சென்னை, தமிழ்நாடு அரசே இரட்டை நிலைப்பாடு ஏன்? நெடுஞ்சாலை வழியாக கர்நாடகாவுக்கு எண்ணெய் கொண்டு செல்ல முடியும் என்றால், விவசாய நிலங்களை ஏன் சிதைக்க வேண்டும்? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- அனுமதிக்க முடியாது தமிழ்நாட்டின் உரிமையான காவிரி நீரைக் கூட திறக்க மறுக்கும் கர்நாடக அரசுக்கு, தமிழ்நாட்டின் வளமான விவசாய நிலங்களை அழித்து எண்ணெய் குழாய் அமைத்துக் கொடுக்கும் அநீதியைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழகத்தின் உரிமைகளை மதிக்காத மாநிலங்களின் தேவைகளுக்காக, தமிழ்நாட்டின் இயற்கை வளங்களையும், விவசாய வளங்களையும் பலியிடும் போக்கு இனியும் தொடர அனுமதிக்க முடியாது. நிலங்களை பாதுகாத்திட வேண்டும் தமிழ்நாடு அரசு, மாநிலத்தின் கனிம வளங்கள் கட்டுப்பாடின்றி பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதைத் தடுத்து, தமிழ்நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதே கொள்கை, அதே உறுதி, அதே பாதுகாப்பு விவசாய நிலங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். பிற மாநிலங்களுக்காகத் தமிழ்நாட்டின் கனிம வளங்களைச் சுரண்ட அனுமதிக்கக் கூடாதென்றால், பிற மாநிலங்களின் தேவைக்காக தமிழ்நாட்டின் விவசாய நிலங்களையும் அழிக்க அனுமதிக்கக் கூடாது. இதுவே சரியானது. கனிம வளங்களைப் பாதுகாக்க சட்டம் இருந்தால், விவசாய நிலங்களைப் பாதுகாக்கவும், அதைவிட வலுவான பாதுகாப்பு இருக்க வேண்டும். ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கோவை மாவட்டம் இருகூரிலிருந்து கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரை எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் முத்தூரிலிருந்து கர்நாடக எல்லை வரை நெடுஞ்சாலை ஓரமாக குழாய்கள் பதிக்கப்படுகின்றன. ஆனால், இருகூரிலிருந்து முத்தூர் வரையிலான சுமார் 70 கிலோமீட்டர் தொலைவுக்கு மட்டும் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி விளைநிலங்களைத் தோண்டி குழாய் பதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியாகும். நெடுஞ்சாலை வழியாகக் கொண்டு செல்ல முடியும் என்றால், விவசாய நிலங்களை ஏன் சிதைக்க வேண்டும்? கர்நாடகாவுக்கு எண்ணெய் கொண்டு செல்ல, தமிழனின் வயல்தான் பாதையா? நாளை எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டால், அந்த நிறுவனம் இழப்பீடு கொடுக்கலாம். ஆனால் நஞ்சான மண்ணை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா? மாசடைந்த நிலத்தடி நீரை மீட்டெடுக்க முடியுமா? பல தலைமுறைகள் உழைத்து உருவாக்கிய விளைநிலத்தை மீண்டும் உருவாக்க முடியுமா? நிலங்களை அழிக்கக் கூடாது கேரளாவுக்காக தமிழ்நாட்டின் கனிம வளங்களை எடுத்துச் செல்லக் கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. அதேபோல், கர்நாடகாவுக்காகத் தமிழ்நாட்டின் விவசாய நிலங்களையும் அழிக்கக் கூடாது என்பதும் எங்கள் உறுதியான கொள்கை. எனவே, தமிழ்நாடு அரசு கனிம வளங்களைப் பாதுகாக்க எடுத்துள்ள கொள்கையைப் போலவே, பிற மாநிலங்களின் திட்டங்களுக்காக தமிழ்நாட்டின் விவசாய நிலங்களை கையகப்படுத்தவோ, சேதப்படுத்தவோ கூடாது என்ற, தெளிவான கொள்கை முடிவை உடனடியாக அறிவிக்க வேண்டும். அரசு உத்தரவிட வேண்டும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் விவசாய நிலங்கள் வழியாக மேற்கொள்ளும் பணிகளை உடனடியாக நிறுத்தி, ஏற்கனவே பயன்படுத்தப்படும் நெடுஞ்சாலை வழித்தடத்திலேயே முழு திட்டத்தையும் மாற்ற தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-transporting-mineral-resources-yet-permission-to-destroy-agricultural-lands-velmurugan




