சென்னை, தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் மற்றும் கைத்தறித் துறையின் சார்பில் சென்னை ஹவுஸ் கதர் அங்காடியில் நடைபெற்ற அண்ணல் காந்தியடிகளின் 158-வது பிறந்தநாள் விழாவில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறையின் அரசு செயலாளர் ஆர்.லில்லி, தீபாவளி சிறப்பு கதர் விற்பனை மற்றும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் மேம்படுத்தப்பட்ட வணிக இணையதளத்தை தொடங்கி வைத்து, திறன் மிகு நெசவாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தேசப்பிதா அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை கதர் தொழிலுக்கு மகுடம் சூட்டும் நாளாகவும், கதர் சிறப்பு விற்பனை தொடக்க விழாவாகவும் ஆண்டுதோறும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் சிறப்பாக கொண்டாடி வருகிறது. மேலும், கதர் உற்பத்தித் தொழிலினை தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கச் செய்ய வேண்டும் என்பதால் கதர், பாலியஸ்டர் மற்றும் பட்டு உற்பத்தி இரகங்களுக்கு அரசால் 30 விழுக்காடு விற்பனைத் தள்ளுபடி ஆண்டு முழுவதும் அனுமதிக்கப்படுகிறது. இதனால் விற்பனை அதிகரித்து, அதற்கு ஈடாக உற்பத்தி அதிகரித்து, நூற்பாளர் மற்றும் நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர், அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நன்னாளான இன்று (02.10.2026) கதர் கிராமப் பொருட்களை மாணவ மாணவிகள், இளைஞர்கள், ஆசிரியர் பெருமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வாங்கி பயன்பெற வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். அண்ணல் காந்தியடிகளின் 158-வது பிறந்த நாள் விழா, தீபாவளி சிறப்பு கதர் விற்பனை தொடக்க விழா, காதி வாரிய நெசவாளர்கள் மற்றும் கைத்தறித் துறையின் திறன்மிகு நெசவாளர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகியவை இன்று சென்னை ஹவுஸ் கதர் அங்காடியில் நடைபெற்றன. இவ்விழாக்களில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறையின் அரசு செயலாளர் திருமதி ஆர். லில்லி, இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு, அண்ணல் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், தீபாவளி சிறப்பு கதர் விற்பனை மற்றும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் மேம்படுத்தப்பட்ட வணிக இணையதளத்தை ( தொடங்கி வைத்து, சிறந்த கதர் நூற்பாளர், சிறந்த கதர் நெசவாளர் மற்றும் சிறந்த பட்டு நெசவாளர் ஆகிய 3 கைவினைஞர்களுக்கு, சிறப்பாகவும், நேர்த்தியாகவும் அதிகளவிலும் கதர் உற்பத்திப் பணியை செய்தமைக்காக ஊக்கப் பரிசாக தலா ரூ.25,000/-க்கான 3 காசோலைகள் மற்றும் பாராட்டு கேடயங்கள் வழங்கியும், புதிய கதர் கிராமத் தொழில் பொருட்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியும் மற்றும் கைத்தறித் துறையின் 60 திறன்மிகு நெசவாளர்களுக்கு 2025-26 ஆண்டுக்கான முதல் பரிசு ரூ.25,000/-, இரண்டாம் பரிசு ரூ.15,000/- மற்றும் மூன்றாம் பரிசு ரூ.10,000/- குரிய விருதுகள் வழங்கியும் விழாவை சிறப்பித்தார்கள். இவ்விழாவில், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் முனைவர் சீ. சுரேஷ்குமார், கைத்தறித் துறை இயக்குநர் பி.உமாமகேஸ்வரி, அரசு உயர் அலுவலர்கள், கதர் வாரியப் பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/new-impetus-for-khadi-sales-enhanced-website-launched



