`சினி'ஸ்கோப் 29மூடர்கூடம்: மடமையின் நுட்பம்! ’எங்க குப்பத்துல நான் எவ்வளவு பெரிய ஆள்னு இவனுகளுக்கு தெரியல. இங்க ஒரு மருடர்னு விழுந்துடக்கூடாதேனு கம்முனு இருக்கேன்’ என்கிறான் கன்னிஸ். அதைக் கேட்டு நம் வீட்டு வேலையாள் இவ்வளவு பெரிய ரவுடியா என்று ஒரு கணம் அதிர்ச்சியாகிறாள் பக்தவச்சலத்தின் மனைவி மண்டோதரி. அப்படிப்பட்ட கன்னிஸைப் பிடித்துக் கொண்டுபோக வருகிறான் ரவுடி ஆட்டோ குமார். அவனைப் போய், ’பழைய துணி எதுவுமில்லை, அப்புறமா வா’ என்று முதலில் அசிங்கப்படுத்துகிறான் வெள்ளை. அந்தக் கடுப்பில் எவ்வளவு சொல்லியும் போகாமல், வீண் வாய்க்கொழுப்பில் நவீன் குழுவினரிடம் மாட்டிக் கொள்கிறான் ஆட்டோ குமார். செமத்தியாக உதை வாங்கி பேண்டையும் நனைத்துக்கொண்டு அசிங்கப்படுகிறான். பின்னர், அவனையும் கொண்டு வந்து மற்றவர்களோடு சிறைப்படுத்துகிறார்கள். ’நான் வக்காவோட ஆளு, யாருனு தெரியாம கை வைச்சிட்டீங்க, வக்காவுக்கு மட்டும் இது தெரிஞ்சுதுன்னா அவ்வளவுதான்’ என்று புலம்பிக் கொண்டிருக்கும் குமாரின் ஈரமான பேண்டைப் பார்த்து, ’சனியனே, உங்க அக்கா யாரா இருந்தா எங்களுக்கு என்னடா, வெளியே போடா அசிங்கம் புடிச்சவனே’ என்று இன்னும் அசிங்கப்படுத்துகிறாள் கப்புளி. இது போதாது என்று கன்னிஸுக்கும், ஆட்டோ குமாருக்கும் இடையே கட்டாயச் சண்டை விடுகிறார்கள் நவீன் குழுவினர். இப்போதும் ஆட்டோ குமாரைப் பார்த்து நடுங்கிக் கொண்டிருக்கிறான் கன்னிஸ். ஆனால், சண்டையில் ஒரே குத்தில், ஆட்டோ குமாரின் பல்லைப் பெயர்த்துவிடுகிறான் கன்னிஸ். ஒரு ரவுடிக்கு ஒரே நாளில் எத்தனை அசிங்கங்கள்தான் நடக்கும்? ’பாவம் ஆட்டோ குமார், வக்கா எப்போது வந்து காப்பாற்றப் போகிறானோ’ என்று நமக்கே தோன்றுமளவுக்கு ஆகிவிடுகிறது அந்தச் சூழல்! ஒரே நாளில் போலீசில் மாட்டிக்கொண்டு தற்செயலாகச் சந்திக்கிறார்கள் நவீன், வெள்ளைச்சாமி, செண்ட்ராயன், குபேரன் எனும் நான்கு விளிம்புநிலை மனிதர்கள். தங்கள் நிலையறிந்து நண்பர்களாகிறார்கள். அதன் தொடர்ச்சியாக, இந்தக் குழு ஒரு வீட்டில் திருடத் திட்டமிடுகிறது. வெள்ளைச்சாமியின் மாமாவான, கோடீஸ்வரர் பக்தவச்சலம் குடும்பத்தைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் குடும்பத்தோடு அதிகாலை 3 மணிக்கு வெளியூர் போகிறார்கள் எனும் நினைப்பில் அவரது வீட்டுக்கு திருடுவதற்காகச் செல்கிறார்கள். ஆனால், அவர்கள் கிளம்பத் திட்டமிட்டிருப்பதோ மாலை 3 மணிக்கு. வேறு வழியின்றி, இப்போதே வீட்டிலிருக்கும் பணத்தைக் கொள்ளையடித்துச் செல்லலாம் எனும் நினைப்பில், அவர்களைச் சிறைபிடிக்கிறார்கள். ஆனால், அவர்கள் நினைத்தது போல அந்த வீட்டில் கொஞ்சம் கூட பணமில்லை. மேலும், பக்தவச்சலம் குடும்பத்தோடு, வேலைக்காரன் கன்னிஸ், ஒரு நாய், ஒரு பொம்மை, ஒரு சில்லறைத் திருடன் ஆகியோரும் சிக்கியிருக்கிறார்கள். கூடுதலாக கப்புளியைச் சந்திக்க வரும் அவளது காதலன், பக்தவச்சலத்திடம் கடனை வசூலிக்க வரும் ஒரு சேட், பக்தவச்சலத்திடம் கடன் கேட்க வரும் ஒரு வேலைக்காரி, வேறொரு கடன் பிரச்சினையில் வம்பிழுத்த கன்னிஸைத் தேடி வரும் ஆட்டோ குமார் எனும் ஒரு லோக்கல் ரவுடி என ஒரு சிலரையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நவீன் குழுவுக்கு பணம் கிடைத்ததா? இத்தனை பேரையும் எப்படிச் சமாளித்தார்கள், இறுதியில் என்னவாயிற்று என்பது கதை. இந்தப் படத்தைத் தனது ஒயிட் ஷேடோஸ் நிறுவனத்துக்காகத் தயாரித்து, எழுதி, இயக்கியிருந்தவர் நவீன். இந்தப் படம் தமிழ் நகைச்சுவைப் படங்களின் வரிசையில் மிகவும் வித்தியாசமான ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. ஃபார்ஸ் (Farce) எனப்படுகிற கேலிக்கூத்து வகைமையைச் சேர்ந்த படம் இது. உண்மையில் இதற்கான முன்னுதாரணங்கள் தமிழில் குறைவு. முட்டாள்த்தனம் நிறைந்த கதாபாத்திரங்கள், தொடர்ச்சியாக ஒன்றன் பின் ஒன்றாக நிகழும் விநோதமான சூழ்நிலைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை சற்றே உயர்வு நவிற்சியோடு கையாளக்கூடியவைதான் இவ்வாறான படங்கள். உள்ளத்தை அள்ளித்தா, காதலா காதலா, பஞ்ச தந்திரம் போன்ற படங்கள் இந்த வகைமையில் நெருங்கி வரக்கூடியவை. குறிப்பாக மூடர் கூடத்தின் வசனங்கள் மிகவும் தனித்துவமாக அமைந்திருந்தன. கப்புளியின் காதலன், தன்னிடம் ஆங்கிலத்தில் பேசியதற்காக செண்ட்ராயன் அவனை அடிக்கிறான். அப்போது செண்ட்ராயன் பேசும் வசனத்தை பொதுவாக ஒருவரை எழுதச்சொல்லியிருந்தால், ’தமிழ் தெரியாத ஒரு இங்கிலிஸ்காரன்கிட்ட தமிழ்ல பேசக்கூடாதுனு தெரிஞ்ச உனக்கு, இந்த முகத்தைப் பார்த்தால் இங்கிலிசு பேசுகிற மாதிரியா தெரிகிறது?’ என்று எழுதியிருக்கக்கூடும். ஆனால், இதில் ’இந்த முகத்தைப் பார்த்தால் இங்கிலிசுல பத்து மார்க்குக்கு மேல எடுக்குறவன் மாதிரியா தெரியுது?’ என்று செண்ட்ராயன் கேட்பதாக எழுதப்பட்டிருக்கிறது. இறுதிக் கட்டத்தில், ஆட்டோ குமாரை காப்பாற்ற தாதா வக்கா, பக்தவச்சலம் வீட்டுக்கு வருகிறான். பக்தவச்சலத்திடம் கடன் கொடுத்துவிட்டு அதை வசூலிக்க முடியாத ஒரு சேட்டு, தாவூத் இம்ராஹிமின் சென்னை பிராஞ்ச் இன்-சார்ஜ் சலீம் பாயை கூட்டிக்கொண்டு வருகிறான். அப்போது பக்தவச்சலத்தின் நண்பன் போலீசைக் கூட்டிக்கொண்டு வருகிறான். மூன்று குழுக்களும் ஒருவரை ஒருவர் எதிர்பார்க்கவுமில்லை. ஒருவரைப் பார்த்து ஒருவர் பயந்துகொண்டும் நிற்கிறார்கள். இன்ஸ்பெக்டர், சலீம் ஆகியோரின் கைகளில் துப்பாக்கிகள். வக்காவிடமும், அவன் ஆட்களின் கைகளிலும் அரிவாள், இரும்புக்கம்பி போன்ற ஆயுதங்களே இருக்கின்றன. ”யாரும் அசையாமல் இருந்தீங்கன்னா, நான் சுடமாட்டேன்” என்கிறார் இன்ஸ்பெக்டர். ”எல்லோரும் கூலா இருந்தா நானும் சுடமாட்டேன்” என்கிறான் சலீம். ”பிரச்சினை இல்லாத வரைக்கும் நானும் சுடமாட்டேன்” என்கிறான் வக்கா. அப்போது வக்காவின் உதவியாளன் தக்காளி, ”தல, சுடாம இருக்கிறதுக்கு நம்மகிட்டதான் துப்பாக்கியே இல்லையே?” என்று கேட்கிறான். அதற்கு, ”சுடறதுக்குதானடா துப்பாக்கி வேணும், நான் சுட மாட்டேன்னுதானடா சொன்னேன்” என்கிறான். இத்தனை ரசனையாகவும், இவ்வளவு நுணுக்கமாகவும் வசனங்கள் படம் முழுதும் வெளிப்பட்டிருந்தன. நவீன், இதற்குப் பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் ’அக்னிச்சிறகுகள்’, அவரே நடித்த ’அலாவுதீனின் அற்புதக் கேமரா’ என இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். தயாரிப்புத் தரப்புச் சிக்கல்களால், இரண்டுமே இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், 2013-ல் வெளியான இந்த மூடர் கூடத்துக்கு, 13 ஆண்டுகள் கழித்து, அதே நடிகர் பட்டாளத்தை வைத்துக்கொண்டு ’மூடர் கூடம் 2’ எனும் இன்னொரு பகுதியை எழுதி இயக்கியிருக்கிறார் நவீன். இந்த ஆண்டு அந்தப் படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவீனாக படத்தின் இயக்குநர் நவீன் நடித்திருந்தார். வெள்ளைச்சாமியாக ராஜாஜ், செண்ட்ராயனாக செண்ட்ராயன், குபேரனாக குபேரன் ஆகியோர் நடித்திருந்தனர். பக்தவச்சலம் பாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ், அவரது மனைவி மண்டோதரியாக அனுபமா, மகள் கப்புளியாக ஓவியா ஆகியோர் நடித்திருந்தார்கள். தமிழார்வம் கொண்ட சலீம் பாயாக நடித்த உதய் மகேஷ் இந்தப் படத்தில்தான் நடிகராக அறிமுகமானார். சுவாரசியமான பாத்திரங்களில் மானசா, சபீஷ் என்ற இரண்டு குழந்தைகள் நடித்திருந்தார்கள். இன்னும் ஓரிரு காட்சிகளில் வந்தாலும், சுவாரசியமான கதாபாத்திரங்கள் நிறைய இருந்தன. நடித்திருந்த அத்தனை பேரும், கதைக்கேற்ற ஒரு காமிக்கல் பாணி நடிப்பை சிறப்பாக வழங்கியிருந்தார்கள். செண்ட்ராயன்! படத்தின் ஒளிப்பதிவு டோனி சான். படத்தின் தன்மைக்கேற்ற சிறப்பான ஒளிப்பதிவு. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குமான முன்கதையும், ஒவ்வொரு விதமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்தது. போலவே, அந்தக் கதைகள் அத்தனையுமே விதம்விதமான பாடல்களால் சொல்லப்பட்டிருந்தன. படத்துக்கு இசையமைத்திருந்தவர் நடராஜன் சங்கரன். இவருக்கு இது முதல் படம். அச்சமில்லை, நீயும் பொம்மை போன்ற எடுத்தாளப்பட்ட பாடல்கள் தவிர்த்துப் பிற பாடல்களை நவீனே எழுதியிருந்தார். குபேரன் பாத்திரத்துக்கான முன்கதை, முழுமையாக 2டி அனிமேஷனில் செய்யப்பட்டிருந்தது. அதற்கான, ’ஒரு ஊருல ஒரு சின்னப்பையன்’ பாடலை எஸ்பி. சரண் பாடியிருந்தார். ஒரு முட்டாளின் கதை, ’குபேரன் முட்டாப்பயதான்’ என்று சரண் உச்சத்தில் பாடும் போது நாம் சிரித்திருக்க வேண்டும். ஆனால் நம் மனம் உருகிப்போகும். செஃபியா டோனில் உருவாக்கப்பட்டிருந்த பொம்மைக்கான முன்கதைக்காக, 1964-ல் வெளியான ’பொம்மை’ படத்தின் பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டிருந்தது. யேசுதாஸ் தமிழில் பாடிய அவரது அந்த முதல் பாடலான ’நீயும் பொம்மை’யை, சரியாக 50 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்துக்காக மீண்டும் அவரே பாடினார். வெள்ளைச்சாமியின் அப்பாவுக்கான முன்கதை, பழங்கால கறுப்பு வெள்ளை மற்றும் மிகை நடிப்பில் உருவாகியிருந்தது. வெள்ளைச்சாமின் சின்னக் காதல் கதையில் வரும் பாடலான ’கண்ணோடு கண்கள் மோத’ பாடலை ஸ்ரீநிவாஸ் பாடியிருந்தார். இன்னும் செண்ட்ராயன் முன்கதை, நவீன் முன்கதை, நாய் முன்கதை என எல்லாவற்றையுமே வித்தியாசமான பாடல்கள் தாங்கிப் பிடித்தன. பக்தவச்சலம் குடும்பம் இருக்கும் அறைக்கு, குபேரனைக் காவலுக்கு வைத்துவிட்டு, மற்ற மூவரும் சாப்பிடப் போகும்போது, குபேரனும் கூடவே வந்துவிடுகிறான். அப்போது நவீனுக்கும், குபேரனுக்கும் ஓர் உரையாடல் நடக்கிறது. ”குபேரன், அந்த சாஃப்ட்வேர்காரனிடம் செல்போன் இருக்கான்னு பார்த்தீங்களா?” ”நான் கேட்டேன் பாஸு, அவன் இல்லைனுட்டான்” ”அவன் உங்க சொந்தக்காரனா குபேரன்?” ”என்ன பாஸு, அவன் இந்திப்பட ஹீரோ மாதிரி இருக்கான். அவனைப் போயி” ”அவன் உங்க சொந்தக்காரன் இல்ல, உங்க ஃபிரண்டு இல்ல, உங்க கூட ஆபீஸ்ல வேலை பார்க்கல, எல்லாத்தையும் விட நீங்க இங்க திருட வந்திருக்கீங்க, அவனைக் கட்டிப்போட்டு வைச்சிருக்கீங்க, உங்ககிட்ட அவன் எதுக்கு உண்மையைச் சொல்லணும் குபேரன்?” குபேரன், தமது மடத்தனத்தை ஒப்புக்கொள்வது போல தலையாட்டுவான். ”சரி, அப்ப ஆக வேண்டியதைப் பாருங்க” நவீன் அப்படிச் சொன்னதும், குபேரன் சாப்பிட ஆரம்பித்துவிடுவான். கடுப்பாகும் நவீன், ”குபேரன், ஆகவேண்டிய வேலைன்னா திரும்பப் போய் அவன்கிட்ட செல்போன் இருக்கான்னு செக் பண்ணுங்கன்னு அர்த்தம்!” இப்படித்தான் இந்தப் படத்தில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் மடமைக்குள்ளேயே உழன்றுகொண்டிருக்கிறார்கள். நாமும் வாழ்க்கையில் அவ்வப்போது இப்படி எதையாவது செய்துவிடுகிறோம். இப்போது நினைத்துப் பார்த்தாலும், அதை நினைத்து வெட்கப்பட முடிகிறது. யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாதபடியான நமது முட்டாள்தனம் சார்ந்த ரகசியங்கள் நம்மிடமும் இருக்கின்றன. ஆனால், நல்லவேளையாக முழு நேரமும் நாம் அப்படிப்பட்டவர்களாக இல்லை என்பதை நினைத்து மகிழ்கிறோம். அது மிகவும் முக்கியம். அப்படியான மனநிறைவைத்தான் தருகிறது இந்த மூடர் கூடம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://cinema.vikatan.com/kollywood/a-series-on-tamil-cinema-moodarkoodam-episode-29



