சென்னை, தமிழகம் முழுவதும் நாளைய தினம் (22.08.2026) அனைத்து மாவட்டங்களிலும் வலிமையான கண்டனம் முழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- இடதுசாரிகள் குறிவைப்பு இடதுசாரி மாணவர் இயக்கங்களைக் குறிவைத்ததன் மூலம் தலைமை செயலாளரின் சித்தாந்த சாய்மானம் அம்பலப்பட்டு நிற்கிறது. அரசு எந்திரத்தை அவரது நோக்கத்திற்காக தவறாக பயன்படுத்தும் எல்லைக்கு அவர் சென்றிருக்கிறார். நியாயமான நிர்வாகத்தை இனிமேலும் அவரிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. கடிதத்தின் 'பொருள்' இடதுசாரி இயக்கங்கள் குறித்து இருந்தாலும், உள்ளடக்கத்தில், மாணவர்களின் போராட்ட உரிமைகளையே அடக்கி ஒடுக்கும் எதேச்சதிகார மனோபாவமே அதில் பிரதிபலிக்கிறது. இது மிக ஆபத்தானது. மத்திய அரசின் பாணியை அடியொற்றி எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே கருத வேண்டியிருக்கிறது. இது முதல்-அமைச்சரின் அனுமதியுடன் நடந்ததா என்கிற கேள்வி எழுகிறது. கல்லூரி கல்வி இயக்குனர் தம் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றிருக்கலாம். ஆனால், சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தின் முடிவும், அதனை அறிவுறுத்தி தமிழக அரசின் சிறப்பு செயலாளர் அனுப்பிய கடிதமும் நீடிக்கின்றன. உயர் கல்வித் துறை செயலாளர், கல்லூரி கல்வி இயக்ககம் தவிர, மற்ற இயக்ககங்களோ, பல்கலைக்கழகங்களோ இந்த சுற்றறிக்கையை அனுப்பவில்லை என்று பத்திரிக்கைக்குக் கூறியிருப்பதாக தகவல் உள்ளது. ஆனால், தமிழக அரசின் சிறப்பு செயலாளரின் கடிதம், கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டு, சென்னை பல்கலைக்கழக பதிவாளர் மூலம் அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அவையும் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை. 'டாப் பிரையாரிட்டி, மோஸ்ட் இம்மீடியட்' என்ற வார்த்தைகளுடன் நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரம் குறித்த அறிக்கை (action taken report) கோரப்பட்டுள்ளதானது, எவ்வளவு தீவிரத் தன்மையுடன் திட்டமிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. எனவே, கல்லூரி கல்வி இயக்ககம் மட்டுமே தவறு செய்தது என்பது உண்மையல்ல. எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை. விளக்கம் வேண்டும் இப்பிரச்சனை சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டபோது, உயர்கல்வித்துறை அமைச்சர் அளித்த விளக்கமானது முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியதாகும். கல்வி வளாக அமைதி மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்குவதில் தான் இருக்கிறதா என அவர் விளக்க வேண்டும். சில வார்த்தைகள் தவறாக வந்துவிட்டன என்கிறார். மொத்த உள்ளடக்கமே மோசமானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது. குஜிலியம்பாறை வட்டாட்சியர் பிரச்சனையிலும் சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர், நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டார். ஆனால், மாவட்ட ஆட்சியரின் குறிப்பு, பயிற்சி முடிந்து விட்டதால் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தில் பணியில் சேர்வதற்காக சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் விடுவிக்கப்பட்டதாகக் கூறுகிறது. பயிற்சி முடிந்த பின் விடுவிக்கப்பட்டு, வேறு பணியில் சேர்வதற்கு பெயர், தவெக ஆட்சியில், நடவடிக்கையா? நாளை கண்டன ஆர்ப்பாட்டம் அடுத்தடுத்து இடதுசாரிகள் குறிவைக்கப்படுவதைத் தற்செயலானது என எடுத்துக் கொள்ள முடியாது. * தமிழக முதல்வரும் அரசும் தம் நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும். * தலைமைச் செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் என்ற முறையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். * குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நாளைய தினம் (22.08.2026) தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வலிமையான கண்டனம் முழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுக்கிறது. அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-secretary-unfit-to-continue-in-office-marxist-party-to-stage-protest-tomorrow




