புதுடெல்லி, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் எஸ்.ஐ.ஆர். பணி தொடர்பான சர்ச்சைகள் குறித்து விவாதிக்க 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இன்று டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளனர். ஞானேஷ் குமார் தேர்தல் ஆணையத்தில் நிலவும் உள்விவகாரங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள்(எஸ்.ஐ.ஆர்.) தொடர்பான சர்ச்சைகளை தொடர்ந்து, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், எஸ்.ஐ.ஆர். பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. காரிய கமிட்டி கூட்டம் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி எடுக்க வேண்டிய யுக்திகள் குறித்து ஆலோசிக்க கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மூத்த தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ஜெயராம் ரமேஷ் மற்றும் டி.கே.சிவகுமார், ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்- மந்திரிகள் கலந்து கொண்டனர். 5 முக்கிய கோரிக்கைகள் கூட்டத்தில் 5 முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அதாவது, வாக்காளர் பட்டியல்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த அனைத்து தரவுகளும் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட வேண்டும், பெயர் நீக்கப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வாக்காளர் பட்டியல்கள் எளிய வடிவத்தில், உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும், கடுமையான முறைகேடுகள் கண்டறியப்படும் இடங்களில் சுதந்திரமான, காலவரையறைக்கு உட்பட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும், தகவல்கள் மறைக்கப்படுவதாக யாரும் உணராத வகையில் தேர்தல் செயல்முறை வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாற்றப்பட வேண்டும் ஆகிய 5 முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ’இந்தியா' கூட்டணி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு எதிராக பெரும் அதிர்வலைகள் எழும்பி உள்ளநிலையில், இதுகுறித்து விவாதிக்க 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இன்று டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தை தி.மு.க., ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/action-against-chief-election-commissioner-india-bloc-to-hold-consultations-today-dmk-and-aam-aadmi-party-to-skip-the-meeting




