கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், எடமுட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி (30). விவாகரத்தான இவர், கடந்த ஜூன் 27-ம் தேதி திருச்சூர் வெளியன்னூரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எண் 108-ல் வாடகைக்கு தங்கியுள்ளார். அவர் அறை எடுக்க வந்தபோது, பாவரட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர் அவருடன் வந்துள்ளார். ஆனால், ஜோதி மட்டுமே தனியாக அறையில் தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று லாட்ஜுக்குச் சென்ற ஆட்டோ டிரைவர், "ஜோதியை போனில் தொடர்புகொண்டால் அவர் போன் எடுக்கவில்லை" என தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் அறைக் கதவைத்தட்டினர். பதில் இல்லாததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் உடனடியாக போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினர், பூட்டப்பட்டிருந்த அறை கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அறையினுள் ஜோதி குழந்தை பிரசவித்த நிலையில் சடலமாகக் கிடந்தார். தொப்புள் கொடி துண்டிக்கப்படாத நிலையில் அவர் பிரசவித்த பச்சிளம் குழந்தையும் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தது. அவர் தனியாக அறையில் தங்கியிருந்து சுயமாக பிரசவம் செய்தபோது முறையான மருத்துவ உதவி கிடைக்காததாலும், கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டதாலும் அந்தப் பெண்ணும், குழந்தையும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து ஜோதி மற்றும் பச்சிளங்குழந்தையின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. லாட்ஜில் ஜோதி தங்கியிருந்த அறை இச்சம்பவம் தொடர்பாக ஜோதியுடன் சென்ற பாவரட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரை கஸ்டடியில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆட்டோ டிரைவர் தனது வாக்குமூலத்தில், "எனக்கு ஜோதியை முன்பே நன்றாகத் தெரியும். அவர் தங்குவதற்காக மட்டுமே நான் அறை எடுத்துக்கொடுத்து உதவினேன். சில நாள்களுக்கு முன்பு தனக்கு கடுமையான வயிற்று வலி என்று ஜோதி கூறினார். அதனால் அவருக்காக நான் வெளியில் இருந்து மருந்து வாங்கி வந்து கொடுத்தேன். அதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது. நான் போன் செய்தபோது அவர் எடுக்கவில்லை. அதனால்தான் லாட்ஜுக்கு வந்து தகவல் தெரிவித்தேன்" எனக் கூறி உள்ளார். மரணம் ஆட்டோ ஓட்டுநர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினாலும், போலீஸார் அதை முழுமையாக நம்பவில்லை. பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது ஆட்டோ ஓட்டுநருக்குத் தெரியுமா எனவும், வயிற்று வலி என்று பெண் கூறியபோதும், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் ஆட்டோ ஓட்டுநர் ஏன் மருந்து மட்டும் வாங்கிக் கொடுத்தார் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். அந்தப் பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததை விடுதி ஊழியர்கள் கவனிக்கவில்லையா என்பது போன்ற சந்தேகமும் போலீஸாருக்கு எழுந்துள்ளது. கணவரை பிரிந்து வாழ்ந்த ஜோதி அடிக்கடி அறை எடுத்து தங்குவது வழக்கம் என்று லாட்ஜ் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகு இந்த மரணம் குறித்து கூடுதல் தகவல் வெளியாகும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/crime/kerala-tragedy-mother-and-infant-found-dead-in-lodge




