிக்க அரங்குகளாக மாற்றிய பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. தமிழ் மொழிக்கும், இலக்கிய, இலக்கண வளர்ச்சிக்கும் அவரது அர்ப்பணிப்பு அளப்பரியது. தமிழறிஞரின் மறைவு உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு மிகுந்த பேரிழப்பு" இயக்குநர் ஷங்கர்: "சாலமன் பாப்பையா அவர்கள் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. சிறந்த தமிழ் அறிஞராகவும், பேச்சாளராகவும் திகழ்ந்த அவரது பட்டிமன்ற நிகழ்ச்சிகளை ஒவ்வொரு தமிழ் விழாவின்போதும் மிகவும் ரசித்து பார்த்துள்ளேன். அவரது நகைச்சுவை, புத்திசாலித்தனம் மற்றும் சிறப்பான தீர்ப்புகளை இனி தவறவிடுவேன் என்பதை நினைக்கும்போது மனம் வேதனையடைகிறது. தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும் " பிரபு தேவா: "சாலமன் பாப்பையா ஐயா மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. தமிழின் சிறந்த குரலாக அவர் என்றும் நினைவுகூரப்படுவார்." இயக்குநர் சீனு ராமசாமி: "அவர் பெயர் ஒரு காரணப் பெயர் சாலமன் பாப்பையா ஐயா பட்டிமன்றத்திலும் வாழ்விலும் அவர் உண்மையில் சாலமன்தான். மதுரையின் நகரப் பகுதிகளிலும், புறநகர்களிலும், கிராமப்புறங்களிலும் சிறுவயது முதற்கொண்டு நாடிச் சென்று, முன்வரிசையில் அமர்ந்து ஐயாவின் பட்டிமன்றங்களை ரசித்தவன் நான். சிறுவயதிலேயே சிந்திக்கச் செய்தவர்; சிரிக்கச் செய்தவர். மேடைத் தர்க்க உரையாடல் வடிவத்தைப் பட்டிமன்றமாக நேர்த்தியாகவும் அறத்தோடும் தந்தவர் ஐயா. சங்கப் புலவர்கள் தொடங்கி சமகாலக் கவிஞர்கள் வரை அனைவரும் அவர் சொற்பொழிவாற்றிய நள்ளிரவுகளில் சாட்சியாய் வந்து நின்றார்கள். வேற்றுக் கல்லூரி மாணவனாயினும், அமெரிக்கன் கல்லூரியில் உங்கள் வகுப்பில் அமர்ந்து நான் பாடம் கேட்டவன்; நன்றியோடு வணங்குகிறேன். அமைதியில் நிறைக, எங்கள் மக்கள் தமிழே இதய அஞ்சலி" சூரி: "நம் இல்லங்களின் ஒவ்வொரு சிறப்பான நாளும் அவரது குரலோடுதான் தொடங்கியது. சமூக அக்கறை, பிள்ளை வளர்ப்பு, உறவுகளின் மேன்மை, அர்த்தமுள்ள வாழ்க்கை என ஒவ்வொன்றையும் தனது எளிமையான வார்த்தைகளால் நமக்குக் கற்றுத் தந்தவர் சாலமன் பாப்பையா அவர்கள். தமிழரின் அடையாளத்தையும், மதுரை மண்ணின் மணத்தையும் தனது பேச்சில் சுமந்து வந்த அந்தக் குரல் இன்று ஓய்ந்திருக்கலாம்… ஆனால் அவர் விதைத்த வாழ்க்கை நெறிகளும், தமிழுக்குச் சேர்த்த பெருமையும் தலைமுறைகள் கடந்தும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது மறைவு நம் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி." சசிகுமார்: "பண்டிகை நாட்களில் அனைத்து வீடுகளுக்குள் வந்து தமிழைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அந்த அன்பான குரல் இன்று ஓய்ந்துவிட்டது. தமிழை எளிமையாகப் புரிய வைத்த ஒரு ஆசான். கருத்தைச் சொல்லும்போதும் மற்றவர்கள் மனதைப் புண்படுத்தாமல் சொல்ல முடியும் என்பதை தன் பேச்சால் உணர்த்திய மனிதர்" முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/film-celebrities-offer-condolences-on-the-passing-of-debate-moderator-solomon-pappaiah




