சென்னை, கடும் இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் ‘துக்ளக் தர்பார்’ முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- அவசியம் என்ன? சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருந்த புதிய தலைமைச்செயலகம் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 9 கிராம மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச்செயலகம் அமைக்க தவெக அரசு முடிவெடுத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு அரசின் களஞ்சியம் காலியாக உள்ளது, அரசுக்கு 10 லட்சம் கோடி கடன் உள்ளது, ஆண்டுக்கு ஒன்றே முக்கால் லட்சம் கோடி கடன் வாங்கும் நிலை உள்ளது, அதனால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று தொடர்ந்து கூறிவரும் தவெக அரசு, வட்டி கட்டவே கடன் வாங்க வேண்டிய அளவிற்குக் கடுமையான நிதி நெருக்கடி உள்ள நிலையில், 1200 கோடிகளை வாரி இறைத்து அவசரகதியில் புதிய தலைமைச்செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? தனிப்பட்டத் தேவைக்கா? தற்போது செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்படும் தலைமைச் செயலகத்தில் கடும் இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது என்பதாலேயே புதிய தலைமைச்செயலகம் அமைக்கப்படுகிறது என்றால், அதைவிட அதிக இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்க வேண்டிய தேவை என்ன? மக்களின் தேவைக்கா? அல்லது முதல்-அமைச்சரின் தனிப்பட்டத் தேவைக்கா? பரந்தூர் கிராம மக்களின் எதிர்ப்பினை ஏற்று, புதிய வானூர்தி நிலையத்தைக் கைவிட்ட நீங்கள், பட்டினப்பாக்கத்தில் 9 மீனவ கிராம மக்களின் எதிர்ப்பினைக் கருத்திற்கொள்ளாதது ஏன்? 9 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரத்தைவிடவும் உங்களின் தனிப்பட்ட வசதிதான் முதன்மையானதா? இதுதான் மீனவ மக்களின் நலன் மீதான உங்களின் அக்கறையா முதல்-அமைச்சர் விஜய்யே? உலகப் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள், பத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், தொழில் மையங்கள் மற்றும் மீனவ மக்களின் வியாபாரத்தலங்கள் எனப் பட்டினப்பாக்க குறுகிய சாலைகளை ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் மக்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்துவதால், இப்போதே அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இந்நிலையில், புதிய தலைமைச்செயலகமும் அங்கு அமைக்கப்பட்டால் பட்டினப்பாக்கம் பகுதியே கடுமையாகத் திணற நேரிடும். ஒவ்வொரு நாளும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் வருகைக்காகப் பல மணி நேரங்கள் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுகின்ற அவலமும் நடைபெறும். இதனால் பொதுமக்கள் குறிப்பாகப் பள்ளி குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை உருவாகும். இதுதான் தொலைநோக்கு சிந்தனையா? அதுமட்டுமின்றி, பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலகங்கள், சட்டமன்றம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தங்கும் விடுதிகள், பொதுமக்கள் காத்திருப்புக்கான இடங்கள், வாகன நிறுத்துமிடங்கள், குடிநீர் மற்றும் கழிப்பிடங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இத்தனை குறுகிய இடத்திற்குள் எப்படி அமைக்க முடியும்? அப்படியே வலிந்து திணித்து அமைத்தாலும், முதல்-அமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் அறிவித்ததுபோல அடுத்த 100 ஆண்டுகளுக்கு விரிவுப்படுத்துவதற்கு இக்குறுகிய இடம் எப்படிப் போதுமானதாக இருக்க முடியும்? இதுதான் தவெக அரசின் தொலைநோக்கு சிந்தனையா? எல்லாவற்றிற்கும் மேலாக, சென்னை பட்டினப்பாக்கம் பகுதியானது கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரலை தாக்கிய ஆபத்தான பகுதிகளில் ஒன்றாகும். எதிர்காலத்திலும் சுனாமியால் தாக்குதலுக்கு ஆளாகும் வாய்ப்புகளும் உண்டு. மேலும், புவிவெப்பமயமாதலால் பனிப்பாறை உருகி, கடல் மட்டம் தொடர்ந்து உயர்வதால், எதிர்வரும் 2040-2070 வரையிலான காலகட்டத்தில் கடல்மட்டம் 30 செமீ அளவிற்கு உயர்ந்து சென்னை கடற்கரை பரப்பில் 1.6 கிமீ அளவிற்கு (ஏறத்தாழ 71ச.கீ நிலப்பரப்பு) கடல்மட்டத்திற்கு கீழ் சென்று, நிரந்தரமாக வெள்ளம் சூழ் பகுதியாக மாறும் என்று "காலநிலை மாற்றத்திற்கான சென்னை செயல்திட்ட அறிக்கை"குறிப்பிடும் பகுதிக்குள்ளும் பட்டினப்பாக்கம் வருகிறது என்பதால், அடுத்த 100 ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வையுடன் தலைமைச்செயலகம் அமைக்க பட்டினப்பாக்கம் எப்படி சரியான தேர்வாக இருக்க முடியும்? முடிவை கைவிட வேண்டும் தான் முதல்-அமைச்சர் ஆவதற்கு முன்பே அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் சந்தித்த முதல்-அமைச்சர் விஜய், தற்போது தலைமைச்செயலகத்தையே தன் வீட்டிற்கு அருகில் அமைத்து அரசு ஊழியர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருமே அங்கு வாருங்கள் என்று துக்ளக் தர்பார் நடத்த முயல்வது வெட்கக்கேடானது. ஆகவே, முதல்-அமைச்சர் விஜய்யின் தனிப்பட்ட நலனுக்காக, நாட்டு மக்களின் வரிப்பணத்தை வீணடித்து, கடும் இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும், சுனாமி ஆபத்தும் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். நா.த.க. போராட்டத்தை முன்னெடுக்கும் இல்லையென்றால், பாதிக்கப்படும் பட்டினப்பாக்கம் 9 கிராம மீனவமக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த 9 மீனவ கிராம மக்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, நீங்கள் எது குறித்தும் அச்சம் கொள்ள வேண்டாம்; விளைநிலங்களை அழித்து சேலம் எட்டுவழிச்சாலை அமைக்கவிடமாட்டோம் என்று கூறினோம். அமைக்கவில்லை. விளைநிலங்களை அழித்து பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைக்கவிடமட்டோம் என்றோம். அமைக்க முடியவில்லை; சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் கடலில் பேனா சிலை வைக்கவிடமாட்டோம் என்றோம்; வைக்க முடியவில்லை. அதுபோல 9 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் தலைமைச்செயலகத்தை ஒருபோதும் அமையவிடமாட்டோம். மக்களின் துணையுடன் உறுதியாக தடுத்து நிறுத்துவோம். பட்டினப்பாக்கம் மீனவச்சொந்தங்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருங்கள்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-decision-to-construct-the-new-secretariat-at-pattinapakkam-must-be-abandoned-seeman



