சென்னை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- ஆந்திரப் பிரதேசம் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் ஒடலரேவு கடற்கரையிலிருந்து கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி வங்கக்கடலுக்கு சூறை மீன்பிடிப்புக்காக சென்ற 7 மீனவர்கள் காணாமல் போய், 14 நாள்களாகும் நிலையில், இதுவரை அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்களைத் தேடும் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டிய நிலையில், தேடும் பணிகள் கைவிடப்படவுள்ளதாக வெளியாகும் செய்திகள் கவலையளிக்கின்றன. மீனவர்கள் மாயம் ஒடலரேவு பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஓடலரேவு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சூறை மீன்பிடிக்கச் சென்றனர். கர்ரி ராமுடு, கே ராமகிருஷ்ணா, எஸ் தாத்தாராவ், ஏசுதாசு, பலேபு சாந்தராவ், கொல்லட்டி ஸ்ரீனிவாஸ், சதீஷ் ஆகிய 7 மீனவர்களும் கடந்த 10 அல்லது 11-ஆம் தேதி துறைமுகம் திரும்பியிருக்க வேண்டும். ஆனால், கடைசியாக கடந்த 7-ஆம் தேதி குடும்பத்தினரைத் தொடர்பு கொண்ட அவர்களை அதன்பின் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களின் படகு ஒதிஷா அல்லது மேற்கு வங்காள கடல்பகுதிக்கு காற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் கடற்படைக்கு சொந்தமான இரு கப்பல்கள், கடலோரக் காவல் படைக்கு சொந்தமான 5 கப்பல்கள், விமானப் படைக்கு சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. அவர்கள் காணாமல் போனதாக கருதப்படும் பகுதியில் இருந்து 300 கடல் மைல் சுற்றளவில் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காக்கிநாடா, விசாகப்பட்டினம், ஒதிஷா மாநிலம் பாரதீப் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் உதவியும் கோரப்பட்டிருக்கிறது. ஒதிஷா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் அதிகாரிகளுக்கும் இது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உதவிகள் கோரப்பட்டுள்ளன. தேடும் பணிகளை நிறுத்த அரசு முடிவு கடற்படை, விமானப்படை ஆகியவை இணைந்து மேற்கொள்ளும் தேடுதல் வேட்டையை குறை சொல்ல முடியாது. ஆனால், இரு வாரங்களாகியும் அவர்களை கண்டுபிடிக்க முடியாததால், இன்னும் ஓரிரு நாள்களில் தேடும் பணிகளை நிறுத்த அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் மீனவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் கவலை அடைந்துள்ளனர். கடலுக்கு சென்ற மீனவர்களிடம் 1000 லிட்டர் டீசலும், 20 நாள்களுக்குத் தேவையான உணவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடுமையான காற்று காரணமாக அவர்கள் வெகு தொலைவுக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மீனவர்கள் குடும்பத்தினருக்கு வாழ்வாதாரம் அதனால், தேடுதல் தொலைவை சற்று அதிகரித்து பணிகளை தீவிரப்படுத்தினால், காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து விடலாம். காணாமல் போன மீனவர்களில் மூவருக்குக் நீச்சல் கூட தெரியாது என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தேடும் பணிகள் கைவிடப்பட்டால், இதுநாள் வரை மேற்கொள்ளப் பட்ட முயற்சிகள் வீணாகி விடும். எனவே, காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்கும் வரை தேடுதல் பணிகளை நீட்டிக்க வேண்டும் என்று ஆந்திர அரசையும், கடற்படை மற்றும் கடலோரக் காவல்படைகளை கேட்டுக் கொள்கிறேன். காணால் போன மீனவர்கள் குடும்பத்தினருக்கு வாழ்வாதாரம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு தேவையான உணவு, நிதி ஆகியவற்றை அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/7-andhra-fishermen-missing-in-the-bay-of-bengal-search-operations-should-be-intensified-anbumani




