வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட மலை கிராமம் `அல்லேரி’. ஜவ்வாது மலைத்தொடரின் ஒரு பகுதியான அல்லேரிக்குச் செல்ல வேண்டுமானால், அடிவாரத்திலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் கரடு முரடான காட்டுவழி மண்பாதையில் பயணிக்க வேண்டும். அல்லேரியைத் தாண்டிலும், ஆங்காங்கே மலை இடுக்குகளில் சுருட்டியன்கொல்லை, அத்திமரத்துக்கொல்லை, ஆட்டுக்கொந்தாரை, பலாமரத்துக்கொல்லை, நெல்லிமரத்துக்கொல்லை, அவுசேரி ஓடை, கரப்பனான்கொல்லை, ஜடையன்கொல்லை, ஏரிக்கொல்லை, பங்களாகொல்லை, மருதவல்லிமேடு, பெரியதட்டாங்குட்டை என 12-க்கும் மேற்பட்ட சிறு சிறு குக்கிராமங்களும் இருக்கின்றன. இங்கெல்லாம், இரண்டாயிரத்துக்கு அதிகமான மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஜூ.வி ஆக்ஷன் ஸ்டோரி இவர்களின் வாழ்க்கை, பெருமளவு வெளிச்சத்துக்கு வராமலேயே புதைந்துகிடக்கிறது. `சாலை வரும். வாழ்க்கை மாறும்’ என்று காத்திருந்தே பல உயிர்களை இழந்துவிட்டார்கள் அல்லேரி மக்கள். மலையிலிருந்து கீழே இறங்குவதற்கு சாலை வசதியில்லாததால், கர்ப்பிணிகளை `டோலி’ கட்டித் தூக்கிக்கொண்டு இறங்கும் வேதனை இன்றும் தொடர்கிறது. இரவு நேரமானால், தீப்பந்த வெளிச்சம் மட்டுமே வழித் துணை. அடிவாரத்தை அடைவதற்குள் பனிக்குடம் உடைந்து குழந்தையும் பிரசவித்துவிடுகிறது. இப்போதெல்லாம், 108 ஆம்புலன்ஸுக்கு முன்கூட்டியே தகவல் கொடுக்கப்பட்டு அடிவாரத்தில் வந்து தயாராக நிற்பதால், தாய் - சேய் ஆபத்தான கட்டத்துக்குச் செல்வதிலிருந்து காக்கப்படுகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அத்திமரத்துக்கொல்லை குக்கிராமத்தில் கொடிய விஷ நாகம் கடித்ததில், ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது. `குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட முடியாதா?’ என்று கண்ணீர் ததும்ப குழந்தையின் உடலை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு குழந்தையின் தாய் மலை இறக்கத்தில் வேக வேகமாக இறங்கிவந்த காட்சிகள் வெளியாகி, தமிழ்நாட்டையே உலுக்கியது. அதன் பிறகு, அப்போதைய தி.மு.க ஆட்சியாளர்கள் அல்லேரி மலைப்பாதையில் ஆய்வு செய்து, தார்ச்சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தினர். இதனால், மலைவாழ் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்திருந்திருந்தனர். அடுத்த சில நாள்களில், குழந்தை மரண அதிர்ச்சி தணிந்துபோக, அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் வழக்கமான அசட்டை மனநிலைக்குச் சென்றுவிட்டனர். சாலைக்கான திட்டமும் கிடப்பில் போடப்பட்டு விட்டது. அல்லேரி சமீபத்தில், சுருட்டியன்கொல்லை குக்கிராமத்தைச் சேர்ந்த 19 வயதேயான தீபா என்ற நிறைமாத கர்ப்பிணி பிரசவ வலியால் துடித்தபோது, அவர்களின் குடும்பத்தினர் `டோலி’ கட்டி தூக்கிவந்த காட்சி வெளியாகி, பதற வைத்தது. நல்வாய்ப்பாக, தாயும், சேயும் உயிர் பிழைத்துக்கொண்டனர். ஆனாலும், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவியர் முதற்கொண்டு, வீட்டுத் தேவைக்கான பொருள்களை மூட்டைகளில் கட்டி தலைமீது சுமந்து செல்லும் மக்களின் வேதனைகள் தொடர்கின்றன. இந்த நிலையில்தான், சாலைக்காகப் போராடும் அல்லேரி மக்களின் துயரம் பற்றி நேற்று முன்தினம் (புதன்கிழமை) வெளிவந்த `ஜூனியர் விகடன்’ இதழில் விரிவான கட்டுரை எழுதப்பட்டிருந்தது. கட்டுரைக்கு அரசு தரப்பிலிருந்து உடனடி ரியாக்ஷன். வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ், அல்லேரி மலை கிராமத்துக்கு அதிகாரிகளுடன் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். மலைவாழ் மக்களிடமும் குறைகளைக் கேட்டறிந்து, சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை தேவைகளுக்கு விரைவாக தீர்வுகாண்பதாகவும் உறுதியளித்தார். தொடர்ந்து, அல்லேரி `ஆஷா’ பணியாளர் இருப்பிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவசர கால மருந்துகளைப் பார்வையிட்டு, ஏ.எஸ்.வி எனும் பாம்பு கடி மருந்து இருப்பையும் சரிபார்ப்பு செய்தார். டோலியில் கர்ப்பிணி. தோளில் பாம்புக்கடி குழந்தை. சாலைக்காகப் போராடும் அல்லேரி மக்களின் துயரம்!மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் ஆய்வு இதையடுத்து, செஞ்சிலுவை சங்க ஆம்புலன்ஸ் சேவையை ஆய்வு செய்தார். மேலும், இருசக்கர அவசர ஊர்தி (108) ஓட்டுநரிடமும் அவசர கால சிகிச்சை மற்றும் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் இருப்பு குறித்து கேட்டறிந்தார். அல்லேரியில் இருந்து பலாமரத்துக்கொல்லை மற்றும் மருதவல்லிமேடு குக்கிராமங்களுக்குச் சென்ற ஆட்சியர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் செப்ஸ் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் `தங்கா’ சிறப்புப் பயிற்சி மையத்தையும் பார்வையிட்டார். இந்த ஆய்வு குறித்து பேசிய ஆட்சியர் லீலா அலெக்ஸ், ``சாலை அமைக்க வேண்டுமானால், வனத்துறை அனுமதி வேண்டும். முன்மொழிவு தயார் செய்து `பரிவேஷ்’ இணையதளத்தில் விண்ணப்பிக்கவும், அமைச்சரிடம் கவனப்படுத்தி விரைவாக சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்துக்காக மாடுகள் கேட்டிருக்கிறார்கள். அதை வழங்கவும், கிணறு வறண்டுபோயிருப்பதால் குடிநீர் தேவைக்கான மாற்றுவழியும் மேற்கொள்ளப்படும்’’ என்றார் உறுதியாக. வேலூர் திமுக அலுவலகத்தில் ஏழைகளுக்கு இலவச உணவு; 2,000 நாள்களைக் கடந்த அன்னதானம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/governance/road-connectivity-for-alleri-soon-junior-vikatan-action-story-collector-assures-tribal-residents




