சுதந்திரம் அடைந்த பிறகு அனைத்து துறைகளிலும் வேகமாக முன்னேற்றம் கண்ட இந்தியா, விண்வெளித்துறையில் மட்டும் தன்னுடைய சிறகை மெதுவாக விரிக்கத் தொடங்கியது. 1969-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்டிரின் ஆகியோர் 'அப்பல்லோ-11' ராக்கெட் மூலம் நிலவில் கால்பதித்தபோது உலகமே கொண்டாடியது. “ஒரு மனிதனுக்கு இது சிறிய எட்டு, ஆனால் மனிதகுலத்துக்கு மிகப்பெரிய பாய்ச்சல்" என்று வர்ணிக்கப்பட்ட இந்த வரலாற்று சாதனையை இந்தியா எப்போது படைக்கும்? என்ற ஏக்கம் அப்போது நமது நாட்டு மக்களிடம் இருந்தது. அதற்கு முன்பே, திருவனந்தபுரம் தும்பா தளத்திலிருந்து முதன் முதலாக ஒரு ராக்கெட்டை சைக்கிளில் எடுத்து சென்று வான்வெளிக்கு அனுப்பி இந்தியா சாதனை வரலாறு படைத்திருந்தது. இந்திய விண்வெளி வீரர் நிலவில் கால் பதிக்கும் கனவுக்கு இன்னும் உறுதியான விடை கிடைக்காவிட்டாலும், சமீபகாலமாக இஸ்ரோ நிறுவனம் செயற்கைக்கோள்களை ஏவுதல், சந்திராயன் போன்ற திட்டங்கள் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் அசுர வேகம் எடுத்துள்ளது. இந்தநிலையில், விண்வெளித் துறையில் இஸ்ரோவுடன், தனியாரையும் அனுமதிக்கும் சிறப்புமிக்க உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி 2020-ம் ஆண்டு பிறப்பித்தார். 2023-ம் ஆண்டு அதிகாரப்பூர்வ விண்வெளிக் கொள்கை அறிவிக்கப்பட்டு, தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க 'இன்-ஸ்பேஸ்' என்ற தன்னாட்சி ஒற்றைச் சாளர அமைப்பு தொடங்கப்பட்டது. தற்போது இதில் 4,500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிந்து, 133 அங்கீகாரங்களும், 106 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரோவின் முன்னாள் என்ஜினீயர்களான பவன்குமார் சந்தானா, நாகபாரத் டாக்கா ஆகியோரால் 2018-ல் தொடங்கப்பட்ட ஐதராபாத்தின் 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனம், 2022-ல் 'விக்ரம்-எஸ்' என்ற ராக்கெட்டை கூட்டுச்சோதனை முறையில் வெற்றிகரமாக ஏவியது. அதனைத்தொடர்ந்து, கடந்த 18-ந்தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து 'மிஷன் ஆகமம்' என்ற பெயரில் 'விக்ரம்-1' ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 18 நிமிடங்களில், 450 கி.மீ. தொலைவிலுள்ள புவித்தாழ் வட்டப்பாதையை இந்த ராக்கெட் அடைந்தது. விண்வெளியில் மிதக்கும் அதில், விண்வெளி கழிவுகளை அகற்றும் திறன் கொண்டவை உள்பட 2 செயற்கைக்கோள்களும், பிரதமரின் வாழ்த்து அட்டைகளும் அனுப்பப்பட்டன. இதுகுறித்து பவன்குமார் சந்தானா கூறும்போது. 'இந்த ராக்கெட் முழுக்க முழுக்க 100 சதவீதம் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்டு, இந்தியர்களால் உருவாக்கப்பட்டது என்ற பெருமையை பெற்றுள்ளது. இது இந்தியாவுக்கும், உலகநாடுகளுக்கும் பயனளிக்கும். இதனை உருவாக்கிய 1,000 இந்தியர்களின் சராசரி வயது 28 என்றார். இதுவரை அமெரிக்கா மற்றும் சீனா மட்டுமே விண்வெளிக்கு தனியார் ராக்கெட்டுகளை அனுப்பியிருந்த நிலையில், இந்தியா தற்போது 3-வது நாடாக இந்த மைல் கல்லை எட்டி உலகையே வியக்க வைத்துள்ளது. இது தனியார் பங்களிப்பில் முன்னோக்கிய ஒரு சிறிய அடி என்றாலும், எதிர்கால வெற்றிக்கான மாபெரும் பாய்ச்சலாகும். இதுவரை இந்தியா தனது 115 செயற்கைக்கோள்கள் மற்றும் 34 வெளிநாடுகளின் 433 செயற்கைக்கோள்கள் உள்பட மொத்தம் 548 செயற்கைக்கோள்களை விண்ணில் வெற்றிகரமாக ஏவியுள்ளது. தற்போது இஸ்ரோவுடன் ஸ்கைரூட் நிறுவனமும், பல தனியார் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் கைகோர்த்துள்ளதால் விண்வெளித்துறையில் இந்தியா மிக விரைவில் உலக அரங்கில் ஒரு தனிமுத்திரையை பதிப்பது நிச்சயம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/others/thalayangam/the-first-private-rocket-floating-in-space




