பெங்களூரு, கர்நாடக மாநிலம் துமகூரு புறநகர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேஷ் கவுடாவின் மகள் ஐஸ்வர்யா. இவர் கடந்த 12-ந்தேதி பீமா அமாவாசையையொட்டி மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள லட்சுமி நரசிம்மசாமி கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் எம்.எல்.ஏ.வின் மகளான ஐஸ்வர்யா, தனது செல்வாக்கை பயன்படுத்தி வி.ஐ.பி. வரிசையில் நுழைய முயன்றார். அவரை கியாதனஹள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவிதா தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. கோவிலில் கூட்டம் அதிகமாக உள்ளதால், ஒருவரை மட்டும் உள்ளே அனுமதித்தால், வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் கூச்சலிட்டு பிரச்சினையை உருவாக்குவார்கள் என்றும், சிறிது நேரம் காத்திருக்குமாறும் ஐஸ்வர்யாவிடம் சப்-இன்ஸ்பெக்டர் சவிதா கூறியதாக தெரிகிறது. இதற்கிடையில் அந்த சமயத்தில், சர்க்கிள் இன்ஸ்பெக்டர் லட்சுமி என்பவர், சாதாரண உடையில் கருவறைக்கு அருகில் சென்றுள்ளார். இதனை பார்த்த ஐஸ்வர்யா, இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் சவிதாவிடம் கேள்வி எழுப்பினார். அப்போது சவிதா, “சர்க்கிள் இன்ஸ்பெக்டர் லட்சுமி சாதாரண உடையில் பணியில் உள்ளார். எனவே அவர் கருவறை அருகே சென்றுள்ளார்” என்று கூறினார். ஆனாலும் இதனை ஏற்க மறுத்து ஐஸ்வர்யா, சவிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் ஐஸ்வர்யா, சப்-இன்ஸ்பெக்டர் சவிதாவை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவரது கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சவிதா, கியாதனஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் எம்.எல்.ஏ.வின் மகள் ஐஸ்வர்யா மீது அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/case-registered-against-bjp-mlas-daughter-for-slapping-a-female-sub-inspector-in-karnataka




