கோவை பீளமேடு பா.ஜ.க அலுவலகத்தில் மாநில பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``கரூரில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நான்கு கோயில்களின் ரூ. 25 ஆயிரம் கோடி மதிப்பிலான 3,085 ஏக்கர் நிலத்தை 9-ம் தேதி மாவட்ட ஆட்சியர், இணை ஆணையரால் பரிந்துரைக்கப்பட்டு, உடனடியாகவே அவசர அவசரமாக பட்டா போட்டுக் கொடுத்திருக்கின்றனர். முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்து கோயில்களின் நிலத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்து இருக்கின்றாரா? இதற்கு உறுதுணையாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் இருக்கிறாரா? எதற்காக இந்த அவசரம்? முதல்வர் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு கொடுத்திருக்கிறார். பா.ஜ.க சார்பில் இதை வன்மையாக கண்டிக்கிறோம்." எனக் குற்றம்சாட்டியிருந்தார். நயினார் நாகேந்திரன் இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், கரூர் எம்.பி ஜோதிமணி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, ``கரூர் மாவட்டத்தில் பல பத்து ஆண்டுகளாக நிலவி வந்த மக்களின் நில உரிமைப் பிரச்னைக்குத் தமிழ்நாடு அரசு தற்போது சட்டப்பூர்வமான தீர்வை வழங்கியுள்ளது. இதன் மூலம், கடந்த காலங்களில் இந்து சமய அறநிலையத்துறையால் ‘பூஜ்ஜிய மதிப்பு’ செய்யப்பட்டு, பத்திரப்பதிவு தடுத்து வைக்கப்பட்டிருந்த 3084.95 ஏக்கர் நிலங்கள் தற்போது முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளன. அரசின் இந்த அதிரடி மற்றும் நியாயமான நடவடிக்கைக்குக் கரூர் மாவட்ட மக்கள் சார்பில் முதலமைச்சர், அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் வருவாய் துறை அமைச்சர் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள். கரூர் மாவட்டத்தில் வசிக்கும் எளிய விவசாயிகளிடமும் பொதுமக்களிடமும் 1967-ம் ஆண்டின் 'இனாம் ஒழிப்புச் சட்டத்தின்' கீழ் முறையாக வழங்கப்பட்ட ரயத்துவாரி பட்டாக்கள் உள்ளன. பல குடும்பங்களிடம் 100 முதல் 150 ஆண்டுகளுக்கும் மேலான அசல் பட்டா ஆவணங்கள் கைவசம் இருக்கின்றன. இந்த நிலங்களில் தலைமுறை தலைமுறையாக மக்கள் விவசாயம் செய்தும், வீடு கட்டி குடியிருந்தும் வருகின்றனர். இத்தகைய சூழலில், கடந்த காலங்களில் அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில், எவ்வித முறையான வருவாய் ஆவணங்களையும் சரிபார்க்காமல், தன்னிச்சையாகப் பதிவுத்துறைக்குக் கடிதம் வழங்கி மக்களின் நிலங்களைப் பதிவு செய்யத் தடை விதித்திருந்தனர். வருவாய்த்துறையின் அனுமதியின்றிச் செய்யப்பட்ட இந்தத் தவறான நடைமுறையால், கரூர் மக்கள் தங்களின் சொந்த நிலங்களை விற்கவோ, வாங்கவோ முடியாமல் கடுமையான மன உளைச்சலுக்கும் பொருளாதாரப் பாதிப்புகளுக்கும் உள்ளாகியிருந்தனர். முதல்வர் விஜய் மக்களின் இந்த நீண்ட காலத் துயரத்தைத் தீர்க்க, தற்போதைய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது. கரூரில் ஒரு சிறப்பு டி.ஆர்.ஓ மற்றும் பிரத்யேக வருவாய்க் குழு அமைக்கப்பட்டு, 1912 மற்றும் 1967-ம் ஆண்டு வரையிலான அனைத்து நில ஆவணங்களும் (Revenue Records) விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. எந்த நிலம் கோயிலுக்குச் சொந்தமானது, எந்த நிலம் மக்களுக்குச் சொந்தமானது என்று சட்டப்பூர்வமாக அலசி ஆராயப்பட்டதில், முதற்கட்டமாக இந்த 3,084.95 ஏக்கர் நிலத்தில் ஒரு சென்ட் நிலம் கூட கோயில் நிலம் அல்ல என்பதும், அவை அனைத்தும் முழுக்க முழுக்க மக்களின் பட்டா நிலங்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டு, அதற்கான தடையாணைக் கடிதங்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, `அரசு கோயில் நிலங்களை மீட்டு மக்களுக்குப் புதிய பட்டாவாகக் கொடுத்துவிட்டது. இதன் மதிப்பு 25,000 கோடி ரூபாய்' என்று பா.ஜ.க திட்டமிட்டுப் பொய்ப் பிரசாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. பாதிக்கப்பட்ட மக்கள் யாரும் கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யவில்லை. நேற்று புதிய பட்டா எதுவும் வழங்கப்படவும் இல்லை. மக்களிடம் ஏற்கனவே இருக்கும் பட்டா நிலங்களின் மீதான முறையற்ற தடையை மட்டுமே அரசு நீக்கியுள்ளது. கரூரின் மொத்த ஏற்றுமதி வர்த்தகமே 10,000 கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கும்போது, 25,000 கோடி ரூபாய் கோயில் நிலம் தாரைவார்க்கப்பட்டதாகக் கூறுவது அப்பட்டமான பொய். எளிய மக்களின் உரிமைப் போராட்டத்தை மதத்தின் பெயரால் அரசியல் ஆக்க வேண்டாம். ஜோதிமணி எம்.பி இதேபோன்று மேலும் சில இடங்களுக்கு அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், நில ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தடுத்த கட்டங்களாகத் தீர்வுகள் எட்டப்படும். கோயில் நிலங்களை யாராவது முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்திருந்தால் அதனை அறநிலையத்துறை தாராளமாக மீட்கலாம். அதற்கு முழு அதிகாரம் உள்ளது. ஆனால், மக்களின் நிலம் மக்களிடமும், கோயில் நிலம் கோயிலிடமும் இருக்க வேண்டும் என்பதே உண்மையான நீதி." என்றார். `கோயில் நிலத்தை முதல்வர் விஜய் தனக்கு வேண்டியவர்களுக்கு கொடுத்திருக்கிறார்’- குற்றம்சாட்டும் நயினார் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/mp-jothimani-has-responded-to-the-bjps-allegation-regarding-the-temple-land-issue




