திருப்போரூர். ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் லஞ்சம் வாங்கியது தொடர்பாக த.வெ.க. ஊராட்சி தலைவர் கைது செய்யப்பட்டார். அவர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். சாலைப்பணிகள் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் மாம்பாக்கம் ஊராட்சி தலைவராக த.வெ.க.வை சேர்ந்த வீராசாமி உள்ளார். மேலும் அந்த கட்சியின் கிழக்கு மாவட்ட இணைச்செயலாளராகவும் உள்ளார். மாம்பாக்கம் ஊராட்சியில் சாலைப்பணிகளை மேற்கொண்ட ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர் நவீன் பணிகளை முடித்தும் அதற்கான தொகை அவருக்கு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தொகையை விடுவிக்க நவீன் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமியை அணுகினார். லஞ்சம் அவரிடம் வீராசாமி ஒரு குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக கேட்டுள்ளார். இதையடுத்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கொடுக்க ஒப்புக்கொண்ட நவீன் 2 முறை தனித்தனியாக ரூ.50 ஆயிரத்தை ஊராட்சிமன்ற தலைவருக்கு யு.பி.ஐ. செயலி மூலம் அனுப்பி உள்ளார். அதன்பிறகு மேலும் ரூ.30 ஆயிரத்தை ஊராட்சி மன்ற தலைவரின் தனி அலுவலகத்துக்கு சென்று நவீன் வழங்கியுள்ளார். அதை வாங்கிய ஊராட்சிமன்ற தலைவர் வீராசாமி அங்கு இருந்த பெண் ஒருவரிடம் கொடுக்கிறார். பிறகு உனது பில் பாஸ் ஆகிவிடும் என்று ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி நவீனிடம் சொல்கிறார். வீடியோ வெளியாகி பரபரப்பு இவை அனைத்தையும் காண்டிராக்டர் நவீன் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ விவகாரம் குறித்து ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- நவீனை எனக்கு நன்றாக தெரியும். கடனாக வாங்கிய பணத்தை தான் எனக்கு திருப்பி கொடுத்தார். லஞ்சம் வாங்குகிறவர்கள் யாராவது தன்னுடைய சொந்த கணக்கில் ஜி.பே. மூலம் வாங்க மாட்டார்கள். ஆபீசுக்கு வரவழைத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி வாங்கி இருந்தால் வெளியில் யார்கிட்டயாவது கொடுக்க சொல்லி வாங்கி இருக்கலாம். முதல்-அமைச்சர் விஜய் மற்றும் த.வெ.க.வுக்கு அவப்பெயரை ஏற்படுத்த அவதூறு பரப்பி வருகின்றனர். என் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் சிலர் பின்னால் இருந்து செயல்படுகிறார்கள். வழக்கில் வெற்றி பெற்று தலைவராக மீண்டும் பதவி ஏற்பதற்கு முன்பே டெண்டர் விடப்பட்டு இந்த பணிகள் நடைபெற்றுள்ளது. நான்தான் அவரை என்னுடைய அலுவலகத்துக்கு வர சொன்னேன். இவ்வாறு அவர் கூறினார். மீண்டும் ஊராட்சி தலைவராக மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி மீது கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஊராட்சி வார்டு உறுப்பினர்களால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று அப்போதைய மாவட்ட கலெக்டர், வீராசாமியை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து வீராசாமி சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் மாவட்ட கலெக்டரின் உத்தரவுக்கு தடை வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த மே மாதம் 18-ந்தேதி திருப்போரூர் த.வெ.க. எம்.எல்.ஏ. விஜயராஜ் முன்னிலையில் வீராசாமி மீண்டும் ஊராட்சி தலைவராக பொறுப்பேற்று கொண்டது குறிப்பிடத்தக்கது. கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம் இந்த நிலையில் த.வெ.க. செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் தினகரன் என்ற தீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- த.வெ.க.வுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச்செயலாளராக பதவி வகித்து வந்த வீரா என்ற வீராசாமி கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் பொறுப்புகளிலில் இருந்து நீக்கப்படுகிறார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கைது ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் லஞ்சம் வாங்கியது தொடர்பாக ஒப்பந்ததாரர் நவீன் தாழம்பூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீராசாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-panchayat-president-arrested-for-accepting-a-bribe-of-rs-130-lakh-removed-from-party-posts




