திருவொற்றியூர், திருவொற்றியூரில் முன்விரோதம் காரணமாக துணை நடிகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் பிரதீப் ராஜ் (வயது 28). சினிமாவில் துணை நடிகராக நடித்து வந்த இவர் பட வாய்ப்புகள் இல்லாத நேரங்களில் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்தார். இவரது தாயார் ராணி, அதே பகுதியை சேர்ந்த நவநீதம் என்ற பெண்ணிடம் கடன் வாங்கி, அந்த பணத்தை பலருக்கு வட்டிக்கு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருதரப்பினருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை ஏற்பட்டது. போலீசில் புகார் அளித்த பிரதீப் ராஜ் கடந்த ஜூலை 27-ந் தேதி நவநீதம், பிரதீப் ராஜின் வீட்டுக்கு சென்று ராணியிடம் பணத்தை கேட்டதாக தெரிகிறது. அப்போது பிரதீப் ராஜ், அவரது தாயார் ராணி மற்றும் உறவினர்கள், பணத்தை திருப்பி தர முடியாது என கூறி நவநீதத்தை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நவநீதம், தைராய்டு மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப் ராஜை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி 3 நாட்களுக்கு முன்பு பிரதீப் ராஜ் திருவொற்றியூர் போலீசிலும், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்தார். பிரதீப் ராஜ் சரமாரியாக வெட்டிக்கொலை இதையடுத்து திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ், பிரதீப் ராஜ் மற்றும் நவநீதம் தரப்பினரை அழைத்து பேசி எச்சரித்து அனுப்பி வைத்தார். மேலும், விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலை வைப்பது தொடர்பாகவும் இருதரப்பினருக்கும் இடையே பிரச்சனை இருந்ததால், இதுகுறித்தும் போலீசார் அவர்களை எச்சரித்தனர்.இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூர் மேற்கு மாட வீதியில் பிரதீப் ராஜ் நடந்து சென்றபோது நவநீதத்தின் மகன், நவீன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். கொலை தொடர்பாக 4 பேர் கைது இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை தொடர்பாக நவீன் (32), அரி கிருஷ்ணன் (21), ஜாபர் (24), லோகேஷ் (27) ஆகிய 4 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நவீனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தனது தாயார் நவநீதம் டிபன் கடை நடத்தும் இடத்துக்கு அருகே பிரதீப் ராஜும், அவரது நண்பர்களும் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலை வைத்து வழிபாடு நடத்தி வந்தனர். இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டது. மேலும், உங்களது சொந்த பிரச்சினையால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் ஏற்கனவே எச்சரித்தனர். திடுக்கிடும் தகவல் பண தகராறு உள்ளிட்ட முன்விரோதம் எங்களுக்குள் இருந்து வந்ததால் நண்பர்களுடன் சேர்ந்து பிரதீப் ராஜை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். இதற்கிடையே, நேற்று திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே பிரதீப் ராஜின் உறவினர்கள், கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் அளிக்க வந்தபோது போலீசார் தன்னை மிரட்டியதாக பிரதீப் ராஜ் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/incident-involving-the-murder-of-a-supporting-actor-in-thiruvottiyur-shocking-details-revealed-during-the-investigation




