Vollständiger Artikel
வேகமாக வளரும் பொருளாதாரம், டிஜிட்டல் புரட்சி, வேறெந்த நாட்டிலும் இல்லாத மிகப்பெரும் இளைஞர் வளம் என்று நாம் பெருமைப்பட நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி களில் பிற நாடுகளுக்கு இணையாக இந்தியா வளரவில்லை என்ற கவலைக்குரிய உண்மையைச் சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளது நிதி ஆயோக். உலகம் முன்னேறுவதே புதிய கண்டுபிடிப்புகளாலும் ஆராய்ச்சிகளாலும்தான். ஆனால், Global Innovation Index-ல் இந்தியா 38-வது இடத்தில் உள்ளது. சீனா 11-வது இடத்தில் உள்ளது. ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன் போன்ற சிறிய நாடுகள் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன. இந்தியாவின் வளர்ச்சி என்பது டிஜிட்டல் சேவைகள், ஐ.டி ஏற்றுமதி, ஸ்டார்ட்அப் போன்ற துறைகளால் உருவானது. ஆனால், அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி, புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய காப்புரிமைகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் செமிகண்டக்டர் போன்ற சமகால மற்றும் எதிர்காலத்துக்கான தொழில்நுட்பங்களில் இந்தியா இன்னும் பின்தங்கியே இருக்கிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் (R&D) அதிக முதலீடுகளைச் செய்ததன் பலனாகவே, அமெரிக்கா, சீனா, தென் கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகள் இன்று பெரும் தொழில்நுட்ப சக்திகளாக மாறியுள்ளன. ஆனால், இந்தியா ஜிடிபியில் வெறும் 0.7% மட்டுமே ஆராய்ச்சிக்குச் செலவிடுகிறது. வளர்ந்த நாடுகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான முதலீடுகள் பெரும்பாலும் தொழில்துறையிலிருந்தே வருகின்றன. இந்தியாவிலோ அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆராய்ச்சிக்குச் செலவுசெய்யும் அளவுக்குக்கூட தனியார் நிறுவனங்கள் செய்வதில்லை. உயர்கல்வி நிறுவனங்களுக்கும் தொழில்துறைக்கும் இடையே ஆக்கபூர்வமான இணைப்பு இல்லாததால், ஆய்வகங்களில் உருவாகும் அறிவும் கண்டுபிடிப்பும் சந்தைக்கு வராமலேயே தடைபடுகின்றன. இந்தியாவில் உருவாகும் ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. திறமையான ஆராய்ச்சியாளர்களும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகிறார்கள். திறமைகளை உருவாக்குவதில் இந்தியா இன்னும் பலபடி முன்னகர வேண்டும். பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகளுக்கு இடையே புதிய கூட்டணி உருவாக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிக்கான நிதி மற்றும் உள்கட்டமைப்பு அதிகரிக்கப்பட வேண்டும். ஜிடிபி-யில் குறைந்தபட்சம் 2 சதவிகிதமாவது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கென ஒதுக்கப்பட வேண்டும். புதிய மருந்துகள், சிப்கள், AI மாதிரிகள், எரிசக்தி தொழில்நுட்பங்கள் இந்திய ஆய்வகங்களில் இருந்து வெளிவர வேண்டும். அதற்கான அடித்தளத்தை உருவாக்கவேண்டிய அவசரத் தேவையையே நிதி ஆயோக் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்தினால், இந்தியா உலகின் முன்னணி கண்டுபிடிப்பு சக்தியாக மாற முடியாது. அரசும் தொழில்துறையும் கைகோத்து, இந்தியாவை எதிர்காலத்துக்கான பயணத்தில் முன்னோக்கி எடுத்துச் செல்லவேண்டும். வளர்ந்த இந்தியா என்பது வெறும் வார்த்தைகளல்ல, செயல்! - ஆசிரியர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständiger Artikel — Link unten



