சென்னை, மிலாடி நபி என்பதால் விடுமுறை முடிந்து இன்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை மீண்டும் கூடியது. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சட்டசபையில் இன்று கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அப்போது பேசிய உறுப்பினர் மாரிமுத்து, திருத்துறைப்பூண்டியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, எனவே ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பொதுப் பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ரெயில்வே மேம்பாலங்கள் அமைப்பது குறித்து துறை ரீதியான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். அங்கு மட்டுமல்ல, அனைத்து மாவட்டங்களிலும் ரெயில்வே கிராசிங் உள்ள சில இடங்களில் ரெயில்வே மேம்பாலங்கள் இல்லை. எனவே, முதலில் செய்ய வேண்டிய பணிகளாக ரெயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும். பல ரெயில்வே கிராசிங் பகுதிகளில் ஒரு மணி நேரம் நிற்க வேண்டிய நிலை உள்ளது. டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களிலும் இந்த பிரச்சினை உள்ளது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல் பணியாக ரெயில்வே மேம்பாலங்கள் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டு வரப்படும். அதுபோல ரிங் ரோடு பிரச்னை உள்ளது. அதுவும் விரைவில் சரி செய்யப்படும் என்றார். தொடர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், சென்னையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ளது. எனவே, தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு வரை உயர்நிலை மேம்பாலம் அமைக்குப் பணிகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒப்புதல் பெறப்பட்டு தொடங்கவிருந்தது. ஆனால் ஆட்சி மாற்றத்த்தால் கிடப்பில் போடப்பட்டதாக கூறினார். கிடப்பில் போடப்பட்ட உயர்நிலைப் பாலப் பணியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை எட்டுவழிச் சாலையாக மாற்றும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம். மத்திய மந்திரியுடன் சந்திப்பின்போதும் இது குறித்து வலியுறுத்தியிருக்கிறோம். சென்னை-கன்னியாகுமரி வரை எட்டு வழிச் சாலையாக மாற்றுவதுதான், அடுத்த 30 வருடத்துக்கான போக்குவரத்து பிரச்சினைக்கான தீர்வாக இருக்கும். சென்னை நோக்கி வரும்போது, திருச்சி செங்கல்பட்டு வர 4 மணி நேரம் ஆகும். ஆனால், அதே செங்கல்பட்டிலிருந்து சென்னை வர 3 மணி நேரம் ஆகிறது. அதுபோலவே பெங்களூரிலிருந்து திருவள்ளுர் 3 மணி நேரம் வந்துவிடுவோம், ஆனால் திருவள்ளூரிலிருந்து சென்னைக்குள் வர 3 மணி நேரம் ஆகிறது. மகாபலிபுரத்திலிருந்தும் சென்னை வர மூன்று மணி நேரம் ஆகிறது. எனவே, சென்னையை சுற்றியுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும். இது குறித்து மத்திய அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நல்ல செய்தி அறிவிக்கப்படும். மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் நடைப்பெற்று வரும் சாலை திட்டங்களின் தொய்வு குறித்தும் தமிழ்நாட்டிற்கு தேவையான சாலை திட்டம் குறித்து மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரியிடம் நேரில் வலியுறுத்தினேன்; வரும் ஐந்து ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பீட்டிலான சாலை திட்டங்களுக்கு மத்திய அரசு தயாராக உள்ளதாகவும், மத்திய சாலை நிதி ரூ.1,000 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியின் இடர்பாடுகளால் தமிழகத்திற்கு திட்டங்கள் வரவில்லை. இடர்பாடுகளை நீக்கினால் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து ரூ.2 லட்சம் கோடி கிடைக்கும் என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/road-projects-worth-rs-2-lakh-crore-minister-adhav-arjuna-shares-details



