காத்மாண்டு, நேபாளத்தில் 'போடே கோஷி' (Bhote Koshi) ஆற்று வெள்ளம் தொடர்பான பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 626-ஐ எட்டியுள்ளது. அதேவேளையில், 2,426 பேர் காணாமல் போயுள்ளதாக தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் (NDRRMA) தெரிவித்துள்ளது. பனிச்சரிவு நேபாளத்தின் போடேகோஷி நதியில் கடந்த 26-ந்தேதி காலையில் ஏற்பட்ட பெருவெள்ளம் அந்த நாட்டின் சீன எல்லையை ஒட்டிய பிராந்தியம் முழுவதையும் சீர்குலைத்தது. போடேகோஷியின் கிளை நதியான லெண்டேயின் நீரோட்டத்தை பனிச்சரிவு ஒன்று தடுத்ததால் உருவான ஏரி உடைந்து இந்த காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வெள்ளம் மட்டுமின்றி பாறைகள், மண், சேறு என பெரும் பிரளயமே அங்கு ஏற்பட்டது. சுனாமி அலைகளையே மிஞ்சும் அளவுக்கு ஏற்பட்ட பெருவெள்ளம் கண் இமைக்கும் நேரத்தில் நீர்மின் நிலையங்கள், பாலங்கள், சாலைகள், செல்போன் கோபுரங்கள், வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் என அனைத்தையும் வாரிச்சுருட்டி சென்றது. சேறு குவியல் சீனாவை ஒட்டியுள்ள நேபாளத்தின் 8 மாவட்டங்களை புரட்டிப்போட்ட இந்த பேரிடர், ரசுவா, நுவாகோட், தடிங் ஆகிய 3 மாவட்டங்களை முழுமையாக உருக்குலைத்து இருக்கிறது. சேறும், சகதியுமாக காட்சியளிக்கும் இந்த பிராந்தியம் முழுவதும் பார்ப்போரை பதறவைக்கிறது. இமயமலையில் இருந்து அடித்து வரப்பட்ட கற்கள், மண், சேறு, சகதி அனைத்தும் பல அடி உயரத்துக்கு நிறைந்து இருக்கிறது. 4-வது நாளாக மீட்புப்பணி ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ள நிலையில், அவர்களில் பலரும் உயிரிழந்திருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த பேரிடரில் தற்போது வரை 626 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேபாளம், சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மீட்புக்குழுவினர் அவர்களின் உடல்களை மீட்டு இருந்தனர். இந்த மீட்புப்பணிகள் இன்று 4-வது நாளாக தொடர்ந்தது. இதில் அடுத்தடுத்து உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. 8 மாவட்டங்களில் இருந்து அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாக நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்து உள்ளது. பின்னர் அவை தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து உடல்கள் அனுப்பப்படுவதால் மருத்துவமனைகளின் பிணவறைகள் நிரம்பி வழிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு நடவடிக்கைகள் நிறுத்தம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திரிசூலி ஆற்றுப்பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக மீட்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.கனமழையால் திரிசூலி ஆற்றில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. இதனால் ஆபத்தை தவிர்க்கும் வகையில் ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை 114 இந்தியர்கள் மீட்பு இந்நிலையில் நேபாளம் பெருவெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை 114 இந்தியர்கள் உட்பட 187 பேர் மீட்கப்பட்டதாக நேபாள சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், 2,426 பேரின் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. மீண்டும் வெள்ள எச்சரிக்கை இதற்கிடையே வெள்ளப்பெருக்கில் சிக்கிய நேபாளத்துக்கு மற்றொரு பேரிடியாக, மீண்டும் பெருவெள்ள அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பாதிப்பை ஏற்படுத்திய போடேகோஷி நதியின் ஒரு பகுதியாக இருக்கும் சோச்சென் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆறுகள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகில் புதிய ஏரி உருவாகி இருப்பது கண்டறியப்பட்டது. இந்த ஏரி விரைவில் 50 லட்சம் கன மீட்டர் நீர்மட்டத்தை தொடும் எனவும், அது எந்த நேரத்திலும் உடைந்து மற்றொரு பேரிடரை உருவாக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் சீனா நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்தது. அந்த ஏரியில் சேற்றுடன் கலந்த நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவது நேற்று உறுதி செய்யப்பட்டது. இது அந்த பிராந்தியத்தில் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து அந்த பிராந்தியம் முழுவதும் கடும் உஷார்நிலை பிறப்பிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் வசித்து வரும் மக்கள் நேற்று வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். அதேநேரம் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினருக்கும் இந்த எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால், மீட்புப்பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. மீட்புப்பணிகளை மிகுந்த எச்சரிக்கையுடன் செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/nepal-flash-floods-toll-climbs-to-626-more-than-2400-still-missing-over-15000-join-rescue-ops



