அட்லீ சாரும் இந்திய சினிமாவை உலக அளவிலான இடத்துக்கு கொண்டு செல்லப் போகிறார் என்று தான் நம்புவதாக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி கூறியுள்ளார். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி - இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூட்டணியில் உருவாகி வரும் மூன்றாவது திரைப்படம் ‘பத்தா’. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். அட்லீ தயாரிப்பில் உருவாகும் படம் இப்படத்தை இயக்குநர் அட்லீயின் ‘ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்’ நிறுவனமும், ‘ஸ்டார் ஸ்டுடியோஸ் 18 - சினி1 ஸ்டுடியோஸ்’ நிறுவனங்களும் இணைந்து தயாரித்து வருகின்றன. விஜய் சேதுபதி - பாலாஜி தரணிதரன் கூட்டணி, அட்லீயின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் சாய் அபயங்கரின் இசை என பல்வேறு காரணங்களால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்துள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 1ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ‘பத்தா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது, “சத்தியபாமா கல்லூரிக்கு நான் கடைசியாக டான் படப்பிடிப்புக்காக வந்திருந்தேன். மீண்டும் இங்கு வந்து நிற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அட்லீ சாருடன் தெறி, மெர்சல் படங்களில் பணியாற்றியிருக்கிறேன். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் அவருடன் பயணித்திருக்கிறேன். அந்த காலத்தில் என்னை விட்டுக் கொடுக்காமல், தொடர்ந்து ஊக்கப்படுத்தியதற்கு நன்றி சார். உங்களுடைய உழைப்பு, பெரிய கனவு ஆகிய இரண்டையும் இணைத்து நீங்கள் செய்யும் விஷயங்கள் எப்போதுமே எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இந்திய சினிமாவே பெருமைப்படும் அளவுக்கு நீங்கள் ஒரு படத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். நீங்கள் காட்டிய காட்சிகள் மிகவும் பிரமிப்பாக இருந்தது. இன்னும் சில நாட்களில் அதை அனைவரும் திரையில் பார்க்கப் போகிறீர்கள். ராஜமவுலி சார் இந்திய சினிமாவை உலக அளவில் கொண்டு சென்றுகொண்டிருக்கிறார். அதேபோல் அட்லீ சாரும் இந்திய சினிமாவை உலக அளவிலான இடத்துக்கு கொண்டு செல்லப் போகிறார் என்று நான் நம்புகிறேன். உங்களுடைய மாணவனாக இருந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். சமீபத்தில் ரஜினி சார் படம் எனக்கு கைவிட்டுப் போனதால் மிகவும் வேதனையான காலகட்டத்தில் இருந்தேன். அந்த நேரத்தில் அட்லீ சார் எனக்கு தொலைபேசியில் அழைத்து, ‘நீ பிளாக்பஸ்டர் இயக்குநர், கவலைப்படாதே’ என்று சொன்னார். அந்த வார்த்தைகள் எனக்கு மீண்டும் ஓடுவதற்கான நம்பிக்கையை கொடுத்தது. சீக்கிரம் என்னுடைய அடுத்த படத்தின் மூலம் உங்களைப் பெருமைப்படுத்துவேன் சார். பாலாஜி தரணீதரன் சாரின் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்துக்கு நான் மிகப்பெரிய ரசிகன். ஒரு காட்சியை சொல்லி எங்கள் இயக்குநரிடம் ஒப்புதல் வாங்குவது எங்களுக்கு கஷ்டம். ஆனால் நீங்கள் ஒரு முழு கதையையே சொல்லி ஒப்புதல் வாங்கியிருக்கிறீர்கள். அதனால் இந்தப் படத்தைப் பார்க்க எனக்கு மிகுந்த ஆர்வம் இருக்கிறது. விஜய் சேதுபதி சார் மாஸ், தீவிரமான நடிப்பு, பொழுதுபோக்கு என எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கொடுக்கக்கூடிய மிகச் சில நடிகர்களில் ஒருவர். அவருடைய படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். சாய் அபயங்கர் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறார். நான் இயக்கும் அடுத்த படத்திற்கும் அவர்தான் இசையமைக்கிறார். மிகவும் கடினமாக உழைக்கக்கூடியவர். இன்னும் பல மடங்கு உயர வேண்டும். பத்தா படம் தமிழ் சினிமாவில் சமீப காலமாக இருந்த பொழுதுபோக்கு படங்களுக்கான இடைவெளியை நிரப்பும் என்று நம்புகிறேன்” என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/atlee-will-take-indian-cinema-global-director-cibi-chakravarthi




