சென்னை, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் தனியாரிடம் மின் கணக்கீட்டுப் பணியை ஒப்படைப்பதா என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக, வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- மின் கணக்கீட்டாளர் பணி தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் மின் கணக்கீட்டாளர் பணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 7,565 பணியிடங்களில் வெறும் 3,063 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்; மீதமுள்ள 4,502 பணியிடங்கள் காலியாகக் கிடக்கின்றன என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பணியாளர் பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டி, வரும் அக்டோபர் மாதம் முதல் 6 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் மூலம் மின் மீட்டர் கணக்கீட்டுப் பணியை மேற்கொள்ள TNPDCL நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மின் கணக்கீட்டுப் பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என்றால், காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை முறைப்படி ஏன் நிரப்பக் கூடாது? வேலைவாய்ப்பு பணி இருக்கிறது, காலிப் பணியிடங்கள் இருக்கின்றன, அப்பணிக்கான தகுதியுடைய லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். அவ்வாறிருக்க, படித்த இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலைவாய்ப்பை வழங்காமல், அப்பணியைத் தனியார் ஒப்பந்த நிறுவனங்களிடம் தாரைவார்க்க வேண்டிய அவசியம் என்ன? தனியார் நிறுவனங்கள் மூலம் நியமிக்கப்பட உள்ள மின் கணக்கீட்டாளர்களுக்குப் பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு (Degree / Diploma) தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே தகுதியுடைய தமிழ்நாட்டு இளைஞர்களைத் தேர்வு செய்து, அரசுப் பணியிடங்களில் நிரந்தரமாக நியமிப்பதற்கு என்ன தடை உள்ளது? மின்துறை வெள்ளை அறிக்கை குறிப்பாக, தமிழக அரசின் மின்துறை வெள்ளை அறிக்கையிலேயே TNPDCL நிறுவனத்தில் 53,575 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், களப்பணியாளர் (Multi Purpose Field Assistant - Assessor உட்பட) பணிகளுக்கு 12,500 பேரை ஆட்சேர்ப்பு செய்ய முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக அரசே ஒப்புக்கொள்ளும் நிலையில், மறுபுறம் பணியாளர் பற்றாக்குறையைக் காரணம் காட்டி தனியாரிடம் பணியை ஒப்படைப்பது எவ்வகையில் நியாயம்? இது வெறும் மின் மீட்டர் கணக்கீடு தொடர்பான நிர்வாக முடிவு மட்டுமல்ல. தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உரிய அரசு வேலைவாய்ப்பை உறுதி செய்வதா? அல்லது அரசு செய்ய வேண்டிய பணிகளைத் தொடர்ந்து தனியார் ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைப்பதா? என்ற அடிப்படைக் கொள்கை சார்ந்த கேள்வி. மேலும், தவறான மீட்டர் வாசிப்பு மற்றும் கூடுதல் மின்கட்டணம் போன்ற புகார்கள் தொடர்ச்சியாக எழும் சூழலில், ஒப்பந்தப் பணியாளர்களைக் கொண்டு துல்லியமான கணக்கீட்டையும் நம்பகமான சேவையையும் எவ்வாறு உறுதி செய்ய முடியும்? வலியுறுத்தல் எனவே, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் தனியார் ஒப்பந்த முறையைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை தமிழக அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும். தனியார்மயமாக்கும் முடிவைக் கைவிட்டு, மின் கணக்கீட்டாளர் உள்ளிட்ட அனைத்துக் காலிப் பணியிடங்களுக்கும் முறையான நிரந்தர ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்வாதாரத்தை ஒப்பந்த நிறுவனங்களின் கைகளில் அடகு வைக்காமல், அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை முறையாக நிரப்பி, தகுதியுடைய இளைஞர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்கிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/fill-the-vacant-posts-in-the-electricity-board-abandon-the-private-contracting-system-velmurugan




