Vollständiger Artikel
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் கடந்த 18ம் தேதி அங்குள்ள லோஹாகட் மலைக்கோட்டையில் ரியஸ் எஸ்டேட் உரிமையாளர் கேதன் அகர்வால் என்பவரை அவரது வருங்கால மனைவி ஷியா கோயலும், அவரது காதலன் சேதன் செளதரியும் சேர்ந்து மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி விட்டு கொலை செய்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இக்கொலை தொடர்பாக ஷியா கோயல் மற்றும் அவரது காதலன் சேதன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஷியாவுக்கும், கேதனுக்கும் நவம்பர் மாதம் ராஜஸ்தானில் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் அதற்குள் இப்படுகொலை நடந்துள்ளது. ஏறக்குறைய 10 நாட்களுக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட ஷியா கோயல் மற்றும் சேதன் சவுத்ரி இருவரும் நேற்று கொலை நடந்த மலை உச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு இருவரும் சேர்ந்து கொலையை எப்படி செய்தனர் என்பது குறித்து செய்து காட்டினர். இது குறித்து புனே கிராமப்புற போலீஸ் சூப்பிரண்டு சந்தீப் சிங் கில் கூறுகையில், ``குற்றத்தை மறுகட்டமைப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் லோஹாகட் கோட்டைக்கு, குறிப்பாக சம்பவம் நடந்த இடத்திற்கு, காட்சியை மீண்டும் உருவாக்குவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நிகழ்வுகளின் முழு வரிசையும் புனரமைக்கப்பட்டு வருகிறது. நடந்த பாதை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் நின்ற இடம் மற்றும் மலை உச்சியில் இருந்து தள்ளிவிட்ட விதம் குறித்து இருவரும் செய்து காட்டினர்''என்றார். சம்பவம் நடந்த இடத்திற்கு இரண்டு பேரும் தனித்தனியாக அழைத்து செல்லப்பட்டனர். கேதன் அகர்வால் எப்படி, எங்கிருந்து தள்ளப்பட்டார் என்பது குறித்து குற்றம் சாட்டப்பட்டவரின் கூற்றுக்களை சரிபார்க்க மறுகட்டமைப்பு உதவும் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேரும் லோஹாகட் மலை பகுதியில் என்னென்ன காரியங்களை எப்படியெல்லாம் செய்தனர் என்பதை இருவரும் செய்து காட்டியதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கேதன் அகர்வாலை எப்படி மலையிலிருந்து தள்ளிவிட்டார்கள், அந்தச் செயலுக்கு முன் ஷியா கோயல் கொடுத்ததாகக் கூறப்படும் சமிக்ஞை மற்றும் கோட்டையில் சேதன் சௌத்ரி தம்பதியினரை எப்படிப் பின்தொடர்ந்தார் என்பதைப் புரிந்துகொள்வதற்காக இது போன்ற ஒரு ஒத்திகை நடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த ஒத்திகைக்காக லோஹாகட் கோட்டை நேற்று சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஷியாவின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரனிடமும் போலீஸார் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். போலீஸாரின் விசாரணையில், சேதனும் ஷியாவும் கொலைக்கான ஒத்திகைக்காக கொலை செய்வதற்கு முன்பு அங்கு சென்று ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். அதோடு இக்கொலை தொடர்பாக பிடிபட்டால் போலீஸாரின் கேள்விகளுக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்று இருவரும் ஒத்திகை பார்த்துள்ளனர். அதோடு கொலை செய்வதற்கான வழிகளை கூகுள் மூலம் தேடி இருக்கின்றனர். இருவரும் மாறுவேடம் போட்டு இக்கொலையை செய்யவும் திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் தடயங்களை முற்றிலும் அழிப்பதற்காக குற்றத்திற்கு முன்னும் பின்னும் ஷியாவும் சேத்தனும் தங்களின் தொலைபேசி சாட்டிங் வரலாறு மற்றும் சர்ச் ஹிஸ்டரி முழுமையாக அழித்து இருந்தனர். அவ்வாறு நீக்கப்பட்ட சாட்டிங் பதிவுகளை மீட்டெடுக்க அவர்களின் மொபைல்கள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே மூன்று முறை முயற்சி செய்து நான்காவது முறையாக ஷியா தனது வருங்கால கணவனை கொலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständiger Artikel — Link unten




