சென்னை, தமிழ்நாடு அரசு பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் அதிஅழுத்த பிராண வாயு சிகிச்சை மையத்தை மருத்துவம், மருத்துவ கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கோ.க.அருண் ராஜ் பொது மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- அதிஅழுத்த பிராண வாயு சிகிச்சை மையம் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கோ.க.அருண் ராஜ் இன்று (17.07.2026) சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையின் கை சீரமைப்பு மற்றும் நுண் அறுவை சிகிச்சை பிரிவில் ரூபாய் 2 கோடி மதிப்பிலான அதிஅழுத்த பிராண வாயு சிகிச்சை மையத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். உயர்சிறப்பு மருத்துவமனை சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒரே இடத்தில் முழுமையான மற்றும் கட்டணமில்லா அதிஅழுத்த பிராணவாயு சிகிச்சை வழங்கும் நோக்கத்துடன் அரசு பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் இப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அரசு பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் தற்பொழுது 1978 க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளர்கள் நீண்ட கால புண்கள், சிரை சார்ந்தப் புண்கள் மற்றும் நீரிழிவு பாத புண்கள் போன்ற சிகிச்சைகள் பெற்று வருகின்றனர். இதுபோன்ற புண்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அதிஅழுத்த பிராணவாயு சிகிச்சை வசதி அவசியமாக உள்ளது. ரோட்டரி சங்கம் சென்னை ரோட்டரி சங்கத்தின் சார்பில் அரசு பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் அதிஅழுத்த பிராணவாயு சிகிச்சைக்கு தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்புகளும் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்களும் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியின்கீழ் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கட்டணமில்லாமல் சிகிச்சை கடந்த காலங்களில் அதிஅழுத்த பிராணவாயு சிகிச்சை வசதி இல்லாத காரணத்தால் சிகிச்சைக்கு வரும் பயனாளர்கள் மேல்சிகிச்சைக்காக பிற மேம்பட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் பயனாளர்களுக்கு சிகிச்சை தாமதம், நீண்ட தூர பயணம், கூடுதல் பொருளாதார சுமையும் ஏற்பட்டது. அதிஅழுத்த பிராணவாயு சிகிச்சை மேற்கொள்ள தனியார் மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் வரை செலவாகும். தற்போது அரசு பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் அதிஅழுத்த பிராணவாயு சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் சிகிச்சை தேவைப்படும் பொதுமக்கள் கட்டணமில்லாமல் சிகிச்சை பெற்றுப் பயனடையலாம். இந்நிகழ்ச்சியில் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் ஆர்.சுகந்தி ராஜகுமாரி, அரசு பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் ஆர்.மணி, நிலைய மருத்துவ அலுவலர் தளவாய் சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/new-treatment-centre-at-omanthurar-government-hospital-minister-arun-raj-inaugurates




