நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே, நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் மேக்கேதாட்டு அணை விவகாரங்களை மையமாக வைத்து, அவைக்கு உள்ளேயும் வெளியேயும் அனல் பறந்தது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மறுபுறம் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி செல்ல முயன்ற மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது டெல்லி காவல்துறை தடியடி நடத்தியதால் தலைநகர் போர்க்களமாகக் காட்சியளித்தது. பேரணி நடத்தும் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' இளைஞர்கள் நாடாளுமன்றத்தில் நடந்ததென்ன? இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியதும், வழக்கமான நடைமுறைகள் தொடங்கின. மக்களவையில் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது, மாநிலங்களவையில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர். ஆனால், இந்த அமைதி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. கர்நாடக அரசின் மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் பச்சைத் துண்டு அணிந்து அவைக்கு வந்திருந்தனர். கேள்வி நேரம் தொடங்கியதும், நீட் முறைகேடுகள் மற்றும் மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் அவையின் மையப்பகுதிக்கு வர முயன்றதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா, அவையின் மாண்பைக் காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இருப்பினும், அமளி தொடர்ந்ததால் மக்களவை மற்றும் மாநிலங்களவை முதலில் மதியம் 12 மணி வரையிலும், பின்னர் 12:30 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றம் இதற்கிடையே, நீட் தேர்வு முறைகேட்டால் உயிரிழந்த மாணவர்களுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்காததைக் குறிப்பிட்டுப் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், "அஞ்சலி செலுத்துவதில் கூட இந்த அரசு பாகுபாடு காட்டுகிறது" என ஆவேசமாக குற்றம் சாட்டினார். அவரது கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்திலேயே நீட் தேர்வுக்கு எதிராகப் பேரணி நடத்தினர். முன்னதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க பங்கேற்காததும் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்தது. போர்க்களமான டெல்லி வீதிகள் நாடாளுமன்றத்திற்கு உள்ளே எதிர்க்கட்சிகள் குரலெழுப்ப, வெளியே மாணவர்கள் மற்றும் சி.ஜே.பி அமைப்பினரின் போராட்டம் தீவிரமடைந்தது. ஜந்தர் மந்தர் மற்றும் பட்டேல் சௌக் மெட்ரோ நிலையம் அருகே திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறை, கூட்டம் கலையாததால் தடியடி நடத்தியது. இதனால் அப்பகுதியே ரணகளமானது. சி.ஜே.பி அமைப்பினரின் போராட்டம் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மத்திய டெல்லியின் முக்கிய பகுதிகளில் இணையச் சேவைகள் அதிகாரப்பூர்வமாகத் துண்டிக்கப்பட்டன. தடையை மீறி, டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவர்கள் பேரிகேடுகளைத் தாண்டிக் குதித்துப் போராட்டக் களத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு மேலும் அதிகரித்தது. அவர்களைத் தடுத்த போலீசாருடன் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தடியடி மற்றும் கைது நடவடிக்கைகளுக்குப் பிறகு, நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வீதி மற்றும் மந்திரா மார்க் காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பேச்சுவார்த்தைக்கு இறங்கிய அரசு? நிலைமை கைமீறிச் செல்வதை உணர்ந்த மத்திய அரசு, பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளது. புதுடெல்லி காவல்துறை துணை ஆணையர் சச்சின் சர்மா நடத்திய முதற்கட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, சி.ஜே.பி அமைப்பின் குழுவினர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்தே அடுத்தகட்ட நகர்வுகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மறுபுறம் போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி முன்னேறி வருகிறனர். இதனால் சில இடங்கள் கூட்டத்தை கலைக்க கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசப்பட்டன. மேலும் நாடாளுமன்ற கதவுகளும் மூடப்பட்டது. தடை மீறி போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழையும் பட்சத்தில் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படலாம் என்கிற அச்சமும் அங்கு நிலவுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிகளுடன் சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களும் தீயணைப்பு வானங்களுடன் வீரர்களும் நாடாளுமன்ற வளாகத்தில் தயார் நிலையில் உள்ளார்கள். சி.ஜே.பி அமைப்பினரின் போராட்டம் இந்த உச்சக்கட்ட அமளி மற்றும் போராட்டங்களுக்கு மத்தியிலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-லிருந்து 38 ஆக உயர்த்தும் புதிய மசோதாவைச் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் தாக்கல் செய்தார். தலைநகர் முழுவதும் பல்லாயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு, டெல்லி உச்சக்கட்ட பதற்றத்தில் உறைந்துள்ளது. முதல் நாளே தொடங்கிய இந்த மோதல் போக்கு, மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் நீடிக்குமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/capital-hit-by-neet-mekedatu-cjp-chaos




