Vollständiger Artikel
யூடியூப் உலகின் முடிசூடா மன்னன் மிஸ்டர் பீஸ்ட் (MrBeast). யூடியூப் தளத்தில் 500 மில்லியன் (50 கோடி) சந்தாதாரர்களைக் கடந்த முதல் தனிநபர் படைப்பாளி என்ற மாபெரும் சாதனைக்குச் சொந்தக்காரர். அதுபோல், உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட கால்பந்து வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) .இவர்கள் இருவரும் 2024-ம் ஆண்டின் இறுதியில் இணைந்து வீடியோக்களை வெளியிட்டனர். இணையத்தை முடக்கும் அளவுக்கு இந்த கூட்டணி உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது. MrBeast Cristiano Ronaldo 2024-ம் ஆண்டு நடந்த கொலாபரேஷன் வீடியோ படப்பிடிப்பின் போது ரொனால்டோவின் அணுகுமுறை தன்னை எவ்வளவு வியப்பில் ஆழ்த்தியது என்பது குறித்து, மிஸ்டர் பீஸ்ட் சமீபத்தில் Click Baited என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் மனம்திறந்து பேசியுள்ளார். ``ரொனால்டோ போன்ற உலகப்புகழ்பெற்ற, மிகவும் பரபரப்பான ஒரு விளையாட்டு வீரருடன் வீடியோ எடுப்பது சாதாரண விஷயமல்ல. அவருக்கு நேரம் மிகவும் குறைவாகவே இருக்கும், எனவே ஒரு சில நிமிடங்களில் அவசர அவசரமாக படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். ரொனால்டோவின் நேரத்தை வீணடிக்கக் கூடாது என்பதற்காக, கிடைக்கப்போகும் அந்தச் சிறிய நேரத்திற்கு ஏற்றவாறு அனைத்து சவால்களையும் முன்கூட்டியே கச்சிதமாக திட்டமிட்டு வைத்திருந்தேன். Cristiano Ronaldo ஆனால், படப்பிடிப்பு தளத்தில் நடந்தது வேறு. எனது எதிர்பார்ப்பை பொய்யாக்கும் விதமாக, ரொனால்டோ எந்த அவசரமும் காட்டவில்லை. `வீடியோ மிகச் சிறப்பாக வர வேண்டும், எனவே உங்களுக்கு எவ்வளவு நேரம் தேவையோ அவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள், எந்த அவசரமும் இல்லை’ என்று ரொனால்டோ மிகவும் இயல்பாகக் கூறியுள்ளார். எந்தவித அழுத்தமும் இல்லாமல் ரொனால்டோ கொடுத்த இந்த சுதந்திரம் எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை அளித்தது. படப்பிடிப்பு முடிந்தவுடன் வேலை முடிந்தது என நான் கிளம்ப தயாரானேன். ஆனால், ரொனால்டோ என்னை விடுவதாக இல்லை. படப்பிடிப்பு முடிந்ததும் வீட்டிற்கு வருமாறு ரொனால்டோ அன்போடு அழைத்தார். `நீங்கள் எனக்கு நிறைய நேரம் கொடுத்துவிட்டீர்கள், இதுவே போதும்’ என்று நான் பலமுறை கூறியும், ரொனால்டோ அதை கேட்கவில்லை.’’ என்று மனம் திறந்து நெகிழ்வாகப் பேசியுள்ளார் மிஸ்டர் பீஸ்ட். இவர்களது இந்த கூட்டணியில், ரொனால்டோவின் யூடியூப் சேனலில் "I Meet MrBeast To Break The Internet!!" என்ற வீடியோவும், மிஸ்டர் பீஸ்டின் சேனலில் "Beat Ronaldo, Win $1,000,000" என்ற வீடியோவும் வெளியாகி பார்வையாளர்களின் சாதனைகளை முறியடித்தன. இந்த வீடியோக்கள் ரொனால்டோவின் யூடியூப் சேனல் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைய ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. MrBeast "ரொனால்டோ ஒரு மிகச் சிறந்த மனிதர், நான் நினைத்ததை விட அவர் என்னிடம் மிகவும் அன்பாகப் பழகினார்" என்று மிஸ்டர் பீஸ்ட் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். உண்மையான ஆளுமை என்பது வெறும் சாதனைகளில் மட்டுமல்ல, மற்றவர்களை அவர்கள் நடத்தும் விதத்திலும் இருக்கிறது என்பதை இந்த சுவாரசியமான சந்திப்பு நமக்கு உணர்த்துகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständiger Artikel — Link unten




