கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்திற்குட்பட்ட பொய்யாமணி கிராமத்தில் அமைந்துள்ளது, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. நூற்றாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இப்பள்ளியில், 240 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளி நாள்களில்கூட விடுமுறை எடுக்கலாமா என நினைக்கும் மாணவர்களுக்கு மத்தியில், விடுமுறை நாள்களிலும் பல மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்து பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். சென்னை, பெங்களூர், கொல்கத்தா போன்ற நகரங்களில் நடைபெற்ற தற்காப்புக் கலைப் போட்டிகளில் பரிசு பெற்று வந்திருக்கிறார்கள், இந்தப் பள்ளியின் மாணவர்கள். மாவட்ட அளவிலான ஆங்கிலக் கட்டுரை எழுதுதல் போட்டியில் இப்பள்ளி தொடர்ந்து முதல் பரிசு பெற்று வருகிறது. ஒவ்வொரு முறையும் ஆண்டுவிழாவை 'மாணவர்கள் திறமைகள் தின விழா ' என வெளிப்படுத்துகிறார்கள். மாணவர்கள் பாடப்புத்தகத்தில் படிக்கும் வரலாறுகளை நேரில் சென்று பார்ப்பதற்காக வருடந்தோறும் கீழடி, தாராசுரம், தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம் போன்ற இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர். அரசுப் பள்ளி 2024 - ம் ஆண்டு HCL குழுமம் நடத்திய பள்ளி மாணவர்களுக்கானத் திறன் தேர்வில், இப்பள்ளியில் 5 -ஆம் வகுப்பு படித்த, மாணவர் ஹர்சித் தேர்ச்சி பெற்றார். இந்த மாணவரின் 6 - 12 வரையிலான உயர்தரமான பள்ளி மற்றும் கல்லூரிச் செலவை HCL குழுமம் ஏற்றுள்ளது. குளிர்சாதன வகுப்பறைகள், மின்னணு தொடுதிரை கரும்பலகைகள், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வண்ணமயமான வட்ட மேசை இருக்கைகள் என்று ஒவ்வொன்றிலும் தனித்துவம் வெளிப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கே உரிய ஆங்கிலத்தின் மீதான அச்சத்தைப் போக்கும் விதமாக "ஆங்கில கையெழுத்துப் பயிற்சி" ( Calligraphy ) வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் கராத்தே, சிலம்பம், பரதநாட்டியம், ஓவியம், கீபோர்டு போன்ற பயிற்சிகளும் தனியார் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளி பாடப்புத்தகங்களைத் தாண்டி வாசிப்பை மேம்படுத்த, வாரந்தோறும் தனியே நேரம் ஒதுக்கப்படுகிறது. 8-ம் வகுப்பு நிறைவு செய்யும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்படுவது தனிச்சிறப்பு. இந்த மாணவர்களின் உயர்கல்விக்காகத் தனியார் அறக்கட்டளை உதவியுடன், ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.5,000 வைப்புத் தொகையாகச் செலுத்தப்படுகிறது. 2017 -18 கல்வியாண்டில் இப்பள்ளி ISO தரச்சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பள்ளியின் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் அ.பூபதி கூறுகையில், "எல்லா மாணவர்களுக்கும் திறமை உள்ளது. அதைக் கண்டுபிடித்து அவர்களுக்கு உணர வைப்பதே ஆசிரியரின் பணி. பாடப் புத்தகங்களைக் கடந்து பல்துறை அறிவுபெற்றவர்களாக மாணவர்கள் இருக்க வேண்டும். கிராமத்தில் இருந்து உயர்கல்விக்காக நகரத்திற்குச் செல்லும்போது எம் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செல்ல வேண்டும். அனைத்து பள்ளிகளும் அறிவை வளர்க்கும். ஆனால் அரசுப் பள்ளி மட்டுமே ஆளுமையை வளர்க்கும். அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களும் உச்சம் தொட முடியும் என்பதை எம் மாணவர்கள் நிரூபிப்பார்கள். அரசுப் பள்ளி எதிர்காலத்தில் ஒரு மாணவர் தன் ஆசிரியரை 'இவர் என் ஆசிரியர்' என்று சொல்வதை விட, ஓர் ஆசிரியர் தன் மாணவனை 'இவன் என் மாணவன்' என்று அகம் மகிழச் சொல்வதுதான் ஆசிரியருக்குப் பெருமை. தமிழ்நாட்டில் தலைசிறந்த பள்ளியாக எம் பள்ளித் திகழ வேண்டும் என்பதும், தனித்திறமையால் உச்சம் தொடுபவர் இந்தப் பள்ளியின் மாணவராக இருக்க வேண்டும் என்பதும் எம் கனவு" என்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/poiyamani-government-schools-remarkable-achievements-in-a-century




