பென்னாகரம், கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து மட்டும் கடந்த 9 நாட்களில் தமிழகத்துக்கு காவிரியில் 4.95 டி.எம்.சி. நீர் திறக்கப்பட்டு உள்ளது. கே.ஆர்.எஸ். அணை கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி அருகே காவிரியின் குறுக்கே கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 108.95 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,551 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டு இருந்தது. கபினி அணை இதுபோல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே கபிலா ஆற்றின் குறுக்கே கபினி அணை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 2,275.56 அடியாக இருந்தது. அதாவது கடந்த 13-ந் தேதி இந்த அணையின் நீர்மட்டம் 2,282 அடியாக இருந்தது. தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து கடந்த 13-ந் தேதியில் இருந்து நேற்று வரை 9 நாட்கள் தொடர்ந்து இந்த அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. இதனால் இந்த அணையில் இருந்து மட்டும் தமிழகத்துக்கு 9 நாட்களில் 4.95 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் காவிரியில் தமிழகத்துக்கு திறக்கப்பட்டு உள்ளது. காவிரியில் நீர் திறப்பு கடந்த 9 நாட்களில் இந்த அணையின் நீர்மட்டம் 7 அடி குறைந்துள்ளது. 19.52 டி.எம்.சி. நீர் கொள்ளளவு கொண்ட இந்த அணையில் நேற்று 14.57 டி.எம்.சி. நீர் இருந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 7,184 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரத்து 940 கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டு இருந்தது. அந்த வகையில் 2 அணைகளில் இருந்தும் காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 14 ஆயிரத்து 940 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தொடரும் தடை காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக -கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்கிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (ஆக.22) காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 10,000 கன அடியாக நீர்வரத்து இருந்தது. தற்போது காவிரி ஆற்றில் வினாடிக்கு 12,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-water-inflow-in-the-cauvery-river-at-hogenakkal-2




