பெருமாளுக்குரிய முக்கிய விரதங்களுள் ஒன்று, அனந்த விரதம். இது, 'அனந்த சதுர்த்தசி விரதம்' என்றும், 'அனந்த பத்மநாப விரதம்' என்றும் அழைக்கப்படுகிறது. 'அனந்த' என்றால் 'முடிவில்லாத' என்று பொருள். அதாவது, முடிவில்லாத அல்லது எல்லையற்ற நன்மைகளையும், ஆனந்தத்தையும் தரக்கூடிய விரதம் இதுவாகும். 'பத்மம்' என்றால் 'தாமரை'. பெருமாள் சயன கோலத்தில் பாற்கடலில் சயனித்தபோது, அவரது நாபிக் கமலத்தில் இருந்து தாமரை தோன்றி, அதிலிருந்து பிரம்ம தேவர் அவதரித்தார். இந்த நிகழ்வு நடைபெற்ற நாளே அனந்த சதுர்த்தசி எனப்படுகிறது. மேலும், இந்நாளில்தான் பெருமாள், ஆதிசேஷன் மீது அனந்த சயனம் கொண்டு காட்சி அளித்ததாகவும் ஐதீகம். விரதம் இருக்கும் பக்தர்கள், பூஜைக்கு பிறகு 'அனந்த சூத்திரம்' எனப்படும் புனித நூலைக் கட்டுகிறார்கள். இந்த கயிறானது 14 முடிச்சுகள் கொண்ட சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த 14 முடிச்சுகளும் பிரபஞ்சத்தின் 14 லோகங்களைக் குறிக்கின்றன. இது தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காத்து, வாழ்நாள் முழுவதும் அமைதியையும் செல்வத்தையும் தரும் என்பது நம்பிக்கை. பாரம்பரியமாக ஆண்களுக்கு வலது மணிக்கட்டிலும், பெண்களுக்கு இடது மணிக்கட்டிலும் இந்த அனந்த சூத்திரத்தை கட்டுகிறார்கள். புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தசியில் அனந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு ‘அனந்த விரதம்’ இன்று (25.9.2026) அனுஷ்டிக்கப்படுகிறது. நேற்று இரவு 11.18 மணிக்கு சதுர்த்தசி திதி தொடங்கியது. இன்று இரவு 11:06 மணி வரை இந்த திதி உள்ளது. விரதம் இருக்கும் பக்தர்கள் இரவு 11:06 மணி வரை பூஜை செய்யலாம். அனந்த விரதத்தின் பின்னணியில் மகாபாரதத்துடன் தொடர்புடைய ஒரு சுவாரஸ்யமான தகவல் தெரிவிக்கப்படுகிறது. பாண்டவர்கள் தங்கள் ராஜ்ஜியத்தையும் செல்வத்தையும் இழந்து கடுமையான துன்பங்களை அனுபவித்தபோது, பகவான் கிருஷ்ணர் அருளிய விரதம் இதுவாகும். அவர், பாண்டவர்களிடம் அனந்த விரதத்தைப் பற்றிக் கூறியதாக புராணங்களில் சொல்லப்படுகிறது. அந்த விரதத்தை நம்பிக்கையுடன் கடைப்பிடித்ததன் மூலம் பாண்டவர்கள் இழந்த ராஜ்ஜியத்தையும் செல்வத்தையும் மீண்டும் பெற்றதாக கூறப்படுகிறது. அனந்த விரதத்தை 14 ஆண்டுகள் தொடர்ந்து கடைப்பிடிப்பவர்களின் வாழ்வில் உள்ள பிரச்சனைகள், துன்பங்கள் நீங்கிவிடும் என்று நம்பிக்கை. இழந்த செல்வம் மீண்டும் கிடைக்க வேண்டும், குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும், வாழ்க்கையில் வளம் பெருக வேண்டும் என்ற வேண்டுதலுடன் பக்தர்கள் அனந்த விரதத்தை அனுசரிக்கின்றனர். மகாராஷ்டிரா போன்ற வட மாநிலங்களில், அனந்த சதுர்த்தசி, விநாயக சதுர்த்தி கொண்டாட்டத்தின் இறுதி நாளாக கொண்டாடப்படுகிறது. 10 நாட்கள் வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை இந்நாளில் நீர்நிலைகளில் கரைத்து (விசர்ஜனம்) விநாயகப் பெருமானுக்கு விடை கொடுக்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/devotional/anantha-vratam-that-bestows-a-blissful-life




