திருநெல்வேலி, விவசாயிகள் உரச் செலவை குறைத்து பயிர்களின் மகசூலை அதிகரிக்க மண் பரிசோதனை மிகவும் அவசியம் என்று திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பூவண்ணன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் வேளாண்மைத்துறையின் கீழ் மண் பரிசோதனை ஆய்வகம் பாளையங்கோட்டை, அண்ணாநகரில் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக மாடியில் இயங்கி வருகிறது. இங்கு விவசாய நிலங்களின் மண் மற்றும் நீர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு மண்வள அட்டை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மண்வள அட்டை மண்வள அட்டையில் மண் பரிசோதனைக்கு கொடுக்கக்கூடிய விவசாயி குறித்த தகவல்கள், அந்த விவசாயி கொடுத்த மண் மாதிரியில் உள்ள பேரூட்டச் சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் குறித்த தகவல்கள், மண்ணின் தன்மைக்கேற்ப தேவைப்படக்கூடிய விவசாயத்துறை அதிகாரிகள் மூலம் பரிந்துரை செய்யக்கூடிய உரங்கள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும் அட்டையே மண்வள அட்டை ஆகும். மண் பரிசோதனை மண்ணில் உள்ள சத்துக்கள் மற்றும் தன்மைகளை ஆய்வகத்தில் அதற்குரிய முறைகளில் கண்டறிவதை மண் பரிசோதனை என்கிறோம். பயிர் விளைச்சலைப் பெருக்க பல்வேறு தொழில் நுட்பங்களைப் பின்பற்றினாலும் அவற்றின் வெற்றி மண்வளத்தைப் பொறுத்ததாகும். மனிதனின் உடல்நலம் அறிய ரத்தப் பரிசோதனை செய்வது போல மண்வளம் அறிய மண் பரிசோதனை செய்ய வேண்டும். சாகுபடிச் செலவைக் குறைத்து, மகசூலை அதிகரிக்க மண் பரிசோதனை ஒரு எளிய அறிவியல் தொழில் நுட்பமாகும். மண் பரிசோதனையின் அவசியம் மண்ணின் தன்மைகளை ஆய்வு செய்து அதற்கேற்றவாறு பயிர்களைத் தேர்ந்தெடுத்து பயிரிடலாம். பயிருக்கு தீங்கு விளைவிக்கும் களர், உவர், அமிலத்தன்மை போன்ற பிரச்சினைகளைக் கண்டறிந்து நிலத்தை சீர்திருத்தம் செய்யலாம். மண்ணிலுள்ள தழை, மணி, சாம்பல் ஆகிய பேரூட்டச் சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களின் அளவைத் துல்லியமாக அறிந்து அதற்கேற்றவாறு சமச்சீராக உரமிட்டு அதிக மகசூல் பெறலாம். மண்ணின் தன்மைக்கு ஏற்ற உரங்களை, பயிருக்குத் தேவையான அளவு மட்டும் இட்டு, உரச் செலவை குறைத்திட மண் பரிசோதனை மிகவும் அவசியம் ஆகும். மண் மாதிரி எடுக்கும் முறை ஒரு பயிர் அறுவடை செய்த பின்பும், அடுத்த பயிருக்கு நிலத்தை தயார் செய்வதற்கு முன்பும் உள்ள இடைப்பட்ட காலத்தில் மண் மாதிரி எடுக்க வேண்டும். ஒரு வயலுக்கு ஒரு மண் மாதிரி எடுக்கவும், ஒரே நிலத்தில் மண்ணின் தன்மை மாறுபட்டால் தனித்தனியாக மாதிரி எடுக்கலாம். ஒரே நிலத்தில் இரண்டு அல்லது மூன்று பயிர்கள் பயிரிட்டிருந்தால் ஒவ்வொரு பயிர் செய்த இடத்திலும் தனித்தனியாக மண் மாதிரி எடுக்க வேண்டும். வரப்பு, வாய்க்கால் அருகில், எரு குவித்த இடம் மற்றும் மர நிழலிலும் மண் மாதிரி எடுக்கக் கூடாது. மண் வெட்டி மூலம் ‘V’ போன்ற வடிவத்தில் பயிருக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட ஆழத்திற்கு வெட்டி இருபக்க சரிவுகளிலும் ஒரு செ.மீ கனத்திற்கு மண்ணை செதுக்கி எடுக்க வேண்டும். நெல், சோளம் போன்ற தானியப் பயிர்களுக்கு சுமார் ½ அடி ஆழம் தோண்டி மண் மாதிரி எடுக்க வேண்டும். ஆழமாக வேர்விடும் பருத்தி, கரும்பு, வாழை, கிழங்கு மற்றும் காய்கறி பயிர்களுக்கு சுமார் ¾ அடி ஆழத்தில் மண் மாதிரிகள் எடுக்க வேண்டும். இவ்வாறு ஒரு ஏக்கருக்கு 10 முதல் 15 இடங்களில் பரவலாக மண் மாதிரிகள் எடுத்து நன்றாக கலந்து நிழலில் உலர்த்த வேண்டும். பரிசோதனைக்கு சுமார் ½ கிலோ முதல் 1 கிலோ மண் போதுமானது. மண் மாதிரியை சுத்தமான பிளாஸ்டிக் பை அல்லது துணிப்பையில் போட்டு, அதில் விவசாயியின் பெயர் மற்றும் முகவரி, வயலுக்கான அடையாளம், அல்லது சர்வே எண், பாசன வசதி மற்றும் அடுத்து பயிரிடப்போகும் பயிர் முதலிய விபரங்களைக் குறித்து அனுப்ப வேண்டும். தென்னை, மா, கொய்யா, போன்ற மரப்பயிர்களுக்கு ( 3x3x3) அடி நீள, அகல ஆழ குழி எடுத்து, அதில் ஒரு அடிக்கு ஒரு மண்மாதிரி வீதம் 3 மண் மாதிரிகள் தனித்தனியாக எடுக்க வேண்டும். மண் மாதிரி ஆய்வுக் கட்டணம் மண் மாதிரி எடுத்திட உகந்த தருணமான இச்சமயத்தில் விவசாயிகள் தங்களது மண் மற்றும் நீர் மாதிரிகளை ஆய்வகதத்தில் நேரடியாக கொடுத்து ஆய்வறிக்கை 3 நாட்களுக்குள் பெற்றிடலாம். மண் மாதிரி ஒன்றிற்கு ரூ.30 மற்றும் தண்ணீர் மாதிரி ஒன்றிற்கு ரூ.30 என்ற அளவில் ஆய்வு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மண் வளம் மண்ணில் உள்ள சத்துக்களின் அடிப்படையில் பயிருக்கு உரமிடுவது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். விவசாயிகள் பயிரின் தேவைக்கு அதிகமாக உரம் பயன்படுத்தும்போது பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு வழிவகுப்பதுடன் பயிரினால் எடுத்துக் கொண்ட உரம் போக மீதமுள்ளவை மண்ணின் வளத்தை பாதிக்கிறது. எனவே விவசாயிகள் மண் மாதிரி பரிசோதனை செய்வது மட்டுமல்லாமல் மண்வள அட்டையின் உர பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே ரசாயன உரங்களை பயன்படுத்தி பயிர் விளைச்சல் செய்வதனால் அதிக மகசூல் பெறுவதுடன் மண்வளத்தையும் பாதுகாத்திடலாம். உரச் செலவை குறைத்து அதிக மகசூல் பெறலாம் நேரடியாகவோ அல்லது நடமாடும் மண் பரிசோதனை வாகனம் மூலமாகவோ மண் மற்றும் நீர் மாதிரிகளை கொடுத்து பரிசோதனை முடிவுகளை பெற்று அதன் பிறகு உரிய முறையில் விவசாயம் செய்வதன் மூலம் உரச் செலவை குறைத்து அதிக மகசூலைப் பெற்று விவசாயிகள் பயனடையலாம் என்கிறார் திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பூவண்ணன். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/soil-testing-is-essential-for-farmers-to-reduce-fertilizer-costs-and-increase-yields




