இன்று நகரமயமாக்கல் விஸ்வரூமெடுத்து அங்கு அதிக மக்கள் வசித்து வந்தாலும், பெரும்பாலான மக்கள் இன்னும் கிராமங்களில்தான் வாழ்கின்றனர். ஒவ்வொரு கிராமத்திற்கும் தனித்துவமான வரலாறும், கலாசாரமும் உள்ளது. கஹ்மர் கிராம் நகரம் என்றால் லட்சக்கணக்கிலோ, கோடிகளை தொடும் வகையிலோ மக்கள் வசிப்பார்கள். ஆனால் கிராமம் என்றால் மக்கள் தொகை ஆயிரங்களுக்குள் அடங்கிவிடும். லட்சத்தை தொடுவது அரிது. இதற்கு விதிவிலக்கான கிராமங்களும் உள்ளன. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் காசிப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கஹ்மர் கிராமத்தில் மக்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து விட்டது என்றால் நம்பமுடிகிறதா? ஆம்! ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்த கிராமம். மக்கள் தொகையால் மட்டும் பிரபலமாகவில்லை. இந்திய ராணுவத்துடனான நீண்டகால தொடர்பு காரணமாகவும் கவனம் ஈர்த்துள்ளது. இந்த கிராமம் மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்டதாக இருந்தாலும், பாரம்பரிய கிராம வாழ்க்கை முறையை இன்றும் பாதுகாத்து வருகிறது. விவசாயமே இங்குள்ள மக்களின் முக்கிய தொழிலாக இருக்கிறது. இந்திய ராணுவத்தில் பணி கஹ்மரை இந்தியாவின் மற்ற கிராமங்களில் இருந்து வேறுபடுத்துவது. ராணுவ சேவையில் அதன் பங்களிப்புதான். இந்த கிராமத்தை சேர்ந்த சுமார் 12 ஆயிரம் பேர் இந்திய ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டோ, பணிபுரிந்தோ இருக்கிறார்கள். பல குடும்பங்களில் தாத்தா, தந்தை, மகன் என தலைமுறை தலைமுறையாக ராணுவத்தில் சேரும் பாரம்பரியம் தொடர்ந்து வருகிறது. 1965 மற்றும் 1971-ம் ஆண்டுகளில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போர்கள், கார்கில் போர் உள்ளிட்ட பல முக்கிய ராணுவ நடவடிக்கைகளில் இந்த கிராமத்தை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். கல்வெட்டு இந்திய சுதந்திரத்திற்கு முன்பே இரண்டாம் உலகப் போரின்போது கூட கஹ்மர் கிராமத்தை சேர்ந்த சிலர் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றி உள்ளனர். அவர்களின் சேவையை நினைவுகூரும் கல்வெட்டும் இந்த கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கஹ்மர் கிராமத்தில் அமைந்துள்ள காமாக்யா தேவி கோவில் கிழக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநில மக்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது. திருவிழாக்கள், பாரம்பரிய நிகழ்ச்சிகள் மற்றும் மதச்சடங்குகள் இன்றும் கிராம மக்களின் வாழ்க்கையில் முக்கிய இடம் வகிக்கின்றன. கங்கை நதிக்கரை காசிப்பூர் நகரத்திலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில், கங்கை நதிக்கரையில் கஹ்மர் அமைந்துள்ளது. வளமான விவசாய நிலங்கள், அமைதியான இயற்கை சூழல், தூய்மையான காற்று ஆகியவை இந்த கிராமத்தின் சிறப்புகளாகும். நகர வாழ்க்கையின் பரபரப்பை விட அமைதியான வாழ்க்கையை விரும்புபவர்களுக்கு ஏற்ற பூமியாகவும் விளங்குகிறது. பாரம்பரியத்தை பாதுகாத்து வரும் கஹ்மர் கிராமம், நவீன வளர்ச்சியையும் ஏற்றுக்கொண்டுள்ளது. கல்வி, சாலை வசதிகள், உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்படுகின்றன. ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களும் அதற்கான பயிற்சிகளை ஆர்வமுடன் மேற்கொள்கிறார்கள். மக்கள் தொகையில் இந்தியாவின் மிகப்பெரிய கிராமமாக மட்டுமல்லாமல், தேசப்பற்று, ராணுவ சேவை, பாரம்பரியம் மற்றும் இயற்கை வாழ்க்கை ஆகிய அனைத்தையும் தன்னுள் தாங்கி நிற்கும் கிராமமாக கஹ்மர் விளங்குகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/a-village-with-a-population-of-millions-kahmar-which-produced-thousands-of-soldiers




