சென்னை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று (31.07.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழைப் பொழிவு, மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மற்றும் வேளாண் பயிர் சாகுபடி நிலை குறித்து விரிவான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பின்வரும் கருப்பொருட்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. i. அணைகளில் நீர் இருப்பு / நீர்த்தேக்க அளவு. ii. தமிழ்நாட்டில் தற்போதுவரை பெய்துள்ள தென்மேற்குப் பருவமழையின் அளவு, மழை அளவு குறைவாகப் பதிவாகியுள்ள மாவட்டங்களில் உள்ள நிலவரம். iii. நகர மற்றும் கிராமப்பகுதிகளில் குடிநீர் விநியோகம். iv. நடைபெற்றுவரும் வேளாண் பணிகள் மற்றும் குறுவை சாகுபடி நிலை, வேளாண் பயிர்களுக்கான குறுவைத் தொகுப்பு விநியோகம். V. கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்கள் கையிருப்பு. vi. குடிநீர் விநியோகம் மற்றும் பிற அத்தியாவசிய திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் செயல்பாடு. தென்மேற்குப் பருவமழைக் காலமான ஜூன் மாதம் முதல் இன்று வரை (31.07.2026) மழைப்பொழிவு இயல்பைவிடக் குறைவாகப் பெய்துள்ளது. குறிப்பாக, 20 மாவட்டங்களில் (சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, கரூர், ராணிப்பேட்டை, சேலம், தூத்துக்குடி, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருப்பூர்) 19 முதல் 59 சதவீதம்வரை இயல்பைவிடக் குறைவாகவும், செங்கல்பட்டு மற்றும் ராமநாதபுரம் ஆகிய இரு மாவட்டங்களில் 60 சதவீதத்திற்குக் குறைவாகவும் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் குடிநீர் ஆதாரத்தைப் பலப்படுத்துவது இன்றியமையாததாக உள்ளது. எனவே, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளைத் தூர்வாருதல், புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், தலைமை நீரேற்ற நிலையத்திலுள்ள நீர் உறிஞ்சு கிணறுகளை புனரமைத்தல், கூடுதல் நீர் உறிஞ்சு கிணறுகள் அமைத்தல், நீரோட்ட திசைமாற்றுக் கால்வாய் அமைத்தல், பழுதடைந்துள்ள மின்சார வடங்களை மாற்றியமைத்தல், மின்மாற்றிகளில் உள்ள பழுது நீக்கம், மின்சாரத் தடையால் நீர் உந்து குழாய்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க வால்வு மற்றும் உரிய சாதனங்களை மாற்றியமைத்தல், பழைய நீர் இறைப்பான்களைப் புதிதாக மாற்றுதல், பழுதடைந்த குழாய்களை மாற்றுதல் மற்றும் அத்தியாவசியமான இடங்களில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு அத்தியாவசியமான குடிநீரினைத் தங்குதடையின்றி வழங்க ஆணையிட்டுள்ளார். வேளாண்மை உழவர் நலத்துறையில் குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் 30.07.2026 வரை 2,85,350 ஏக்கர் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, ஒதுக்கீடு செய்யப்பட்ட 134 கோடி ரூபாயில் இதுவரை 16.93 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறுவைத் தொகுப்புத் திட்டத்தினை 15.08.2026-க்குள் வழங்கி முடித்திட திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இப்பணியினை வேளாண்மைத் துறை விரைந்து முடித்திட முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார். வறட்சியான சூழல் நிலவி வருவதால் கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்கள் வட்டார அளவில் சேமித்து வைத்திடவும் அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் பாதுகாப்பான குடிநீர் மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகளைத் துரிதமாகச் செயல்படுத்திட, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகள் வாயிலாக நீர் ஆதாரங்களை மேம்படுத்திட மற்றும் லாரிகள் மூலமாகக் குடிநீர் விநியோகம் செய்திட 330 கோடி ரூபாயும், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மீனவர் நலத்துறைக்கு 10 கோடி ரூபாயும் ஆக மொத்தம் 340 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். மாநிலத்தின் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்ட மூத்த இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் உரிய மாவட்டங்களுக்குச் சென்று கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் வாரந்தோறும் திங்கட்கிழமை, குடிநீர் விநியோகம் மற்றும் பிற அத்தியாவசியத் திட்டப் பணிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தி உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து குடிநீர் தட்டுப்பாடின்றிக் கிடைத்திடவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ஆர்.வினோத், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ.மரிய வில்சன், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மு.அ.சித்திக், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் அனு ஜார்ஜ், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை செயலாளர் முனைவர் பொ.சங்கர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் பிரசாந்த் மு.வடநெரே, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் த.ஆனந்த், பேரிடர் மேலாண்மை ஆணையர் அ.சிவஞானம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-chairs-a-comprehensive-review-meeting-on-the-monsoon-and-crop-cultivation-orders-allocation-of-340-crore




