மதுரை, மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்துவரும் ஆவணி மூலத்திருவிழாவில், சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய திருவிளையாடல்களை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையிலான சிறப்பு அலங்காரங்களில் நாள்தோறும் சுந்தரேசுவரர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் 7-ம் நாளான நேற்று காலையில் வளையல் விற்ற திருவிளையாடல் கோலத்தில் அருள்பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் சூட்டும் வைபவம் நேற்று இரவு கோலாகலமாக நடந்தது. அப்போது சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் சுந்தரேசுவரர் மீனாட்சி அம்மனுடன் எழுந்தருளினார். அப்போது சுந்தரேசுவரருக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் சூட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள், இறைவனின் இந்த திருக்கோலத்தை பக்தி பரவசத்துடன் தரிசித்தனர். சுந்தரேசுவரர் ஆட்சி சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப்பட்டு, 4 மாதங்கள் அம்மன் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம். ஆவணி மூலத்திருவிழாவில் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடந்து, 8 மாதங்கள் சுந்தரேசுவரர் ஆட்சி நடைபெறுவதாக நம்பப்படுகிறது. அந்த வகையில் நேற்று முதல் இறைவனின் ஆட்சி மதுரையில் தொடங்கி உள்ளது. கும்பாபிஷேகம் பத்திரிகை இந்நிலையில் உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் செப்டம்பர் 17, 2026 (ஆவணி 31) (வியாழக்கிழமை) அன்று காலை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான யாகசாலை பூஜைகள் செப்டம்பர் 11-ம் தேதி தொடங்குகின்றன. கும்பாபிஷேக முக்கிய விவரங்கள்தேதி: செப்டம்பர் 17, 2026 (வியாழன்) நேரம்: காலை 7:40 மணி முதல் 8:10 மணிக்குள் இடம்: அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மதுரைகும்பாபிஷேக நிகழ்வு செப். 6: கும்பாபிஷேகப் பூஜை தொடக்கம் செப். 7 - 8: நவகோள் யாகவேள்வி மற்றும் வாஸ்து சாந்தி செப். 9: வைகை ஆற்றிலிருந்து புனித நீர் மற்றும் மண் எடுத்தல் செப். 11: முதல்கால யாகசாலை பூஜை தொடக்கம் (மொத்தம் 12 கால பூஜைகள்) செப். 17 காலை 7:40: தங்க விமானங்களுக்கும் ராஜ கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் செப். 17 காலை 7:55 - 8:10: அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் மூலஸ்தான கும்பாபிஷேகம் இதனிடையே மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் 2026 பெருவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை, மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர காவல் ஆணையாளர் எஸ்.ராஜேந்திரன், மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், ஆகியோர் இன்று நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பக்தர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கோவிலுக்குள் மற்றும் கோபுரப் பகுதிகளுக்கு செல்வதற்கான வழிகளை முறைப்படுத்தி, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி தரிசனம் செய்ய ஏதுவாக தடையற்ற குடிநீர் மற்றும் முறையான சுகாதார வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும் சித்திரை மற்றும் ஆவணி மூல வீதிகளில் கூடுதல் தற்காலிக கட்டணமில்லா காலணி பாதுகாப்பகங்களை அமைக்க வேண்டும். கும்பாபிஷேக நிகழ்வுகளைப் பக்தர்கள் தெளிவாகக் கண்டு தரிசிக்க ஏதுவாகப் போதுமான இடங்களில் LED வண்ணத்திரைகள் அமைக்கப்பட வேண்டும். அத்துடன் கூடுதல் வாகன நிறுத்துமிட (Parking) வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். பாதுகாப்பு கருதி மின்மாற்றிகளைச் (Transformer) சுற்றி பாதுகாப்பு அரண்கள் அமைக்க வேண்டும். பழுதடைந்த மின்விளக்குகளை உடனடியாகச் சரிசெய்வதோடு, தேவையான இடங்களில் புதிய மின்விளக்குகளைப் பொருத்த வேண்டும். திருக்கோவிலைச் சுற்றியுள்ள பிரகாரங்கள் மற்றும் வீதிகளில் உள்ள பழுதடைந்த சாலைகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டும். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக திருக்கோயிலைச் சுற்றியுள்ள மாசி வீதிகளில் குடிநீர், கழிப்பறை, நடைபாதை, தெருவிளக்குகள், மழைநீர் வடிகால் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்து தேவையான பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், கழிப்பறைகள் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/devotional/madurai-meenakshi-amman-sundareswarar-temple-release-of-the-invitation-for-the-maha-kumbabishekam




